பிறவிச் சூழலுக்குக் காரணமான ஆணவத்தை அடக்கி மிதித்து மேலெழ ஒட்டாமல் செய்து உயிர்களை பிறவிச் சூழலிலிருந்து விடுபடச் செய்வது இறைவனின் அருளாகும்.முயலகனின் செயல் அழிதலே மோட்சத்தின் வாயிலாகும். உலக நடப்பிற்கு மும்மலங்களே காரணமாக இருப்பதால், பஞ்சகிருத்திய தாண்டவங்களில் முயலகன் மகிழ்வுடன் இருப்பதாகவும், பாம்புடன் விளையாடிக் கொண்டிருப்பவனாகவும் காட்டப்படுகிறான்.
முயலகனை மனதில் விளையும் ஆசைகளாகவும் அவன் ஏந்தும் பாம்பை மும்மலங்களாகவும் கூறுவர். சில வடிவங்களில் முயலகன் இறைவனைச் சுட்டிக்காட்டிய வாறும் உள்ளான். இவனை அரக்கன் போலவும், கையில் கத்தி, கேடயம் ஏந்தியவனாகவும் அமைக்கின்றனர். இது தத்துவக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டதாகும். தட்சிணாமூர்த்தியின் காலடியிலும் மும்மலங்களின் வடிவான முயலகனை அமைக்கின்றனர். ஆணவம் அடங்கி நிற்கும் இடமே ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், தட்சிணாமூர்த்தியின் திருவடியிலும் இவனை அமைத்துள்ளனர் என்பர்.
சில தலங்களில் நடராசர் முயலகன் மீதின்றி மலர்ப் பீடத்தில் ஆடுவதைக் காண்கிறோம். இது ஆணவம் நீங்கிய நிலையில் உள்ள அன்பர்களின் இருதயத்தாமரையில் இறைவன் ஆடும் நடனமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் கொல்லி மழவன் என்ற அரசனின் மகளைப் பற்றி யிருந்த முயலகன் என்னும் நோயை நீக்கிய தலம் திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் திருத்தலமாகும்.
இத்தலத்திலுள்ள நடராசப் பெருமான் திருவடிவத்தில் ஊன்றிய திருவடியின்கீழ் முயலகன் இல்லை. இந்த நடராஜர் பாம்பின் மீது நடனமாடிக்கொண்டிருக்கின்றார். அவர் திருவடியின் கீழ் பாம்பின் படம் உள்ளது. பாம்பின் உடல் அவரது பின்காலில் படிந்துள்ளது. திருஞானசம்பந்தர் முயலகனின் நோயை நீக்கும் படி பாடிய போது நடராஜர் படிமத்திலிருந்த முயலகனும் நீங்கிவிட்டான் என்று கூறுவர்.
ஜெயசெல்வி