சபரியின் சேவைக்கு கிடைத்த ராமரின் சேவை

ஒரு உன்னதமான குருவிற்கு செய்யக்கூடிய உன்னதமான சேவை ஸ்ரீராம தரிசன சேவையை கொண்டு வந்து தந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டு சபரியின் சரிதம். ஸ்ரீமத் ராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில்தான் இந்த சபரியின் சரிதம் வருகிறது. சபரிக்கென்று ஊரோ, உறவோ எதுவும் இல்லாமல் காட்டுவாசிப் பெண்ணாக வசித்துவந்தாள் சபரி. காட்டில் இருந்த விலங்குகளையே தனக்கு துணையாகவும், உணவாகவும் கொண்டு மனிதவாசம் என்பதே எப்படி இருக்கும் என்பதுகூட அறியாமல் இருந்து வந்தாள் சபரி.

எங்கே போக வேண்டும், எப்படி போக வேண்டும், என்றுமே எதற்காகவுமே திட்டமிடாமல் வாழ்ந்து வந்தவள். ஒரு நாள் கால் போன போக்கில் பம்பா நதி தீரத்தின் அருகில் தானாகவே வந்து சேர்ந்தாள்.

அங்கே மதங்கரிஷி, தம் சீடர்களுடன் நடந்து செல்வதை பார்த்தாள். ஒரு குருவின் தரிசனம் என்பது நமக்கு கிடைத்தாலோ அல்லது ஒரு குருவின் அருட் பார்வை என்பது நம் மீது பட்டுவிட்டாலோ நமக்குள் நல்ல எண்ணங்கள் என்பது தானாகவே வந்துவிடும்தானே?

“குரு பிரம்மா…’’ குருவே பிரம்மாவாக இருந்து, நமக்குள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறார்.“குரு விஷ்ணு’’ என்று அந்த குருவே அப்படி தோன்றிய நல்லெண்ணங்களை காக்கும் கடவுளான விஷ்ணுவை போல் இருந்து, அந்த எண்ணங்களை காப்பாற்றுகிறார். “குரு தேவோ மஹேஷ்வர:’’ என்று நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களையும், கெட்ட குணங்களையும் அழிப்பதில் குருவே சிவனாக இருக்கிறார் அல்லவா? அப்படி அந்த மதங்க முனிவரின் தரிசனம் கிடைத்ததுமே சபரிக்குள் நல்லெண்ணங்கள் என்பது தானாகவே தோன்ற ஆரம்பித்தது. இனி யாரையும் புண்படுத்தாமல், துன்புறுத்தாமல் இருப்போம். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த சேவைகளை செய்வோம், என இப்படி அடுக்கடுக்கடுக்கான நல்லெண்ணங்கள் என்பது சபரிக்கு தோன்ற ஆரம்பித்தது.

அடுத்த நாள் அதிகாலை எழுந்திருந்து மதங்க முனிவரும் அவரது சீடர்களும் நீராட போகும் வேளையிலே, சபரி அவர்களின் ஆஸ்ரமத்தை சுத்தம் செய்து கோலம் போட்டு அந்த ஆஸ்ரமத்தை அழகு படுத்துவதிலும் தூய்மைப் படுத்துவதிலும் தானாகவே ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டாள். அந்த முனிவர்கள் எல்லாம் நீராடிவிட்டு வருவதற்கு முன்பே அவர்கள் பூஜை செய்வதற்கு தேவையான பூக்களையும் பழங்களையும் பறித்து வைக்கும் வேலையையும் ஒரு கைங்கர்யமாக, எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல், செவ்வனே செய்ய ஆரம்பித்தாள் சபரி. இப்படியே பல நாட்கள் ஓடிப்போனது.

ஒரு நாள் மதங்க முனிவர் தம் சீடர்களிடம், “ஒரு சில நாட்களாக நம்முடைய ஆஸ்ரமத்தில் நான் ஒரு நல்ல மாற்றத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம் ஆஸ்ரமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யாரோ சுத்தமாக பெருக்கி அழகாய் கோலங்கள் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், வாசனையான பூக்களையும், சுவையான பழங்களையும்கூட யாரோ தினமும் எடுத்து வைத்திருக்கிறாரே! அது யாரென்று தெரியவில்லையே?” என்று கேட்க, யாருமே பதில் சொல்லவில்லை.

அடுத்த நாள் அதிகாலை, மதங்க முனிவர் நீராட கிளம்பிவிட, அவரது சீடர் ஒருவர் அந்த ஆஸ்ரமத்தின் அருகிலிருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு பார்க்க, சபரி எப்போதும் போல ஆஸ்ரமத்தின் வெளியே சுத்தம் செய்வதை பார்த்துவிட்டார். உடனே அவளிடம் வந்து “யாரம்மா நீ? உன் பெயர் என்ன? எதற்காக இந்த கைங்கர்யங்கள் எல்லாம் செய்கிறாய்?” என்று கேட்க, அதுவரை மனிதர்களிடம் பேசிப் பழகாத சபரி, செய்கையாலேயே தெரியாமல் செய்துவிட்டேன்.

இனி, அதோ அந்த காட்டு பகுதிக்கே சென்று விடுகிறேன் என்று காட்ட, அதற்கு அந்த சீடரோ “கவலைப்படவோ, அச்சப்படவோ அவசியமே இல்லையம்மா. நீ செய்திருக்கும் இந்த கைங்கர்யத்தால், ரொம்ப மகிழ்ந்து போய் இருக்கிறார், எங்கள் குரு. அதனால் அவரிடம் உன்னை அழைத்து செல்லப் போகிறேன்’’ என்று சொல்லி, மதங்க முனிவரிடம் கொண்டு போய் சபரியை நிறுத்த, அம்முனிவரின் காலில் விழுந்து வணங்கியவளை பார்த்து, மதங்க முனிவர், “நீ எதற்காக இந்த கைங்கரங்கள் எல்லாம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றுகூற அதற்கு சபரி, “குருநாதா, இது ஒரு ஜடம்.

இதற்கு எது நல்லது, எது கெட்டது என்றே தெரியாது. என்னை இந்த இடத்தைவிட்டு அனுப்பாமல் இருக்கும் உபகாரத்தை, அனுகிரகத்தை நீங்கள் செய்ய வேண்டும்” என வேண்டி நிற்க, உடனே மதங்க முனிவரோ, “இனி நீ இந்த ஆஸ்ரமத்திலேயே இருந்து உன் கைங்கர்யங்களை தொடர்ந்து செய்யம்மா” என்று ஆசி வழங்க, சந்தோஷப்பட்டுவிட்டாள் சபரி. சந்தோஷமாக எப்போதும் போல தம் வேலைகளை செய்துவந்தாள் சபரி.

மதங்க முனிவரின் இறுதி காலம் என்பது வந்தது. ஒரு நாள் அவர் தம் சீடர்கள் அனைவரையும் அழைத்து, “இன்று நான் பிரம்ம லோகம் போக போகிறேன். என்னுடைய தவத்தின் பயனை இங்கேயே செலவிட்டுவிட்டு, புண்யங்களையும் பாவங்களையும் தொலைத்த ஆத்மாவாக போகப்போகிறேன். யார் யாருக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள்ளுங்கள்” என்றுகூற, ஒவ்வொருவரும் தனம், அஷ்டமா சித்திகள், பதவி என்று கேட்டு கொண்டார்கள். கடைசியாக சபரியை அழைத்து, உனக்கு என்ன வேண்டும்?

என கேட்க, “குருவே எனக்கு எது நல்லது எது வேண்டும் என்பதைகூட கேட்க தெரியாத நிலையில் இருப்பவள் நான். நீரே எனக்கு எது நல்லது என்று நினைக்கிறீரோ அதை அருளுங்கள் குருவே” என்று சொல்ல, மனமகிழ்ந்து போன மதங்க முனிவர், “ராமநாமத்தை தொடர்ந்து ஜபித்துக் கொண்டே இரு… இதோ இந்த ராமநாமம் என்னும் மிகப் பெரிய தனத்தை உனக்கு அளிக்கிறேன்’’ என்று அவளை அழைத்து ராம நாமத்தை சொல்ல சொன்னார்.

