பருவம் தவறி பெய்யும் கோடை மழையால் சுரண்டையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

* அறுவடை செய்த நெல்லுக்கு விலையும் இல்லை

* விவசாயிகள் கண்ணீர்

சுரண்டை : பருவம் தவறி பெய்யும் கோடைமழையால் சுரண்டையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. அதோடு மட்டுமல்லாமல் அறுவடை செய்த நெல்லுக்கு போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்து விவசாயிகள் நெல் பயிரிட்டு தை மாதத்தில் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக பொங்கல் கொண்டாடப்படும். ஆனால் சமீப காலமாக வடகிழக்கு பருவமழை சரியான நேரத்திற்கு பெய்யாததால் மார்கழி மாதத்தில் பெய்த மழையால் விவசாயிகள் கால தாமதமாக நெல் பயிரிட்டனர்.

இதனால் தை மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய விவசாயிகள் தற்போது மாசி, பங்குனி மாதத்தில் அறுவடையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம், திருமலாபுரம், கம்பனேரி, புதுக்குடி, வலங்கை புலி சமுத்திரம் ஆகிய பகுதியில் கடந்த 4 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரத்தில் ஆங்காங்கே பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீரில் வடிக்கின்றனர். இந்தக் கோடை மழையால் 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின.

ஏற்கனவே கடந்த ஆண்டை விட நெல்லுக்கு விலை குறைந்த நிலையில், தற்போது விளைய வைத்த நெல்லையும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். வீட்டிலிருந்த கொஞ்சம் நஞ்சம் நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்தோம்.

ஆனால் இந்த மழையால் நாங்கள் கடனாளியாகி விட்டதே மிச்சம் என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நெற்பயிர்கள் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பருவம் தவறி பெய்யும் கோடை மழையால் சுரண்டையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது appeared first on Dinakaran.

Related Stories: