டாக்கா: வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமருமான பேகம் கலிதா ஜியா(80) பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் 30ம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் டிசம்பர் 31ம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது கலிதா ஜியாவின் மூத்த மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானிடம், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்.
அதில், இந்தியா, வங்கதேச உறவுகளுக்கு பேகம் கலிதா ஜியா ஆற்றிய பங்களிப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வங்கதேச தேசியவாத கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் பதிவில், “பேகம் கலிதா ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தமைக்கும், ஜியாவின் ஆட்சியில் இந்தியா, வங்கதேச உறவுகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்தமைக்கும் பாராட்டுகள், நன்றிகள். இந்தியா, வங்கதேச உறவுகளில் ஜியா ஆற்றிய பங்களிப்பு தொடர்ந்து நினைவு கூரப்படும்” என தெரிவித்துள்ளது.