“குருவே இந்த ராம நாமத்திற்கான அர்த்தம் என்ன? இதை எப்போது சொல்ல வேண்டும்?’’ என்று சபரி கேட்க, அதற்கு மதங்க முனிவரோ, “நீ எப்படி வேண்டுமானலும் சொல்லலாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். இடைவிடாமல் சொன்னால் போதும். நீ எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, வேலை செய்யும் போதெல்லாம்கூட ராம நாமத்தை சொல்லிக்கொண்டே.. வேலைகளை பார். ராமநாம அர்த்தம், ராம நாம ஜபத்தின் மகிமை என்ன தெரியுமா? சபரி வீடு எங்கே இருக்கிறது என்று, அந்த ராமரே உன் வீட்டை தேடி வந்து உனக்கு காட்சி தருவார். இது சத்தியம் என்றுகூறி, மதங்க முனிவர் பிரம்ம லோகத்திற்கு சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து ராம நாமத்தை இடைவிடாமல் உச்சரித்து கொண்டே இருந்தாள் சபரி. ஒரு நாள் ராமர் வருவார், அதனால் ஆஸ்ரமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ராமர் வந்தால் இதெல்லாம் அவரிடம் பேச வேண்டும். அவர் சுவைக்க சுவையான பழங்களை கொடுக்க வேண்டும். என தன் வாயில் ராமநாமத்தையும், தன் வாயிலில் ராமரின் வரவிற்கான ஏற்பாட்டையும் செய்துவிட்டு, சபரி காத்துக் கொண்டிருந்தாள். இப்படியாக பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. சபரிக்கு மூப்பு வந்துவிட்டது.

ஒரு நாள், அவளது குரு கற்றுக்கொடுத்த ராம நாமத்தின் பலனாக ராமர் அவளது இருப்பிடம் தேடி நிஜமாகவே வந்தேவிட்டார். கோதண்ட பாணியார் லட்சுமணரோடு சீதையை தேடி கொண்டு போகும் வழியில், சபரியை பார்க்க வந்துவிட்டார் ராமர். சபரியின் ஆஸ்ரமத்திற்கு வந்தவரின் பாதங்களைப் பிடித்துவிடும் பாக்கியத்தையும், அவள் பிடித்துக் கொண்ட ராம நாமமே அவளுக்குப் பெற்று தந்தது.

“உன்னுடைய தவம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறதா? தவம் சித்தியாகிவிட்டதா?’’ என ராமர் கேட்க, “சித்தியாகிவிட்டது பிரபோ. இந்த நொடியில் சித்தியாகிவிட்டது” என்று கூறிக் கொண்டே விதவிதமான பழங்களை ராமர் முன் கூடை கூடையாகக் கொண்டு வந்து வைத்து, “ராமா இதை சாப்பிடுப்பா… அதை சாப்பிடுப்பா..’’ என்று ஆசை ஆசையாக சொன்ன சபரியை வியப்புடன் பார்த்த ராமர், “பாட்டி இந்த பழங்கள் எல்லாம் உங்கள் தோட்டத்தில் விளைந்ததா?” என்று ராமர் கேட்க, “இல்லப்பா ராமா… இதெல்லாம் பம்பா நதி தீரத்தில் விளைந்தது. உனக்கு கொடுப்பதற்காக நான் எடுத்துக் கொண்டு வந்தேன்.’’ என்று சபரிகூற, அது வரை யாரிடமுமே கையையே நீட்டாத ராமர், அவளின் பக்தியில் மயங்கி தன் கையை நீட்டி பழங்களை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்.

“ராமா நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு கண்களை மூடிக்கொண்டு ஏதோ தபஸ்வினி போல உட்கார்ந்து மனம் முழுக்க ராம நாமம் மணக்க, தன்னையே ஒரு பஸ்மமாக்கி ராமரும், லட்சுமணரும் பார்த்து கொண்டே இருக்க, நேராக பிரம்மலோகத்திற்கே சென்று, தன் குருவான மதங்க முனிவரின் திருவடியை அடைந்துவிட்டாள், சபரி. சபரி, “மோட்ச சாக்ஷி பூதன்’’ என்றே ராமரை கொண்டாடுவோம். ஆக, குரு பக்தியும், ராம நாம ஜபமும் நம் அனைவருக்குமே ராம தரிசனத்தையும், மோட்ச பிராப்தியையும் நிச்சயம் தரும் என்ற நம்பிக்கையோடு ராமநாமத்தை இப்போதும் எப்போதும் தொடர்ந்து சொல்ல ஆரம்பிப்போம்.

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

The post சபரியின் சேவைக்கு கிடைத்த ராமரின் சேவை appeared first on Dinakaran.

Related Stories: