திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சத்துணவு முட்டை கேட்ட மாணவனை தாக்கிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மதிய உணவின்போது மாணவர்களுக்கு சாதத்துடன் முட்டை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாணவன் ஒருவன் சமையலறை சென்று பார்த்தபோது முட்டை இருந்துள்ளது. முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் இல்லை என கூறுகிறீர்கள் என்று மாணவன் கேள்வி எழுப்பியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் “ஏன் சமையலறை சென்று பார்த்தாய்” எனக் கூறி மாணவனை வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த துடைப்பத்தால் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனை தொடர்ந்து முட்டை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பிய மாணவரை தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாளை சஸ்பெண்ட் செய்தும் 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கல்வி அலுவலர் சாமி முத்தழகன் உத்தரவிட்டார்.
The post திருவண்ணாமலை அருகே சத்துணவு முட்டை கேட்ட மாணவனை தாக்கிய இருவர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.