பகுதி 1
“கயிலையே மயிலை, மயிலையே கயிலை” என்று ஆன்றோரால் போற்றப்படும் திருத்தலம் திருமயிலை. ‘மயில் ஆர்ப்பு ஊர்’ என்பது பிற்காலத்தில் மயிலாப்பூர் என்று மருவியது. அன்னை மயிலுருவில் சிவ பெருமானைப் பூசித்த திருத்தலம்; ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடி பூம்பாவை எனும் பெண்ணை மீண்டும் உயிர்ப்பித்த தலம்; கோயிலில் காட்சி தரும் வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம்; அருணகிரிநாதரால் போற்றப்பட்ட தலம்; இவ்வாறு பல பெருமைகளை உள்ளடக்கியது நமது திருமயிலை. தலத்திற்கு ஒரு வெண்பா வீதம் 24 வெண்பாக்கள் பாடிய ஐயடிகள் காடவர் கோன் இத்தலத்தின் சிறப்பைப் பின்வருமாறு பாடுகிறார்:
“குயிலொத்திருள் குஞ்சி கொக்கொத்து இருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே! மயிலைத்
திருப்புன்னையங்கானல் சிந்தியாயாகில்
இருப்பின்னை அங்காந் திளைத்து”
– என்கிறார்.
நெஞ்சே! நான் சொல்வதைக் கேள். குயில் போல் கரிய இருண்ட தலைமுடியானது கொக்கைப் போல் வெளுத்து நரையாகி, நெஞ்சில் உண்டாகும் கோழையால் இருமல் மிகுந்துவிடுமுன், புனிதமான புன்னை மரத்தைக் கொண்டதும் அழகிய கடற்கரைச் சோலையோடு கூடியதுமான மயிலாபுரியைச் (இறைவன் இறைவியை) சிந்திக்காமல் இருப்பாயானால், என்ன நடக்கும் தெரியுமா? வாயைப் பிளந்து கொண்டு இளைத்துச் செயல்பட்டுக் கிடப்பாய்” என்கிறார்.
குயில் கொக்காகுமுன் மயிலை நினை என்று சிலேடையாகக் கூறுகிறார் ரா. கணபதி அவர்கள்.மயிலைத் திருப்புன்னையங்கானல் என்று அடிகள் கூறுகிறார். சம்பந்தப் பெருமானும், ‘மட்டிட்ட புன்னையங்கானல்’ என்று பாடியுள்ளார். ‘ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை’ என்றும் கூறியுள்ளார். [திரை வேலை = அலை வீசும் கடல்]. புன்னை எனும் புன்னாக மரம் கடற்கரையாகிய நெய்தல் திணைக்கு உரியது. எனவே முன்னொரு காலம் திருமயிலைத் திருத்தலம் கடற்கரையை ஒட்டியே அமைந் திருந்தது என்று கருத வாய்ப்புள்ளது.
இன்று நாம் காணும் திருமயிலைக் கோயில், இடம் பெயர்ந்த கோயிலாகும். கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது; மயிலாப்பூர் என்ற பெயர் எப்படித் தோன்றியது? சிவனார் உமையுடன் வீற்றிருந்த போது, அன்னைக்கு பஞ்சாக்ஷரத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்த மயிலின் மீது அன்னையின் கவனம் சென்றது. “நீ பூமியில் மயில் உருக்கொண்டு தவமியற்றி என்னை வந்தடைவாயாக” என்று சிவனார் கூறியதும், அன்னை அதிர்ந்தாள். பின்னர் இன்று மயிலை எனப்படுமிடத்திலிருந்த புன்னை வனம் வந்தடைந்து, மரத்தடியில் லிங்கம் ஸ்தாபித்து, மயில் உருவில் பூஜை செய்யத்தொடங்கினாள்.
கோயில் வெளிச் சுற்றில் தலமரத்தடியில் அன்னை மயிலுருவில் லிங்கத்தைப் பூஜை செய்யும் சிற்பத்தைக் காணலாம்]. தவம் நிறைவேறியதும், அன்னை கற்பகாம்பாள் என்ற பெயருடன், திருமயிலை என்று காரணப் பெயர் பெற்ற இத்தலத்தில் குடியேறி அருள்பாலித்து வருகிறாள்.செருக்குற்ற பிரமனின் ஒரு சிரத்தை அரிந்து கையில் கபாலத்தை ஏந்தியதால் இறைவன் கபாலீசுவரர் எனப்படுகிறார். ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியும் போது, பெருமான் மட்டும் கபாலத்தைக் கையில் தாங்கி நிற்கிறான்.
தனக்கே உரிய ஆற்றலுடன் மீண்டும் உலகைப் படைக்கிறான். கையில் பிரம்ம கபாலம் தாங்கி நடனம் ஆடிய அவன் கபாலீசுவரன் என்று பெயர் பெற்றான். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை அடக்க கபாலம் ஏந்தி பிக்ஷைக்குப் புறப்படும் போது, பிக்ஷாடனன் என்ற பெயர் பெறுகிறான். மக்களிடம் ஆணவத்தையே பிச்சை கேட்கும் இறைவனை, பிக்ஷாடனனாக, கபாலியாகக் காணும் கலைக்கண்களைப் பெற்றிருந்தனர் நம் முன்னோர் எனலாம்.
கோயில் நுழைவாயிலிலுள்ள கூத்தாடும் விநாயகரைத் தரிசித்து, அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மையையும் வணங்கி, சிங்கார வேலர் சந்நிதிக்கு வருகிறோம். பெயருக்கேற்றாற்போல் விளங்கும் அழகன் குமரனை அருகிலிருந்து தரிசித்தால் மட்டுமே அவன் முழு அழகையும் காணலாம். ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலம். ஏற்கனவே முருகனுக்கு பிரணவ மயில், இந்திர மயில், சூரமயில் எனும் மூன்று மயில்கள் உள்ளன. இங்கு, நான்காவதாக, மயில் வடிவில் சிவனைப் பூஜித்த அன்னையே மயிலாக நின்று சிங்காரவேலனைத் தாங்குகிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது!! தேவியர் இருவரும் யானைகள் மீது அமர்ந்துள்ளனர்.
முருகனுக்கு, பிணிமுகம் என்ற யானையும் தெய்வயானை திருமணத்தில் சீராக உடன் வந்த ஐராவதம் எனும் யானையும் என இரண்டு யானைகள் உண்டு. இவ்விரண்டு யானைகளும் தேவியரைத் தாங்கி நிற்கின்றன போலும்!சிங்காரவேலவர் சந்நதிக்கு எதிராக சற்றுத் தொலைவில் அருணகிரிநாதரின் தனிச்சந்நதி அமைந்துள்ளது. “இரவுபகல் பலகாலும்” எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழை, இச்சந்நதியில் பளிங்குக் கல்லில் பொறித்துள்ளனர்”. திருமயிலையில் பத்து அழகிய திருப்புகழ்ப் பாக்களைப் பாடியுள்ள அருணகிரிநாதரை இவ்வாறு கௌரவித்திருப்பது மனத்திற்கு நிறைவைத் தருகிறது. திருமயிலைத் திருப்புகழ்ப் பாக்களில் மயிலாப்பூர் பற்றி வரும் சில முக்கிய குறிப்புகளை இங்கு காண்போம்.அமரும் அமரரினில்“இயற்றமிழ் விளங்கும் மயிலை நகரில் இன்பமுடன் வீற்றிருக்கும் எங்கள் மேலான குருமூர்த்தியே! உனது குக சாயுஜ்ய பதவியைத் தர வந்தருள்வாயாக” எனும் பொருளில்,
“இயலின் இயல் மயிலை நகரில் இனிதுறையும்
எமது பர குரவ பெருமாளே…
நினது பதவி தர வருவாயே”
– என்று பாடுகிறார்.
வாகீச கலாநிதி திரு.கி.வா.ஜ அவர்கள், ‘மயிலைச் சிங்காரவேலன் இரட்டை மணிமாலை’ எனும் தனது நூலில் பின்வருமாறு பாடுகிறார்.
“நைந்து மனம் விடாமல் நாணம் இழவாமல்
ஐந்து புலனால் அலையாமல் – கந்தபிரான்
மாமயிலைச் சிங்கார வேலன் செவ்வண்ண அடித்
தூமலரைச் சார்தல் சுகம்”அயிலொத்தெழும்
‘கடலக்கரை திரை அருகே சூழ் மயிலைப்பதி’
கடலினுடைய கரையும் அலையும் அருகே சூழ்ந்துள்ள மயிலைப் பதி.
அறமிலா
“மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே”
இகலவருதிரை
“அழகும் இலகிய புலமையும் மகிமையும்
வளமும் உறை திருமயிலையில் அனுதினம்
அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே”
அழகும், விளங்கும் கல்வி ஞானமும், பெருமையும் வளமையும் நிறைந்த திருமயிலையில் நாள்தோறும் வீற்றிருந்தருளும் ஹரஹர ஒலிக்குரிய சிவனுடைய குமரனே! அடியார்தம் பெருமாளே!
இணையதிலதாம்…
“மணிமகுட வேணி கொன்றை அறுகு மதி
ஆறணிந்த
மலைய விலின் நாயகன்றன் ஒருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனெனவே வளர்ந்து
மயிலை நகர் வாழ வந்த பெருமாளே”
அழகிய ஜடா முடியில் கொன்றை, அறுகு, நிலவு, கங்கை இவற்றை அணிந்தவரும், மேரு மலையை வில்லாக கொண்ட தலைவருமான சிவனாரது ஒரு பாகத்தில் உள்ள பர்வதராஜன் ஈன்ற மகள் பார்வதி பெற்ற குழந்தை எனும்படியாகவே வளர்ந்து மயிலைப்பதியில் வாழ வந்துள்ள பெருமாளே!
களபமணி
“சுருதிமறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவும் உக்ர துரகத கலாப பச்சைமயில் வீரா!”வேதம், உபநிஷதம், வேள்வி இவை நிரம்பிய மயிலைப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே! உக்ரமான குதிரையாகிய தோகையை உடைய பச்சைமயில் வீரனே!ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மயிலையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததை சம்பந்தப் பெருமான் இத்தலப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார்.“அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள்பரவு பாடல் சொற்ற குமரேசா”[குபேர நகரத்துச் செல்வம் கொண்ட வணிகர் குலத்தில் பிறந்த பெண் ஒருவளின் இறந்த உயிரை மீளும்படி அழைக்க வேண்டி, இறைவன் திருவருளைப் பரவிய பதிகத்தைச் சொன்ன குமரேசனே! என்கிறார்.]
திருமயிலையில், வணிகர் குலத்தைச் சேர்ந்த சிவனேசர் என்பவர் தன்னையும் தன் மகளையும் சம்பந்தப் பெருமானுக்கே அர்ப்பணிப்பேன் என்று கூறும் அளவு பெருமான் மீது பக்தி கொண்டிருந்தார். துர்பாக்கியவசமாக, அவர் மகள் ஏழு வயதுச் சிறுமி பூம்பாவை பாம்பு கடித்து இறந்தாள். சிவநேசர் அப்பெண்ணின் உடம்பைத் தீயில் எரித்து எலும்பினையும் சாம்பலையும் பெரிய குடத்தில் வைத்து, கன்னிமாடத்தில் காப்பாற்றி வந்தார்.
ஐந்தாண்டுகள் கழித்து சம்பந்தர் திருமயிலைக்கு எழுந்தருளியபோது, பூம்பாவை உயிர் பெற்று வரவேண்டிப் பதிகம் பாடினார். திருமயிலைக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாவின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடி, இதையெல்லாம் ‘காணாதே போதியோ பூம்பாவாய்’ என்று பாடலை நிறைவு செய்து வந்தார். அவர் பாடப்பாட, பன்னிருவயது பருவப் பெண்ணாக உயிர் பெற்று எழுந்துவந்தாள் பூம்பாவை. இந்நிகழ்வு நடந்தது ஒரு தைப்பூச நாளில் என்று கூறுவர். பங்குனி உத்திரத் திருவிழாவின் போது, எட்டாம் நாள், அறுபத்து மூவர் புறப்பாட்டிற்கு முன், இந்நிகழ்வு ஐதீக விழாவாக கொண்டாடப்படுகிறது.
முருகப் பெருமானேதான் ஞானசம்பந்தராகத் தோன்றினான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்த அருணகிரிநாதர் எனவேதான், “பாடல் சொற்ற குமரேசா” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடியவேக
இயற்கை வளமும் செயற்கை அழகும் நிறைந்திருப்பது மயிலை என்று பாடுகிறார். இங்கு பலா மரங்கள் வானுயர நிற்கின்றன. தாமரை வாவிகள், ஓடைகள் காணப்படுகின்றன. வயல் வளமும் நிரம்ப உளது; அழகுள்ள மணிகள் பதிக்கப்பெற்ற மாடங்களும், சிறந்த அம் மாடங்களின் மேல் சிகரங்களும் உள்ளன. [இடம்பெயர்ந்த கோயிலை உடைய இத்தலம், முன்னிலும் சிறப்பாகவே மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.]
இத்தகு அழகு வாய்ந்த மயிலையில் வீற்றிருக்கும் தேவர் பெருமாளே! என்று விளித்து, “இந்த விரக சாலம் மூடிய குடிலாகிய உடம்பை எடுத்து மடியாமல், விளங்கும் மயில்மீது ஆறுமுகமும் வேலும் குவளை மலர் மாலை அணிந்த பன்னிரு தோள்களும் அடியேன் நேராக எதிரே காணும்படி வருவாயே என்று வேலனிடம் இறைஞ்சுகிறார்.
“வடிவுலாவி ஆகாச மிளிர் பலாவின் நீள்சோலை
வனச வாவி பூவோடை வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகரமோடு வாகான
மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே!”
“கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு
குடிலின் மேவியே நாளு மடியாதே
குலவு தோகை மீது ஆறுமுகமும் வேலும் ஈராறு
குவளை வாகும் நேர் காண வருவாயே”
(அடுத்த இதழில்…)
சித்ரா மூர்த்தி
The post திருப்புகழ் கடற்கரைத் தலங்கள் – திருமயிலை appeared first on Dinakaran.