பலன்களை அள்ளித் தரும் பங்குனி உத்திரமும் சீர் வளம் பெருக்கும் ஸ்ரீராம நவமியும்

ஸ்ரீராமநவமி – 6-4-2025 – பங்குனி உத்திரம் – 11-4-2025

1. முன்னுரை

ஆங்கில மாதங்களில் ஏப்ரல் மாதம் சிறப்பானது. காரணம், நிர்வாகத்தில் நிதி ஆண்டு ஏப்ரல் மாதம்தான் தொடங்குகிறது. ஒருவரின் பொருளாதார ஏற்ற இறக்கங்களை கணக்கு செய்வதற்கும் அடுத்த முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சி களை எடுக்க வைப்பதும் ஏப்ரல் மாதம். இந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் மாதங்களின் முதல் மாதமாக சித்திரை மாதத்தின் முற் பகுதியும் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் பிற்பகுதியும் இணைகின்றது. நிகழும் குரோதி வருடம் நிறைவு பெற்று, விசுவாவசு வருடம் துவங்கும் இம்மாதத்தின் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் ஸ்ரீராமநவமியும், பங்குனி உத்திரமும். இந்த இரண்டு உற்சவங்களின் சிறப்பையும் முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்

2. பங்குனியும் சித்திரையும் தரும் விசேஷங்கள்

ஆண்டின் நிறைவு மாதமான பங்குனி மாதத்திலும், ஆண்டின் துவக்க மாதமான சித்திரையிலும் அற்புதமான பண்டிகைகளும் உற்சவங்களும் நிகழ்கின்றன. ஸ்ரீ ராம நவமி, பங்குனி உத்திரம், மகாவீர் ஜெயந்தி, தமிழ் வருடப் பிறப்பு, வராஹ ஜெயந்தி, அட்சய திருதியை, சங்கர ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி, வாசவி ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, சித்திரைத் திருவிழா என வரிசையாக திருவிழாக்கள் களைகட்டி நிற்கும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் அதாவது 6-4-2025 அன்று ஸ்ரீராமநவமியும் தொடர்ந்து ஸ்ரீராமநவமி நடக்கும் பொழுதே 11-4-25 அன்று பங்குனி உத்திரமும் நிகழ்கிறது. ஸ்ரீராம நவமி விழாக்கள் நடைபெறும். அதே வேளையில் 14.1.25 சித்திரை மாதம் பிறந்து தமிழ் வருஷப் பிறப்பும் கொண்டாடப்படுகிறது.

3. ஸ்ரீராம நவமியின் சிறப்பு

முதலில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி துவங்கும். (6.4.25) ஸ்ரீராம நவமியின் சிறப்பைக் காண்போம். இறைவன் இவ்வுலகத்தில் உள்ளோரை உய்விக்க எண்ணி சாஸ்திரங்களைத் தந்தான். அந்த சாஸ்திரங்களின்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவதாரம் செய்து நடந்து காட்டினான். ஸ்ரீமன் நாராயணன் பற்பல அவதாரங்களை எடுத்து இவ்வுலகத்தை காத்ததாக புராணங்களும் இதிகாசங்களும் சொல்லுகின்றன. பற்பல அவதாரங்களை எடுத்தாலும் மிக முக்கியமான அவதாரங்கள் 10. தசாவதாரங்களில் பூரணமான அவதாரம் ஸ்ரீராம அவதாரமும், ஸ்ரீ கிருஷ்ண அவதாரமும். இந்த இரண்டு அவதாரங்களிலும் பகவான் இந்த பூமியில் பிறந்து பற்பல லீலைகளைச் செய்து அருளினான். இதில் ஸ்ரீ ராமருடைய அவதாரத்தை ஸ்ரீ ராம நவமி யாகவும், கண்ணனுடைய அவதாரத்தை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவாகவும் பாரத தேசத்தில் கொண்டாடுகிறோம்.

4. ஸ்ரீ ராமநவமி நிர்ணயிக்கும் முறை

சைத்ர மாதம் என்பது பங்குனி அமாவாசைக்கும் சித்திரை அமாவாசைக்குமான காலம். அதாவது பங்குனி அமாவாசை முடிந்தவுடன் சைத்ர மாதம் பிறந்து விடுகிறது. இது சந்திரனை கணக்கு வைத்து நிர்ணயிக்கும் முறையாகும். பங்குனி அமாவாசை முடிந்த ஒன்பதாம் நாள் வளர்பிறை நவமி வந்துவிடும். அதுவே ஸ்ரீராமநவமி தினம். பங்குனி அமாவாசை பங்குனி மாதத்தின் கடைசிப் பகுதியில் வந்தால் வளர்பிறை நவமி சித்திரை மாதத்தில் வந்துவிடும்.

அதனால், சில ஆண்டுகளில் சித்திரை மாதத்தின் முதல் சில நாள்களில் ஸ்ரீராம நவமி விழா தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பங்குனி அமாவாசை பங்குனி மாதம் 15-ஆம் தேதி வந்ததால் அதற்கு அடுத்த நாள் யுகாதி பண்டிகையும், வசந்த நவராத்திரியும் ,தொடர்ந்து ஒன்பதாம் நாள் ஸ்ரீராம நவமி விழாவும் துவங்குகிறது. ஸ்ரீராமநவமி துவங்கும் பொழுது புனர்பூச நட்சத்திரமும் இருக்க வேண்டும். ஸ்ரீராமன் அவதார நட்சத்திரம் புனர்பூசம். இந்த ஆண்டு 6-4-2025 ஞாயிற்றுக் கிழமை காலை புனர்பூச நட்சத்திரமும், இரவு 12:00 மணி வரை நவமியும் இருப்பதால் இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

5. வேதமும் ஸ்ரீராமாயணமும்

முதலில் வேதங்கள் பிறந்தன. வேதங்களில் இருந்து உபநிடதங்கள் பிறந்தன. பிறகு, ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் பிறந்தன. சாஸ்திரங்களை ஆராய்கின்ற பொழுது முதலில் வேதத்தையும், பிறகு ஸ்மிருதிகளையும், பிறகு இதிகாசங்களையும், புராணங்களையும் ஆராய வேண்டும் என்பது மரபு. வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் உள்ள விஷயங்களை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள இதிகாசங்கள் உதவுகின்றன. அந்த இதிகாசங்கள் இரண்டு. ஒன்று ஸ்ரீ ராமாயணம். இன்னொன்று ஐந்தாவது வேதமான மகாபாரதம். இந்த இரண்டு இதிகாசங்களிலும் இல்லாத நீதிகளும் சாஸ்திரங்களும் இல்லை. அதில் ஸ்ரீ ராமாயணம் மிகச் சிறந்தது.

6. வேதத்தின் பொருளான ஸ்ரீராமன்

வால்மீகி முனிவரால் 24000 ஸ்லோகங்களால் பாடப்பட்ட ஸ்ரீ ராமாயணம் வேதமாகவே கொள்ளப்படுகிறது. ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்படும் ஸ்ரீராமன், வேதத்தின் பொருளான இறைவனாகக் கருதப்படுகின்றான். இதை கம்பனும் பாடுகின்றார். இந்திரஜித் வதத்தின் பொழுது பல்வேறு பாணங்களை எய்தியும் அவனைக் கொல்ல முடியாமல், கடைசியாக ஒரு அர்த்த சந்திர பாணத்தைப் பிரயோகம் செய்யும் பொழுது இலக்குவன் சொல்லும் சங்கல்பம்தான் இந்த பாடல்.

மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற்பால,
இறையவன் ராமன் என்னும் நல் அற மூர்த்தி என்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி’ என்று, ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான்-உலகு எலாம் நிறுத்தி நின்றான்.
இதில் முதல் இரண்டு வரிகளை கவனியுங்கள்.

“வேதங்களால் தெளியத்தக்கவனும், வேதியர்கள் வணங்குதற்கு உரியவனுமாகிய இறைவன்தான் ராமன் என்பது உண்மையாயின், இந்த அம்பு அவனைக் கொன்று இந்த உலகத்தை நிலை நிறுத்தட்டும்” என்கிறான். இந்த வார்த்தையில் சொல்லப்பட்ட வேதத்தின் பொருள் ராமன், வேதியர்களால் வணங்கப்படுபவன், ராமன். அவன்தான் தர்மமூர்த்தி. அவன்தான் இந்த உலகத்தில் அவதாரமாகத் தோன்றி இருக்கிறான் என்பது எல்லாம் உண்மையாக இருந்ததால் இலக்குவனின் சங்கல்பப்படி, அந்த சாதாரண அர்த்த சந்திர பாணம் இந்திரஜித்தை அடித்து வீழ்த்தியது.

7. ஸ்ரீ ராம நவமியும் ஏழும்

வேதத்தை சப்தப் பிரமாணம் என்பார்கள். வேதத்தை கையால் எழுதிப் படிக்கும் பழக்கம் இல்லை. அது காதால் கேட்க வேண்டும். அதனால் அதற்கு கேள்வி, மறை, ஸ்ருதி என்று பெயர். ஸ்ரீ ராமாயணத்திற்கும் சப்த பிரமாணம் என்றே பெயர். ஏழு பிறவிகள், ஏழு உலகங்கள் என்று ஏழின் அடிப்படையில் எண்ணற்ற தத்துவங்கள் இருக்கின்றன. சப்தம் என்பதற்கு ஏழு என்ற பொருளும் உண்டு. ஸ்ரீ ராமாயணம் அது ஏழு காண்டங்களைக் கொண்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்னும் ஏழு பெரும் பிரிவுகளைக் கொண்டது.

கிஷ்கிந்தா காண்டத்தில் ராமன் ஒரே அம்பினால் ஏழு மரா மரங்களைத் துளை செய்கின்றான். அந்த அம்பானது ஏழு என்கின்ற தொகுப்பில் என்னென்ன பொருள்கள் இருக்கிறதோ, அத்தனையும் ஊடுருவி ராமன் கைக்கு வந்து சேருகின்றது. 14 ஆண்டுகள் காட்டிற்குப் போ என்று கைகேயி சொன்னாலும், அதை ஏழு என்கிற எண்ணின் அடிப்படையில் “ஏழிரண்டு ஆண்டில்” என்றே சொல்கின்றாள். ஸ்ரீ ராமன் உபாசனை செய்த ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள், ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயிலில் இருக்கின்றார். ஸ்ரீ ராம அவதாரம் ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரங்களில் ஏழாவது அவதாரம்.

8. ராமாயணத்தைக் கேட்க வேண்டும்

எனவே, ஸ்ரீ ராமாயணத்தை போற்றுவது, வேதத்தைப் போற்றுவதாக, வேதத்தின் பொருளான பகவான் ஸ்ரீ ராமனைப் போற்றுவதாக அமையும். 24 எழுத்துக்களால் ஆன காயத்ரி மந்திரத்தின் விவரணமே ஸ்ரீ ராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஸ்ரீராமநவமியில் ஸ்ரீ ராமாயணத்தைப் பாராயணம் செய்வதோ, காதால் சொல்லக் கேட்பதோ மிகுந்த பலனைத் தரும். எனவேதான், பல கோயில்களிலும் பஜனை மடங்களிலும் இந்தியா முழுவதும் ஸ்ரீராமநவமியின்போது ஸ்ரீ ராமாயணக் கதையை காலட்சேபமாகவோ, இசைச் சொற்பொழிவாகவோ, நாடகமாகவோ கேட்கிறார்கள். ஸ்ரீ ராமனைப் புகழ்ந்து பாடும் கீர்த்தனைகளைப் பாடுகின்றார்கள்.

9. எத்தனை மொழிகளில் ஸ்ரீராமாயணம் தெரியுமா?

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் எத்தனையோ அற நூல்களும், காவிய நூல்களும், கதை நூல்களும் இருந்தாலும், பாரத தேசம் முழுக்க, கிராமம் நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல், எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது ஸ்ரீ ராமாயணமும் மகாபாரதமும் தான். இது மக்கள் வாழ்வோடு கலந்தது. நூற்றுக்கணக்கான மொழிகளிலும் ஸ்ரீ ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது. வட மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை, ஸ்ரீ துளசிதாசரும் (இந்தி – அவதி) கம்பரும்((தமிழ்) இன்னும் பல கவிகளும் எழுதி இருக்கின்றனர்.

கம்பன் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு கம்பன் கழகங்கள் ஆண்டுதோறும் பல்வேறு ஊர்களில் விழா நடத்துகின்றன. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தம்முடைய கீர்த்தனைகளின் 95 சதவீதத்தை ஸ்ரீ ராமாயண விஷயமாகவே பாடியிருக்கின்றார். சீர்காழி அருணாசல கவிராயர் ஸ்ரீ ராமாயணத்தை இசை நாடகமாக இயற்றி இருக்கிறார். ஆழ்வார்கள் அனைவருமே ஸ்ரீ ராமனின் பெருமைகளைப் பாசுரங்களாகப் பாடி இருக்கிறார்கள்.

10. எத்தனை வித ராமாயணம்?

வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட மூல ராமாயணத்தைத் தவிர, அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அக்னிவேச்ய ராமாயணம், ஸங்க்ரஹ ராமாயணம், மூல ராமாயணம், யோக வாசிஷ்ட ராமாயணம், ஸ்ரீதர ராமாயணம், மந்த்ர ராமாயணம் போன்ற பல ராமாயணங்கள் உள்ளன. இதில் வால்மீகி ராமாயணம், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. கம்பரின் தமிழ் மொழி ராமாயணம், ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும், 10589 பாடல்களையும் கொண்டது.

சமணர்களால் எழுதப்பட்ட ராமாயணத்தில் ராமர் எந்தக் கொலையும் செய்யவில்லை என்றும், இலக்குவனே ராவணனையும், மாரீசனையும் கொல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீரத்தில் மட்டும் இருபது ராமாயணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா வினைத் தாண்டியும் யாவா, சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன.

11. பாசுரப்படி ராமாயணம்

கம்பராமாயணத்தைத் தவிர தமிழில் தினசரி பாராயணம் செய்யக்கூடிய இரண்டு சுருக்கமான ராமாயணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று “பாசுரப்படி ராமாயணம்” இந்த பாசுரப்படி ராமாயணம், ஆழ்வார்கள் 4000 பாசுரங்களில் ராமாயண நிகழ்ச்சிகளை எங்கெல்லாம் பாடி இருக்கின்றார்களோ, அந்தப் பாசுரங்களின் சொற்றொடர்களை இணைத்து அமைக்கப்பட்ட அற்புதமான ராமாயணம்.

வைணவத்தின் எல்லா பாசுரங்களுக்கும் உரை விளக்கம் அருளிச் செய்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, பாசுரப்படி ராமாயணத்தை ஆழ்வார்களின் பாசுர வரிகளிலிருந்து தொகுத்துக் கொடுத்துள்ளார். இதில் ராம அவதாரம் எடுப்பதற்கான மூல காரணம் முதல் பட்டாபிஷேகம் வரை அனைத்துச் செய்திகளும் மிகச்சுவையாக நிரல் நிறையாக தொகுக்கப்பட்டிருக்கிறது. 10 நிமிடங்களில் பாராயணம் செய்யக்கூடிய பாசுரப்படி ராமாயணத்தை தினமும் பாராயணம் செய்வதால் இரண்டு பலன்கள் நமக்கு கிடைக்கும். ஒன்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாராயணம் செய்த பலன். இரண்டு ராமாயணத்தை தினசரி பாராயணம் செய்த பலன்.

12. ராமாயணத்தில் ஆழங்கால் பட்ட ஆழ்வார்கள்

“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்றார் ஸ்வாமி நம்மாழ்வார். கற்பது என்னும் பதம் ஆழமான பொருள்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு, ‘கேட்பார் கேசவன் கீர்த்தி அல்லால்’ என்ற பாசுரத்தில் பொருள் பாகவதத்தை படித்தல் என்று ஆகிறது. அதைபோல், ராம பிரான் கீர்த்தி என்று இருந்தால், ராமாயணம் படித்தல் என்று ஆகும். ஆனால், அவ்வாறு இல்லாமல் ஸ்வாமி நம்மாழ்வார் ‘கற்பார் ராமபிரானை’ என்பது பற்றி குறிப்பிட்டுள்ள நோக்கம் என்ன? ராமரை கற்றுக்கொள்ள வேண்டும் என்று இதன் பொருளாக அமைகிறது. 16 கலைகள், 16 பேறுகள் என்பது போலவே ராமனுக்கு 16 குணங்களை, சிறப்பான குணங்களாகச் சொன்னார்கள்.

இந்த 16 குணங்களும் யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் உத்தம புருஷர்கள். இன்னொரு விசேஷம். 16 இல் உள்ள ஒன்றையும் ஆறையும் கூட்டினால் ஏழு என்கிற எண் வருகிறது. ஏழு என்றால் ராமாயணத்தைக் குறிக்கிறது என்று பார்த்தோம் அல்லவா. ராமாயணத்தில் உள்ள சிறப்பு, ராமருக்கு இருந்த மாத்ரு / பித்ரு பக்தி, சகோதரத்வம், சத்ய சந்தத்வம் மற்றும் பல உயர்ந்த ஆத்ம குணங்கள்.

13. ராமாயண காலத்துக்கே சென்ற ஆழ்வார்

ஆழ்வார்களில் பலர் தங்கள் பாசுரங்களில் ஆங்காங்கே ராமாயண நிகழ்வுகளைப் பாடிச் சென்றிருப்பார்கள். ஆனால், ஆழ்வார்களில் ஸ்ரீ ராமாயணம் முழுக்க ஒரே பதிகத்தில் நிரல்நிறையாகப் பாடிய ஆழ்வார் குலசேகர ஆழ்வார். குலசேகர ஆழ்வாரின் ராமாயணம் அதி அற்புதமானது. சேரநாட்டு ராஜாவான இவர் ஒவ்வொரு நாளும் தனது அவையில் ராமாயணத்தை காலட்சேபம் கேட்டு அதன்பின் தான் உணவு கொள்வார். சிந்தனை, செயல் எல்லாவற்றிலும் இவருக்கு ஸ்ரீராமன்தான். கர தூஷண வதத்தைக் கதை சொல்கின்ற பொழுது, ஸ்ரீ ராமருக்குத் துணையாக தன்னுடைய படையைத் திரட்ட உத்தரவிட்டார் என்றால், தன்னை மறந்து ராமர் கதையில் ஆழங்கால் பட்டு ராமாயண காலத்திற்கே போய்விட்டார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

14. குலசேர ஆழ்வாரின் ராமாயணம்

அவர் எழுதிய பாசுரங்களின் தொகுப்பு பெருமாள் திருமொழி என்று வழங்கப்படுகிறது. அதில் கடைசி பதிகம் ஸ்ரீ ராமாயணம் தான். அது அருளிச் செய்யப்பட்ட இடம் தில்லை திருச்சித்திர கூடம் என்று சொல்லப்படும் சிதம்பரம். இங்குள்ள பெருமாளை ஸ்ரீ ராமனாகவே கருதி 11 பாசுரங்களால் பாடி இருக்கின்றார் அதில் 11 வது பாசுரம் பலச் சுருதி. இதில் இன்னொரு விசேஷம் என்ன என்று சொன்னால் ஏழாவது காண்டமான உத்தர காண்டத்தின் செய்திகளையும் மிகச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறார். இந்த 11 பாசுரங்களையும் அதிகபட்சம் 10 நிமிடங்களில் பாராயணம் செய்து விடலாம். அந்த ராமாயணப் பதிகம் இப்படித் தொடங்கும்.

அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை

செங்கணெடுங் கருமுகிலை யிராமன்
றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே என்று தொடங்கும்

15. ஸ்ரீராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?

ஸ்ரீ ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போத்சவம்’ என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு ‘ஜன்மோத்சவம்’ என்று பெயர். சில பக்தர்கள் ஸ்ரீராமநவமிக்கு முன்னதாக ஒன்பது நாட்கள் விரதம் இருப்பர். ஸ்ரீராமநவமி நாளில் ராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக் கேட்பதும், ராமபிரானுடைய திருநாமத்தை எழுதுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

வீட்டில் பட்டாபிஷேக ராமர் படம் வைத்து வழிபடலாம். பூஜை அறையில் ராமர் படத்தை குங்குமம், சந்தனம் போன்ற வற்றால் பொட்டு வைத்து, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

16. ஆஞ்சநேயர் விழாவோடு நிறைவு பெறும் ஸ்ரீராம நவமி

ஒரு அற்புதமான விழாவாகவே கொண்டாடப்படுகிறது. கோயில்களில் தினமும் காலையில் திருமஞ்சனமும் இரண்டு வேளை பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாக்களும் நடைபெறும். அதில் ஒருநாள் சீதா கல்யாணம் நடைபெறும். ஸ்ரீ சீதா – ராமர் திருமண வைபவத்தை தரிசனம் செய்தால் விரைவில் மணமாலை தேடிவரும் என்பது நம்பிக்கை. ஸ்ரீராமர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பட்டாபிஷேகம், ராமாயண பாராயணம், ராம நாமம் ஜெபித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

ஸ்ரீ ராம நவமி நிறைவு விழா ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவமாகக் கொண்டாடப்படும். ஸ்ரீ ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, ராம நவமி நாளில் அனுமனின் அருளையும் பெறலாம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

என்று மந்திரம் கூறி ஸ்ரீராமரை வணங்கலாம்.

17. விதவிதமான முறையில் ஸ்ரீ ராமநவமி

இந்தியா முழுவதும் ஸ்ரீ ராமநவமி விதவிதமான முறையில் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில், ஸ்ரீராமநவமி பொதுமக்களால் மிக உற்சாகமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் அமைப்புகளால் சில இடங்களில், நடைபாதைகளிலும் கூட, இலவச பானகம் மற்றும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கி மகிழ்வார்கள். வடநாட்டில் சைத்ர (வசந்த) நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராமனை நினைத்து ராமாயணத்தைப் படிப்பதோடு, சில கோயில்களில் மாலையில் சிறப்புச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து கேட் கிறார்கள்.

சில இடங்களில் ஒரு மாத காலம் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப் படுகிறது. அப்பொழுது பாரம்பரிய இசை விழாவை நடத்துகிறார்கள். ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களில், மிகச் சிறப்பாக ராமநவமி கொண்டாடுகிறார்கள். ஒரிசா ஜெகந்நாதர் கோயிலில் ஸ்ரீராம நவமியை வருடாந்திர ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான தயாரிப்புகள் தொடங்கும் நாளாகக் கருதுகிறார்கள்.

18. பானகம் ஏன்?

ஸ்ரீ ராம நவமியில் எத்தனை நிவேதனங் களைச் செய்தாலும் பானகமும் நீர் மோரும் முக்கியம். இதற்கான காரணங்கள். (1) இவை இரண்டுமே மிக எளிய பொருள்கள். எங்கும் கிடைக்கக்கூடிய அதிக செலவில்லாத பொருள்கள். பகவான் எளிமையை விரும்புகின்றான். எல்லோருக்குமானதை விரும்புகின்றான் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு இந்த இரண்டு பொருள்களையும் நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

(2) சித்திரை மாதம் துவங்கும் ( கோடை) காலத்தில் இந்த விழா நடைபெறுவதால், பானகமும் நீர் மோரும் இயற்கை யான நோய் எதிர்ப்பு பொருளாகவும், உடலின் வெப்பத்தைத் தணித்து நன்மை செய்யும் மருந்தாகவும் பயன்படுகிறது. விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாகத்திற்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நைவேத்திய பொருட்களாகப் படைக்கப்படுகின்றன.

19. ஸ்ரீ ராமநவமி விரத பலன்கள்

ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீராமநாமம் கூறி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ராமநவமி நாள் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் நாள். மறந்தும் கூட இந்த நாளில் சண்டை போடாதீர்கள். ஸ்ரீ ராம நவமி நாளில் ஸ்ரீராமருக்கு படையலிட்ட நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

தானம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தர வேண்டும் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி, செருப்பு, குடை போன்றவைகளையும் தானமாக வழங்குவதையும் செய்யலாம். ஸ்ரீராம நவமி நாளில் தானம் கொடுப்பதன் மூலம் பல தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும். இனி, பங்குனி உத்திரம் பற்றிக் காண்போம்.

20. குலதெய்வத்தைக் கொண்டாடும் பங்குனி உத்திரம்

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமான பங்குனியில், சூரியனுக்குரிய இரண்டாவது நட்சத்திரமான (முதல் நட்சத்திரம் கிருத்திகை, மூன்றாவது நட்சத்திரம், உத்திராடம்) உத்திரத்தில் நடைபெறும் தெய்வீக வைபவம். பங்குனி உத்திர வைபவம். இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி தொடங்கிய ஆறாவது நாள் (11.4.2025)பங்குனி உத்திரம் வைபவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமி திருமால் கோயில்களில் நடைபெறும் உற்சவம் என்றால் பங்குனி உத்திரம் திருமால் கோயில்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும், அம்மன் ஆலயங்களிலும் நடைபெறும் மிகச் சிறப்பான உற்சவமாகும். தமிழர்களின் தொன்மையான உற்சவங்களில் ஒன்று பங்குனி உற்சவம். இன்னும் சொல்லப் போனால் ஆண்டின் மற்ற மாதங்களில் கோயிலுக்கு போகாதவர்கள் கூட பங்குனி உத்திரம் அன்று, உலகில் எங்கே இருந்தாலும் தங்கள் குலதெய்வம் இருக்கும் ஊருக்குச் சென்று வழிபட்டு வருவார்கள்.

21. பங்குனி உத்திரமும் தெய்வத் திருமணங்களும்

பங்குனி மாதத்தில் பௌர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்து வரும் சிறப்பு நாள்தான் பங்குனி உத்திரம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் 2025, ஏப்ரல் 10ஆம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்திற்கு தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணி 10 நிமிடத்திற்கு முடிவடைகிறது. இந்தத் திருநாள், பல்வேறு தெய்வத் திருமணத்துடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றன. முருகப் பெருமான் பங்குனி உத்திரத் திருநாளில்தான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீராம நவமியை ஒட்டி வரும் பங்குனி உத்திரத்தில் தான் ஸ்ரீ ராமனுக்கும் சீதா பிராட்டிக்கும் திருமண வைபவம் நடைபெற்றது சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்த வைபவமும் பங்குனி உத்திர நாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

22. முருகனும் பங்குனி உத்திரமும்

தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி புறப்பட்டார். அசுரர்களில் ஒருவனான யானை முகம் கொண்ட தாரகாசுரன் (சூரபத்மனின் தம்பி ) மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான். அவனை அடக்க வீரபாகுவை அனுப்பினார் முருகன். தாரகாசுரன் படைகளுக்கும் தேவ சேனாதிபதியான முருகப்பெருமான் படைகளுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடந்தது.

பல மாய வேலைகளைச் செய்து கடுமையாகப் போர் புரிந்தான் தாரகாசுரன். கடைசியில் ஒரு மலையில் புகுந்து கொண்டான். கோபம் கொண்ட முருகப் பெருமான், தன் வேலாயுதத்தை வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனைக் கொன்றது. அதன் பிறகு முருகப் பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்தர திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும். வள்ளியின் அவதார தினமும் பங்குனி உத்திரம் தான்.

23.பழனியில் பங்குனி உத்திரம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் நடைபெறும் விழா மிகச் சிறப்பான விழாவாகும். அனைத்து அறுபடை வீடுகளில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்திரம் திருவிழாவும், தேரோட்டமும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று முருக பக்தர்கள் காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாஷாண முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.கடுமையாக வெயில் நிறைந்த பங்குனியில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையை மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விக்கும் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழா.

24. கல்யாண சுந்தர விரதம்

மதுரையில் மீனாட்சி திருமணம் விசேஷம். இதில் உள்ள தத்துவம் முக்கியம். பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. சோமசுந்தரர் சிவன். மீனாட்சி பார்வதி. சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக சிவன் பார்வதி தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.

சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.

25. இன்னும் பல சிறப்புகள்

மன்மதன் சிவனின் மோன தவத்தைக் கலைத்தான். சிவபெருமான் காமனை நெற்றிக் கண்ணால் எரித்தார். இது காமதகனம் என்னும் வசந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மன்மதனின் மனைவி ரதியின் பிரார்த்தனையால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் பங்குனி உத்திரம்தான். பார்கவ மகரிஷியின் மகளாக அவதரித்த மகாலட்சுமித் தாயார் பார்கவி என்ற பெயரில் பூமியில் அவதாரம் செய்த நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் மேற் கொள்ளப்படும் மஹாலஷ்மி வழிபாடு செல்வச் செழிப்பையும் வளமான வாழ்க்கையையும் தருகிறது.

26. காஞ்சியில் தெய்வத் திருமணங்கள்

காஞ்சிபுரத்தில் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் காமாட்சி அம்மனுக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறும் நாள் பங்குனி உத்திரம். இங்குள்ள திருமண மண்டபத்தில் காமாட்சி அம்மனின் திருமணத்தைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடியிருப்பார்கள். இதேநாளில் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் காட்சி தருவார்.

27. திருவரங்கத்தில் சிறப்பு

திருவரங்கத்தில் பங்குனி உத்திர வைபவம் மிகச் சிறப்பான வைபவம். இந்த நாளில்தான் பெருமாளும் தாயாரும் சேர்ந்திருக்கும் சேர்த்தி வைபவத்தில் உலக மக்களுக்காக  ராமானுஜர் சரணாகதி செய்தார். அப்பொழுது அவர் அருளிய நூல்தான் கத்யத்ரயம். இதில் சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்னும் மூன்று நூல்கள் அடங்கியுள்ளன. இதற்கு முதல் நாள் மட்டையடி சேவை (பிரணய கலகம் அதாவது பெருமாளுக்கும் பிராட்டிக்குமான ஊடல் உற்சவம் )என்னும் சிறப்பான வைபவம் நடைபெறும். பங்குனி உத்திரம் முதல் நாள் பங்குனி பூரம். அன்று சீர்காழிக்கு அருகே திருவாலியில் பெருமாள் (கல்யாண ரெங்கநாதர்) பிராட்டி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்.

அன்று இரவு திருமணங்கொல்லை (வேதராஜபுரம்) என்னும் ஊரில் திருமங்கையாழ்வாரின் திருவேடுபறி உற்சவம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும். அந்த இரவில்தான், நீலன் என்னும் பெயருடைய திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாராக மாறி, பெரிய திருமொழி பாடத்தொடங்கினார். எனவே ஒரு தமிழ் பிரபந்தம் அவதரித்த நாள் என்றும், திருமங்கையாழ்வாரின் ஞான உற்சவ நாளாகவும் கொண்டாடுவார்கள்.

28. ஒரே ஒரு நாள் பூக்கும்

சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மனைவியாக ஏற்றுக்கொண்ட தினம் பங்குனி உத்திரம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினம் பங்குனி உத்திரம். முருக பக்தர்கள் பங்குனி உத்திர நாள் அன்று காவடி எடுப்பார்கள். விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள். முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவத்தை நடத்துவார்கள். கொள்ளிட ஆற்றங்கரையில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனின் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே சந்நதியில் ஏழு அம்மன்கள் உள்ளனர். அதில் புலீஸ்வரி என்பது வைஷ்ணவி. இங்குள்ள ஸ்தல மரம் வருடத்திற்கு ஒரே நாளான பங்குனி உத்திரம் அன்று மட்டுமே பூக்கும்.

29. தமிழ் வருடப் பிறப்பு

பங்குனி உத்திரம் நடைபெற்ற நான்காவது நாளில் (14.4 2025) அன்று சித்திரை மாதம் பிறக்கிறது. குரோதி வருடம் முடிந்து விசுவாவசு வருஷம் பிறக்கிறது. இந்த நாளில் இறைவனை வணங்கி புதிய வருடத்தை வரவேற்பார்கள். முதல் நாள் பூஜை அறையில் காய்கனிகள் மற்றும் மங்கலப் பொருள்களை வைத்து அடுத்த நாள் விடிந்தவுடன் முதலில் இந்த மங்கலப் பொருள்களைக் காணும் வைபவம் சித்திரை விஷூ என்று அழைக்கப்படும்.

இந்த புது வருடம் உழவுத் தொழிலுக்கும் பசுக்களுக்கும் நிறைந்த நன்மையைச் செய்யும் வருடமாக பலன் சொல்லப்பட்டிருக்கிறது. தான தருமங்கள் அதிகம் நடைபெறும். நல்ல மழை உண்டு என்று விசுவாவசு வருசபலன் வெண்பா கூறுகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரியனே இந்த வருடத்தின் ராஜாவாகவும் சேனாதிபதியாகவும், அர்க்காபதியாகவும், மேகாதிபதியாகவும் இருப்பதும், பூமிக்குரிய கிரகமாகிய செவ்வாய் தான்யாதிபதி எனும் நிலையில் இருப்பதும் நன்மையான விஷயமாகச் சாத்திரம் கூறுகிறது.

30. நிறைவுரை

இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கும் ராம நவமி, ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிறைவடைகிறது. இந்த  ராமநவமி வைபவம் நடக்கும் நாள்களில்தான் பங்குனி உத்திர வைபவமும், பல்வேறு ஆலயங்களின் தெய்வத் திருமண வைபவங்களும், பல்வேறு ஆலயங்களில் பங்குனி உத்திரப் பெருவிழா (பிரமோத்சவம்) வைபவங்களும் நடை பெறுகிறது.  ராமநவமி நடக்கும் காலத்தில்தான் புதிய தமிழ் வருடம் பிறக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பு சில வருடங்களில் தான் வரும். அது இந்த வருடம் வந்திருக்கிறது. அளவற்ற ஆன்மிக நன்மையைத் தரும் இந்த தொடர் வைபவத்தில் நாம் எல்லோரும் கலந்து கொண்டு இறையருளைப் பெறுவோம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post பலன்களை அள்ளித் தரும் பங்குனி உத்திரமும் சீர் வளம் பெருக்கும் ஸ்ரீராம நவமியும் appeared first on Dinakaran.

Related Stories: