சட்டப்பேரவை கூட்டம் ஒருநாள் முன்னதாக முடிகிறது

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தற்போது, இதில் மாற்றம் செய்து, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 29ம் தேதியுடன் (செவ்வாய்) சட்டப்பேரவை கூட்டம் முடிவடையும் என்ற நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 29ம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். பின்னர் அன்றைய தினமே பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல், நிதித்துறை மற்றும் அரசின் சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட அரசினர் அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்றைய தினமே சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

அரசு விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. திங்கட்கிழமை (7ம் தேதி) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி விவாதத்துக்கு பதில் அளிப்பார்.

The post சட்டப்பேரவை கூட்டம் ஒருநாள் முன்னதாக முடிகிறது appeared first on Dinakaran.

Related Stories: