தசரத நந்தன ராமா

நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான். தர்மம் நான்கு வகைப்படும்.
1. சாமானிய தர்மம்,
2. சேஷ தர்மம்,
3. விசேஷ தர்மம்,
4. விசேஷதர தர்மம்.

இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.

இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.

எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது “விசேஷ தர்மம்”.

இறைவனுக்குத் தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முதன்மையானது என்று பாகவத சேஷத்வத்தைக் காட்டினான் சத்ருக்கனன். இது “விஷேசதர” தர்மம்.

இது சைவத்திலும் உண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா’’ என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை’’ என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

ராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின் நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது. அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப் படிக்காமல், தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும். அத னால் தான் நம்மாழ்வார், ‘‘கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று சொல்லாமல், ‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று பாடினார்.

18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக் கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின் சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும், தன்னுடைய ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம் பாடம் கேட்டார்.

காயத்ரி மந்திரமும், ஸ்ரீராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 சுலோகங்கள். ஒவ்வொரு அட்சரத்துக்கு 1000 சுலோகங்கள் என்ற வகையில் 24 ஆயிரம் ஸ்லோகங்களை வான்மீகி செய்தார். இதைப் போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயணசாரத்தைச் சொல்வதால், அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின் குணங்கள் பற்றி அழகான தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. ராமாயணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6. துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.

மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?

அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதிதேவிக்குச் சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. ‘‘ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே’’ என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம்வரும்., அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது. எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. ‘‘ர’’ என்ற எழுத்துக்கு எண் 2ம், ‘‘ம’’ என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத் தில் ‘‘ராம’’ என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5=10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?

ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)

1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபி ஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

The post தசரத நந்தன ராமா appeared first on Dinakaran.

Related Stories: