ஒருநாள்… குருநாதரின் பெண் குழந்தைகள் இருவரும் நீராடப் போனார்கள். சீடரும் போனார். நீராடி முடிந்து திரும்பும்போது, வழியில் சேறு நிறைந்த சிறு வாய்க்கால் ஒன்று குறுக்கிட்டது. சேறும் சகதியுமாக இருந்த அதைப் பார்த்ததும், பெண் குழந்தைகள் இருவரும் தயங்கினார்கள். அதைப் பார்த்தார் சீடர்; விநாடி நேரம்கூட யோசிக்க வில்லை; ‘‘குருவின் குழந்தைகளே! என் முதுகின் மேல் ஏறிப் பாதிப்பில்லாமல், வாய்க்காலின் மறுகரையை அடையுங்கள்!’’ என்று சொல்லிவிட்டு, சேறும் சகதியும் நிறைந்த அந்தச் சிறு வாய்க்காலின் குறுக்காக, அப்படியே குப்புறப் படுத்துவிட்டார், சீடர். பாலம் போலப் படுத்துக்கிடந்த அந்தச் சீடர் முதுகின் மேல் நடந்து, எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வாய்க்காலைக் கடந்து, வீடு போய்ச் சேர்ந்தார்கள் குருவின் பெண் குழந்தைகள் இருவரும்.
வீட்டிற்குப் போனதும், சீடர் தன் உடலில் படிந்திருந்த சேறு போக, நீராடச் சென்றார். விவரமறிந்த குருநாதருக்கு மெய் சிலிர்த்தது; உடனே சீடரை அழைத்து, ‘‘உமக்கு யாம் செய்ய வேண்டுவது என்ன?’’ என்று கேட்டார்.‘‘தங்கள் திருவடிச் சேவையே அடியேன் வேண்டுவது’’ என்றார் சீடர். குருநாதர் சொல்லத் தொடங்கினார்; ‘‘இனிவரும் எதிர்காலத்தில், யமுனைத்துறைவர் என்று அழைக்கப்படும் மந் நாதமுனிகளின் பேரனுக்குத் தகுந்த காலத்தில் உபதேசங்களைச் செய்யும்!’’ என்றார் குருநாதர்.சீடரும் அப்படியே நடந்து கொண்டார். குருநாதர் திருநாமம் – உய்யக்கொண்டார். சேற்றில் பாலமாக இருந்து, குருநாதரின் பெண்குழந்தைகளுக்கு உதவி செய்தவர் குரு பக்தியில் சிறந்த, மணக்கால் நம்பி.
பி.என்.பரசுராமன்
The post ஆச்சரியமான பாலம் appeared first on Dinakaran.