அவசரப்பட்டால் காரியம் ஆகாது!

வண்டி நிறைய தேங்காய்களுடன் ஒருவன் பயணித்துக் கொண்டிருந்தான். வேறு ஊரிலிருக்கும் கடைக்கு தேங்காய்களை அவன் கொடுக்க வேண்டும். அவனுக்கு அந்த ஊருக்கு சரியான வழி தெரியாது. அதனால் விசாரித்து போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி வழி கேட்டான். அவனுக்கு வழி சொன்னவர், ஒரு பெரியவர். ஒரு நேர் சாலையைக் காட்டி அந்த வழியாக போனால் முக்கால் மணி நேரத்தில் ஊரை அடைந்துவிடலாம் என்றார். உடனே வண்டியோட்டி நல்ல வேகமாக போனால் இன்னும் சீக்கிரமாக போய்விடலாமா என்று கேட்க, அந்தப் பெரியவர், ‘இல்லை. வேகமாக போனால் ஒன்றரை மணி நேரமாக்கிவிடும்’ என்று பதில் சொன்னார். வண்டியோட்டிக்கு எரிச்சலாகிவிட்டது. பெரியவர் தன்னை கிண்டலடிக்கிறார் என்று நினைத்தான். வண்டியை வேகமாக கிளப்பினான். நல்ல வேகத்தில் வண்டியை ஓட்டினான்.சாலை கரடு முரடாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் சொன்ன நேரத்துக்கு முன்பாக சென்றுவிட வேண்டும் என்று வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றான். ஒரு திருப்பத்தில் பள்ளம் ஒன்று இருக்க, இவனால் வண்டியை கட்டுப்படுத்த இயலவில்லை.

வண்டியில் ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்க, வண்டி சாய்ந்தது. தேங்காய்கள் சாலையில் சிதறி ஓடின. வேறுவழியில்லாமல் வண்டியை நிறுத்தி சிதறிக்கிடந்த தேங்காய்களையெல்லாம் எடுத்து வண்டியில் போட்டான். அத்தனையையும் எடுத்து அடுக்க அவனுக்கு அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அப்போது பெரியவர் எதை குறிப்பிட்டு நேரக் கணக்கு சொன்னார் என்பது அவனுக்கு உரைத்தது. இறைமக்களே, இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அவசரம், படிக்கிற பிள்ளைகளுக்கு சீக்கிரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்றும், படித்து முடித்த பிள்ளைகளுக்கு சீக்கிரத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றும், வேலை செய்பவர்களுக்கு சீக்கிரத்தில் நன்கு சம்பாத்தித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று எல்லாரும் அவசரப்படுகின்றனர். இவ் வளவு காரியங்கள் சீக்கிரத்தில் பெற்றுக்கொள்ள விரும்புகிற யாரும் தனக்கு சீக்கிரத்தில் வயதாக வேண்டும் என்று விரும்புவதில்லை.காரணம், வயதாக வயதாக பலம் குறைந்துவிடும் என்பதால்தான்.

எல்லாம் நாம் நினைப்பது போல சீக்கிரத்தில் நடந்துவிட்டால், எப்படி இருக்கும் என்று ஒரு வேதாகம உவமை இவ்வாறு கூறுகிறது. தான் ஏதும் சொந்தமாய் கஷ்டப்பட்டு சம்பாதிக்காமல் தன் தகப்பனுடைய ஆஸ்தியில் தனது பங்கை பெற்றுக்கொண்டு தன் தகப்பனை விட்டுப் பிரிந்து, தான் சீக்கிரத்தில் தன் தகப்பனைவிட பெரியவனாய் வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நடந்ததோ, தனக்குப் போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால், தான் கொண்டு சென்ற பணம் முழுவதும் செலவழிந்துவிட்டது. ஆம் நாட்கள் செல்ல செல்ல நம் அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நபர்களை, சூழ்நிலைகளை சந்திக்கும்போது நம் அனுபவம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதுவே சீக்கிரத்தில் எல்லாம் கிடைத்துவிட்டால் நமக்கு எந்த அனுபவமும் இல்லாத காரணத்தினால் எல்லாவற்றையும் இழக்கக் கூடிய நிலை ஏற்படும். எனவே எல்லாவற்றிற்கும் அனுபவம் மிக மிக முக்கியம். ‘‘நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம் பண்ணுகிறான்’’ (நீதி.14.2) என இறைவேதம் சொல்கிறது.

அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.

The post அவசரப்பட்டால் காரியம் ஆகாது! appeared first on Dinakaran.

Related Stories: