ஒன்பதாம் பாவம் சந்தோஷம், பாக்கியம், மகிழ்ச்சி என்றால், அதன் 12 ஆம் பாவமான 8ம் பாவம் சந்தோஷத்தைக் குலைத்து துக்கத்தையும் கண்டத்தையும் தரும். இந்த அஷ்டம பாவத்தில் வேறு சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், பொதுப்படையாக அஷ்டம பாவத்தை கஷ்டமான பாவம் என்றுதான் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது.
இப்பொழுது ஒன்றாம் பாவம், ஒரு சிசுவின் உதயத்தைக் (பிறப்பை) காட்டுகிறது. ஒரு குழந்தை எப்பொழுது பிறந்ததோ, அந்த நேரத்தில் ஏற்படுவதுதான் உதய லக்கினம்.
அதுதான் ஒன்றாம் பாவம். ஜாதகக் கட்டத்தில் எந்த ராசியில் குழந்தையின் உதயம் (பிறப்பு) ஏற்பட்டதோ அந்த இடத்தை லக்னம் (ல) என்று போட்டிருப்பார்கள். அந்த லக்னம்தான் அந்தக் குழந்தையின் ஜாதகத்தை, ஆத்ம பலத்தை, மற்ற பாவங்களால் அந்தக் குழந்தை அனுபவிக்க வேண்டியதை எடுத்துக் காட்டுகின்றது. லக்ன தொடர்பு இல்லாத பாவங்களின் செய்கைகளால் லக்னம் பாதிப் படையாது. எட்டாம் இடம் ஒரு ஜாதகருக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் இடம் என்றாலும், அது லக்ன பாவத்தோடு தொடர்பில்லாமல் இருந்தால், அந்தக் கஷ்டத்தை, அந்த ஜாதகர் அனுபவிக்க மாட்டார். ஆனால் கஷ்டம் இருக்கும். அப்படியும் சில ஜாதகங்களைப் பார்க்கிறோம் அல்லவா.
குடும்பத்தில் ஏராளமான கஷ்டங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பார்.
அப்படி ஒரு அமைப்பும். (don’t care master) ஜாதகத்தில் இருக்கிறது.
இப்பொழுது லக்கின பாவம்தான் பிறப்பைக் குறிக்கிறது என்று சொன்னால், அந்த ஜனனத்தை அதாவது பிறப்பை எதிர்ப்பது லக்னத்தின் 12-ஆம் பாவம் அல்லவா. பிறப்பை எதிர்ப்பது என்று சொன்னால், பிறவா நிலையைக் கொடுப்பது என்று தானே பொருள். பிறவா நிலை என்பது மோட்சம் தானே. அதனால்தான் 12-ஆம் பாவத்தை மோட்ச பாவம் என்று சொன்னார்கள். மற்ற பாவங்களில் செய்யும் செயல்களின் விளைவுகள், 12 ஆம் பாவத்தில்தான் தொகுக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில், இன்னொரு விஷயத்தை சாஸ்திரம் கற்ற ஒரு பெரியவர் ஒருமுறை அடியேனிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன செய்தி எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
இப்பொழுது எல்லோரும் ஜோதிடத்தைப் பார்த்துக் கொண்டு, கஷ்டங்கள் வருகின்ற பொழுது, என்ன பிராயச்சித்தம் செய்வது, எந்தக் கோயிலுக்குப் போவது, எதைச் செய்தால் கஷ்டங்கள் போகும் என்றெல்லாம் நினைக்கிறார்கள்.
ஒன்றிரண்டு சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தாலும், பல பிராயச்சித்தங்கள் அவரவர்கள் வாய்க்கு வந்தபடிதான் சொல்கிறார்கள். சிலருடைய நல்ல காலம் அந்த பிராயச் சித்தங்கள் பலித்தும் விடுவதால், அதுதான் சரியான பிராயச்சித்தம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? பெரிய மகான்களின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த பிறகு மற்றவர்களுக்கு வருகின்ற எல்லா கஷ்டங்களும் அவர்களுக்கும் வந்திருக்கும். குடும்பம் சரியாக அமைந்திருக்காது.
பிள்ளைகளால் தொல்லை வந்திருக்கும். ஏன் ரமண மகரிஷி போன்றவர்களுக்கு புற்றுநோய் போன்ற தொல்லைகளும் வந்தனவே… ஆனால், அவர்கள் அதை எல்லாம் தங்கள் தவ வலிமையால் நீக்கிக் கொள்ளாமல், அல்லது பிராயச்சித்தத்தால் நீக்கிக் கொள்ளாமல் ஏன் அனுபவித்தார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். பிராயச் சித்தத்தால் அதைப் போக்கிக் கொண்டிருந்தால், கொடுக்க வேண்டிய கடன் (dept) அப்படியே இருக்கும். அதனால் அதை அனுபவிப்பதற்கு மறுபடியும் ஒரு ஜன்மம் எடுக்க வேண்டும். அதனால் மகரிஷிகள் என்ன வந்ததோ அதை அனுபவித்துத் தீர்த்துவிட்டார்கள். அப்படி அனுபவித்துத் தீர்த்துவிட்டால், அந்த விஷயம் தீர்ந்துவிட்டது, பாக்கி இல்லை என்று பொருள்.
நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அனுபவித்துத் தீர்த்துவிட்டால், அதன் பிறகு அதனுடைய விளைவுகள் ஒருவருக்குச் சேராது.
விளைவுகள் சேராத போது, பிறவிக்கு வழி இல்லை. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். ஒருவருடைய ஜன்ம ஜாதகத்தில், ஒருவருடைய வாழ்க்கையில் மற்ற பாவங்கள் எப்படி இயங்குகின்றதோ, அதை ஒட்டிய விளைவுகள்தான் அங்கு போய் நிற்கும். 9ம் பாவத்தால்வந்த அதிர்ஷ்டத்தை, பதவியை, பணத்தை, பூர்விகச் சொத்தை ஒருவன் தவறாகப் பயன்படுத்தினால், அந்தப் பாவம் (sin) 12ம் பாவத்தில் போய் உட்காரும். எனவே, ஜன்ம ஜாதகத்தில் ஒருவருடைய 12 ஆம் பாவத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து, அவருக்கு மோட்சம் உண்டா இல்லையா என்பதைச் சொல்லிவிட முடியாது. சரி, இப்பொழுது ஒரு கேள்வி. 12ஆம் பாவத்தில் கேது அமர்ந்தால், மறுபிறவி இல்லை என்று பல ஜோதிட நூல்களில் போட்டு இரு க்கிறார்களே?
இதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. கேது என்பவர் ஞானகாரகன். ஞானத்தைக் கொடுப்பவர். ஒருவன் ஞானத்தை பெற்று விட்டாலே, அவன் நன்மை தீமைகளை எந்த பதட்டமும் இல்லாமல் அனுபவிப்பான். அது அவனை ஒட்டாது. எதற்காக இவைகளெல்லாம் ஏற்பட்டன என்பதை அவன் அறிவான். அதனால் அவனுக்கு யாரிடத்திலும் பகை இருக்காது கோபம் இருக்காது.
அடுத்து வைராக்கியத்தைத் தரக்கூடியவர் கேது. வைராக்கியம் இருந்தால்தான் ஆசை என்பது அகலும். ஆசை அகன்றால்தான் மோகமும் வேகமும் தீரும். இவை இரண்டும் தீர்ந்த பிறகு செயலின் விளைவு நின்று போய்விடும். வினைகளின் விளைவு நின்று போய்விட்டால், பிறவி என்னும் சங்கிலி அறுந்துவிடும். ஒருவருக்கு இந்த வைராக்கியம்வந்துவிட்டால், பனிரண்டாம் பாவத்தில் கேது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மோட்சம் கிடைத்துவிடும்.
The post மோட்சமா? மறுபிறப்பா? appeared first on Dinakaran.