பகுதி 2
சிவ தாண்டவமும் பிரம்ம சாரிணீ துர்கையும்
நவராத்திரி நாட்கள் தேவிக்கு விசேஷம் என்பதை நாம் அறிவோம். ஆனால், ஈசன் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் விதவிதமான நடனம் புரிகிறார் என்பது பலரும் அறியாத ரகசியம் ஆகும். நவராத்திரியின் இரண்டாவது நாளில், வலக்காலை ஊன்றி இடக்காலை தூக்கி இறைவன் திரிபுர சம்ஹார தாண்டவம் ஆடுகிறார். அப்படி ஆடும்போது தனது இடது கால் பெருவிரலால், அஷ்ட வகை யந்திரத்தை தரையில் வரைகிறார். அப்படி இறைவன், வரைந்த அஷ்ட வகை யந்திரத்தில் இருந்து உதித்தவளே பிரம்ம சாரிணீ துர்கை என்று சிவ ஆகமங்கள் சொல்கிறது. திரிபுரத்தை இறைவன் எரித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மொத்தத்தில், ஈசன் திரிபுர சம்ஹார தாண்டவம் ஆடும் போது தோன்றியவள் இந்த தேவி என்று சொன்னால் அது மிகையல்ல.
பரம்பொருளின் ஜியேஷ்டா சக்தியும் பிரம்மசாரிணீ துர்கையும்
யஜூர் வேதத்தில், ஈசனின் சக்திகளை பட்டியலிடும் ஒரு ரிக்கு வருகிறது. “வாம தேவாய நமோ…’’ என்று தொடங்கும் அந்த ரிக்கு, ஈசனின் ஒன்பது சக்திகள் என்னென்ன என்பதை சொல்கிறது. வேதங்கள் கூறும், ஈசனின் இந்த ஒன்பது சக்திகளே, நவதுர்கைகள் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில், நவ துர்கையில் இரண்டாம் துர்கையான பிரம்ம சாரிணீ துர்கை, ஈசனின் “ஜியேஷ்டா’’ என்ற சக்தியின் வடிவம். இந்த “ஜியேஷ்டா’’ என்ற சக்தி, ஜல தத்துவத்தை குறிக்கிறாள். நீரின்றி அமையாது உலகு என்று சொல்வதற்கு ஏற்ப, இந்த உலகம் முழுவதையும் நீரின் வடிவில் வியாபித்து உலக நாடகத்தை நடத்தும் ஈசனின் சக்தி இந்த “பிரம்ம சாரிணீ துர்கை’’ என்று சொன்னால் அது மிகையல்ல.
பிரம்ம சாரிணீ துர்கையும் குண்டலினி யோகமும்
நமது, முதுகுத் தண்டின் அடிப்பகுதியில், முக்கோண வடிவில் இருக்கும் ஒரு குழியில் குண்டலினி என்னும் சக்தி இருக்கிறது. இந்த சக்தி ஒரு பாம்பின் வடிவில் இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. ஒரு பாம்பின் வடிவில் இருக்கும் இந்த சக்தி, மூன்று சுற்றாக சுற்றிக் கொண்டு, தனது வாலை தானே கடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு யோக சாதகன், தனது யோக பயிற்சியின் மூலமாகவும், சாதனைகளின் மூலமாகவும், படுத்துக்கிடக்கும், இந்த சக்தியை எழுப்பி, தலை உச்சியில் இருக்கும் சஹஸ்ராரம் என்ற சூட்சும யோக சக்கரத்திற்கு கொண்டு வந்து அங்கே இறைவனோடு கலந்து இன்புற்று இருக்கிறான். இந்த சாதனைக்கு பெயர் குண்டலினி யோகம்.
இப்படி அரும் பெரும் சக்தியின் பெட்டகமாக இருக்கும், குண்டலினி, சுருண்டு இருக்கும் இடம்தான் மூலாதாரம் என்று அழைக்கப் படுகிறது. இது ஒரு சூட்சும யோக சக்கரத்தின் வடிவில் முதுகுத்தண்டின் கீழே இருக்கிறது.ஒரு சாதகன் செய்யும் வாசி யோகத்தால், அதாவது மூச்சுப்பயிற்சியால், மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி மெல்ல எழுந்து, சுவாதிஷ்டான சக்கரத்தை அடைகிறது.
இந்த சுவாதிஷ்டான சக்கரம் நீர் தத்துவம் கொண்டது. இந்த சுவாதிஷ்டான சக்கரத்திற்கு அதி தேவதையாக விளங்குவது, இந்த பிரம்மசாரிணீ துர்கை. ஆகவே தன்னை வழிபடும் சாதகனுக்கு, எளிதில் குண்டலினி யோகத்தில் சித்தி அளிக்கிறாள் இவள். இன்றும் பல சித்தர் பெருமக்கள், குண்டலினி சித்தி அடைய இவளை, சுவாதிஷ்டான சக்கரத்தில் வைத்து தியானித்து பூஜிக்கிறார்கள்.
நவ கிரகங்களும் பிரம்மசாரிணீ துர்கையும்
நவகிரகங்களில் முக்கியமானவர் குரு பகவான். கிரகங்களில் இவர் மிகவும் வலுவானவர். சக்திவாய்ந்தவர். குரு பார்த்தால் கோடி நன்மை என்று ஒரு கூற்று உண்டு. பாவ கிரகங்களை குரு பார்த்தால், நமக்கு தீமை செய்யும், பாவ கிரகங்கள்கூட நன்மை செய்யும் கிரகமாக மாறிவிடும் என்று சொல்லுவார்கள். ஜாதகத்தில் குரு நீச்சமாக இருந்தாலோ, அல்லது குருவால் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவர்கள் இந்த பிரம்மசாரிணீ துர்கையை வணங்கினால் எளிதில் நலம் பெறலாம். இந்த தேவியை பூஜித்தால், வியாழ பகவான், அகம் மகிழ்ந்து, ஞானம், கல்வி, அமைதி, நிலையான வாழ்வு போன்ற சகல சௌபாக்கியங்களும் கொடுப்பார்.
காஞ்சியில் பிரம்மசாரிணீ துர்கை
ஒரு முறை இறைவி, விளையாட்டாக ஈசனின் கண்களை மூட, உலகமே இருளில் அல்லல்படுகிறது. ஈசனின் கண்களே சூரியனும் சந்திரனும் என்பதால், அந்த கண்களை அம்பிகை மூடிய போது உலகமே இருளில் அல்லாடியது. உலகமே இப்படி இருளில் அல்லாடியதால், அந்த பாவம் மொத்தமும் அம்பிகையை வந்து அடைந்து அம்பிகையின் மேனி கருமையானது. அம்பிகை செய்த செயலையும், அதனால் உலகம் அடைந்த இன்னலையும் கண்ட இறைவன், அம்பிகையை பூமியில் சென்று தவம் புரிந்து, பாவம் நீங்கிய பின் மீண்டும் தன்னை வந்து அடையுமாறு
கட்டளையிட்டார்.
ஈசனின் கட்டளைப்படி, நான்கு பக்கமும் சுட்டு எரிக்கும் நெருப்பின் மத்தியில் ஊசிமுனையில் நின்று கொண்டு, கண்களால் சுட்டு எரிக்கும் சூரியனை நோக்கியபடி கடுமையான தவம்செய்து இறுதியில் தேவி, இறைவனை அடைந்தாள். இப்படி இறைவி கடுமையான தவம் செய்த இடம், காஞ்சீபுரம். ஆகவே இன்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அம்பிகைக்கு, ஒரு பக்கம் காட்சி தருகிறாள், தவம் செய்யும் இந்த தேவி. இந்த தேவிக்கு தபஸ் காமாட்சி என்று பெயர். இந்த தபஸ் காமாட்சி, பிரம்ம சாரிணீ துர்கையின் ஒரு வடிவமே என்று
கருதுபவர்களும் உண்டு.
வழிபடுவதால் வரும் நன்மைகள்
சித்தர்களும், பக்தர்களும் இந்த துர்கையை கண்கண்ட தெய்வமாக வணங்கி மகிழ்கிறார்கள். இந்த அம்பிகையை வணங்குவதால், தவம், தியானம், புலனடக்கம், நன்னடத்தை ஆகியவை சாதகனுக்கு எளிதில் கிடைக்கிறது. பிரம்மசாரிணீ துர்கையின் அருளால், இக வாழ்விலும், பரவாழ்விலும் பெரும் நன்மை ஏற்படுகிறது.
“ததான கர பத்மாப்யாம்
அக்ஷ மாலா கமண்டலு
தேவீ பிரசீத து மயி
பிரம்மசாரிண் யனுத்தமா’’
என்ற தியான ஸ்லோகம் சொல்லி இந்த தேவியை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது பலர் அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.இரு கரங்களிலும், முறையே ஜப மாலை, கமண்டலம், வைத்துக் கொண்டு இருக்கும், தேவர்களின் தலைவியான பிரம்மசாரிணீ துர்கை எனக்கு அருள் புரியட்டும் என்பது மேலே நாம் கண்ட
ஸ்லோகத்தின் தேர்ந்த பொருளாகும்.
ஜி.மகேஷ்
The post பிரம்ம வித்தையை வசமாக்கும் பிரம்மசாரிணீ துர்கை appeared first on Dinakaran.