பாகம் 5
மேலும் சில சைவ – வைணவ இணைத் திருத்தலங்களை இந்த பாகத்தில் தரிசிக்கலாம்.
10. திருஅன்பில்
அன்பில் என்ற சிறு கிராமம் திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவில், லால்குடி அருகே, கொள்ளிடக் கரையில் உள்ளது. இந்த ஊரின் திவ்ய தேசம் வடிவழகிய
நம்பிப் பெருமாள் கோயில்.
``நாகத் தணைக்குடந்தை வெஃகா
திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான்’’.
(திருமழிசை ஆழ்வர்: 2417)
பெருமாள் கிடந்த (உறங்கும்) கோலத்தில் திருக்குடந்தையிலும் திருவெஃகாவிலும் திருஎவ்வுள்ளிலும் திருஅன்பிலிலும் உள்ளார். அவரை அணுகுவோரை அரவணைத்து அருள்கிறார். அவரோடு ஒன்றி, நமது ஜீவாத்மாவை அந்தப் பரமாத்மாவோடு இணைக்க வேண்டும். இந்தப் பாசுரம் அன்பிலை குடந்தையுடனும்,
திருப்பரமபதத்துடனும் ஒப்பிடுகிறது.
இந்தப் பெருமாள் கோயில் அருகிலேயே, 500 மீட்டர் தொலைவில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலம் சத்யவாகீஸ்வரர் கோயில் (சம்பந்தர் 11,
அப்பர் 10)
``வானம் சேர்மதி சூடிய மைந்தனை
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆனஞ்சாடியை அன்பிலா லந்துறைக்
கோன் எம் செல்வனைக் கூறிடகிற்றியே’’. (அப்பர் 5.80.1)
மனமே, மதிசூடிய எம் இறைவனை அடையும் பக்குவம் உனக்கு இன்னும் வரவில்லை. பஞ்ச கவ்யத்தால் வழிபடப்படும் அன்பில் ஆலந்துறை இறைவனின் நாமத்தை ஜபித்தால் அந்த நிலையை நீ அடைவாய் என்று இறை வழிபாட்டின் முக்கியத்துவத்தை அப்பர் வலியுறுத்துகிறார் அடுத்த பாடலில், ‘அன்பில் ஆலந்துரை ஈசனை நாரணற்கு அரியான் ஒரு நம்பியே,’ என்று கூறுகிறார். அப்பர், நம்பி (அரசன்) என்ற சொல்லை சிவபெருமானைக் குறிக்குமாறு கூறுகிறார். அன்பில் பெருமாளின் பெயர் வடிவழகிய நம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
11. திருக்கண்டியூர்
கண்டியூர் என்ற ஸ்தலம் தஞ்சாவூரிலிருந்து 12 கி.மீ; கும்பகோணத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள பாடல் பெற்ற ஸ்தலம், பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோயில் (சம்பந்தர் 11, அப்பர் 10) . பிரம்மா தனக்கும் சிவனைப்போல ஐந்து தலைகள் இருந்ததால் கர்வம் கொள்ள, இறைவன் அவருடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். பிரம்மா தம் தவறை உணர்ந்து, ஈசனை வழிப்பட்டு நான்கு அழகிய தலைகளைப் பெற்றார். இவ்வாறு சிவபெருமானின் வீரச்செயல்புரிந்த இந்தத் தலம் வீரட்டம் என்று அழைக்கப் படுகிறது சிவபெருமானின் எட்டு வீரச் செயல்கள் மற்றும் வீரட்டக் கோயில்களின் பட்டியல்:
1. பிரம்மாவின் தலையைக் கொய்தது – திருக்கண்டியூர் – பிரம்ம சிர கண்டீஸ்வரர்
2. அந்தகாசுரனை அழித்தது – திருக்கோவலூர் – வீரட்டேஸ்வரர்
3. முப்புரங்களை அழித்தது – திருவதிகை – வீரட்டேஸ்வரர்
4. யானை உரி போர்த்தது – வழுவூர் – வீரட்டேஸ்வரர்
5. தக்ஷனின் யாகத்தை அழித்தது – திருப்பரியலூர் – வீரட்டேஸ்வரர்
6. காமனை (மன்மதனை) எரித்தது – திருக்கொறுக்கை – வீரட்டேஸ்வரர்
7. யமனைக் காலால் உதைத்தது – திருக் கடையூர் – அமிர்தகடேஸ்வரர்
8. ஜலந்தரனை அழித்தது – திருவிற்குடி – வீரட்டேஸ்வரர்
இந்த எட்டுக் கோயில்களில் வழுவூர் தவிர, பிற ஏழும் பாடல் பெற்ற தலங்கள். வழுவூர், வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. அப்பர், கண்டியூர் வீரட்டப் பதிகத்தில்
இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்லா நம்மைச் செற்ற நங்கைக்
காய்ந்த பிரான் கண்டி யூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே’’. (அப்பர் 4.93.9)
‘‘கண்டியூர்ப் பெருமான் மன்மதனை வெகுண்டு அழித்தவர். அவர் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்த சிவபெருமான். அவர் அடியேனையும் ஆட்கொண்டுள்ளார். அதனால், நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன, கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்துவிட்டன.‘‘ கண்டியூர் வீரட்டக் கோயிலில் இருந்து 150 மீட்டர் நடை தூரத்திலேயே உள்ளது ஹரசாப விமோசனப் பெருமாளின் திவ்யதேசம் (திருமங்கை ஆழ்வார், 2050). இந்தப் பெருமாள் சிவனின் (ஹரனின்) சாபத்தைப் போக்க உதவினார். சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் அவர்க்கு தோஷம் ஏற்பட அவர் பெருமாளை வணங்கி விமோசனம் பெற்றார் என்பது தல வரலாறு.
“பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந்து உண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே?’’
மண்டை ஓட்டை ஏந்தி பிக்ஷை எடுக்கும் சிவபெருமானின் சாபம் தீர்த்த பெருமாள் திவரங்கம், கச்சி, கண்டியூர், மெய்யம், திருப்பேர் நகர் (கோவிலடி), கடல்மல்லை ஆகிய தலங்களில் கோயில் கொண்டிருக்கிறார். அவரைவிட நமக்கு அருளும் பெருமான் யார் உளர்? (நமது பாவங்கள் கண்டிப்பாகத் தீரும்)
12. திருநறையூர் (நாச்சியார் கோயில்/திருநறையூர் சித்தீஸ்வரம்
நாச்சியார் கோயில், கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு திருநறையூர் திவ்ய தேசமும் (திருமங்கை ஆழ்வார் 110), அருகிலேயே (1.2 கி.மீ)
திருநறையூர் சித்தீஸ்வரம் (சம்பந்தர் 33, சுந்தரர் 11) என்ற பாடல் பெற்ற தலமும் உள்ளன. நாச்சியார் கோயில் என்ற திவ்ய தேசம் திருக்கோழியையும் (உறையூர்) குறிக்கும் என்பதையும் அறிய வேண்டும். அதேபோல் திருநாரையூர் என்ற பாடல் பெற்ற தலம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ளது. இதனால் சில நேரங்களில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
திருநறையூர் திவ்ய தேசத்தில் கல் கருடன் உத்ஸவம் மிகவும் புகழ் வாய்ந்தது. பெருமாள் (நம்பி), கல் கருடன் மீதமர்ந்து உலா வரும் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக எடை அதிகரிப்பதாகவும், திரும்பும்போது அவ்வாறே எடை குறைவதாகவும் ஐதீகம்.
``கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய,
கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்,
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே’’.
(திருமங்கை ஆழ்வார் 1538)
‘‘திருக்குடந்தையில் சயனக் கோலத்தில் இருக்கும் நம்பி (பெருமாள்) உலகைக் காக்க வராஹமாய் அவதாரம் எடுத்தவர். எங்கள் நம்பியே உலகளந்தவர். எதிரிகளின் கோட்டையைத் தகர்க்க நடந்தே சென்று இலங்கையை வென்றவர். அவர் நாமமாகிய ‘நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தை என்றும் எப்பொழுதும் கூறுவாயாக.’’ இந்தப் பாசுரத்தில் திருநறையூர் நம்பி பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது, திருநறையூர் என்ற தலைப்பின் கீழே உள்ளது. இது திருக்குறுங்குடி நம்பியைக் குறிக்கும் என்று சொல்வோரும் உண்டு. நாராயண நாமத்தின் உயர்வைக் கூறும் பாசுரம் இது.
திருநறையூர் சித்தீஸ்வரம் சம்பந்தர் தேவாரம்:
“கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவா னனலாடி
பேரு லாவு பெருமா னறையூரில்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே’’.
(சம்பந்தர் 1.29.6)
‘‘சூலம் ஏந்தியவர், விடைமீது வருபவர், மழு வைத்திருப்பவர், சுடுகாட்டில் நெருப்பில் ஆடுபவர், பேர் பெற்றவராகிய பெருமான் திருநறையூர் சித்தீஸ்வரம் உறை பெருமானே. அவரை வணங்கி வழிபடுவாயாக. அவரை வணங்கினால் நம் பாவங்கள் தீரும்.”
13. திருச்சேறை
திருச்சேறை கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமம். இங்கு சாரநாதப் பெருமாள் திவ்ய தேசம் உள்ளது. (திருமங்கை ஆழ்வார் 13). இதுவே பாடல் பெற்ற தலமும் ஆகும். அது, செந்நெறியப்பர் கோயில் (சம்பந்தர் 11, அப்பர் 20). பெருமாள் கோயிலில் இருந்து 350மீ தொலைவு.
“உண்ணாது வெம் கூற்றம் ஓவாதபாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர்போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை
கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே’’.
(திருமங்கை ஆழ்வார், 1585)
‘‘திருச்சேறை அம்மனைக் கண்ணாரக் கண்டு உருகி கைக்கூப்பித் தொழுபவரை யமன் அணுகத் தயங்குவான். பாவங்கள் சேரா. ஆகவே ஒரு முறையாவது அங்கு சென்று அவரை வணங்குவீர்.‘‘
அப்பர் பதிகத்திலிருந்து ஒரு பாடல்:
``நிறைந்த மாமணலைக் கூப்பி நேசமோடு ஆவின் பாலைக்
கறந்து கொண்டாடக் கண்டு கறுத்த தன்தாதை தாளை
எறிந்த மாணிக்கு அப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச்
சிறந்த பேறளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’’. (அப்பர் 4.73.5)
‘‘அந்தச் சிறுவன் மண்ணால் சிவலிங்கம் செய்து பக்தியோடு, பசுப்பாலால் அபிஷேகம் செய்வதைக் கண்ட தந்தை, மகன் பாலை வீணடிக்கிறான் என்றெண்ணி சிவலிங்கத்தைக் கலைத்தபோது கோபம்கொண்ட சிறுவன் மழுவை எறிந்து தந்தையைக் கொன்றான். செந்நெறிச் செல்வர் ப்ரத்யக்ஷம் ஆகி சிறுவனுக்கு சண்டீசன் என்று பெயரிட்டு சிறந்த பேர் அளித்துத் தம்முடன் வைத்துக் கொண்டார்.”
சண்டீஸ்வர நாயனார் கதையை, தலபுராணமாக, அப்பர் இந்தப் பாட்டில் விளக்குகிறார். ஒவ்வொரு சிவன் கோயிலிலும் பிராகாரத்தில் சண்டீசர் சன்னதி இருக்கும். அவர் சிவன் சொத்தைக் காவல் காப்பவராகக் கருதப் படுகிறார். நாம் அவரிடம் சென்று கைகளைத் தட்டுவது சிவன் சொத்தை எடுத்துச் செல்லவில்லை என்று கூறுவதாகப் பொருள். உண்மையான கருத்து என்னவென்றால், சண்டீசர் எப்பொழுதும் இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பவர். நாம் கையைத் தட்டினால் தன் தியானம் கலைந்தாலும் கோபப்பட மாட்டார். நாம் கைதட்டி அவர் நம்மைப் பார்க்கும் பொழுது அவரிடம் நாம் நமக்கு இறைவனின் பார்வை படுமாறு அருள் செய்ய வேண்டுகிறோம்.
இதே பதிகத்தில், ‘இறைவன் செந்நெறிச் செல்வர், இமவானின் மகளை மணந்தார், அவளுக்குத் தம் உடலில் பாகம் கொடுத்தார், அவரே தம்மை சைவத்திற்கு அழைத்தார், அவரே அருச்சுனனுக்கு அஸ்த்ரங்கள் அளித்தார், பகீரதனுக்காக கங்கையைத் தலையில் ஏந்தினார், சண்டீஸ்வரருக்கு அருளினார், கால பைரவராக யானையில் தோலை உரித்தார், திரிபுரங்களை எரித்தார், அடி முடி காணா ஜோதியாக உருவெடுத்தார், அவரே கயிலை மலையை எடுக்க எண்ணிய ராவணனைத் தண்டித்துப் பின்னர் அருளினார்,‘ என்று பாடுகிறார் அப்பர். அப்பர் திருச்சேறை இறைவன் செந்நெறியப்பரைச் செந்நெறிச் செல்வர் என்றே கூறுகிறார். தம் பெயர் அப்பர் என்பதால் இறைவன் பெயரோடு தம்மை ஒப்பிடக்கூடாது என்ற மரியாதை காரணமாக செந்நெறிச் செல்வர் என்று கூறுகிறார்.
(தொடரும்)
பேராசிரியர் ஜி.ஸ்ரீ நிவாசன்
The post பதிகமும் பாசுரமும் appeared first on Dinakaran.