பகுதி 17
மதுரை சுல்தான் கியாஸ் உதீன் தம்கானி, டெல்லி சுல்தான் முகமதுபின் துக்ளக்கிடம் ஒரு சாதாரண குதிரைப்படைவீரனாக வேலைப்பார்த்தவன். காலப்போக்கில் டெல்லியை எதிர்த்து, தனியே பிரிந்து, மதுரையிலும், கண்ணூர் குப்பத்திலும் (இன்றைய சமயபுரம்) கோட்டைகளை அமைத்துக்கொண்டு ஆண்ட மதுரை சுல்தான்களில், சுல்தான் அலாவுதீன் உத்தௌஜியிடம் போர்த்தளபதியாக பணிபுரிந்தவன். திருவண்ணாமலைப் போரின்போது, சுல்தான் கொல்லப்பட்டதை, போர்க் களத்தில் உடனிருந்து பார்த்தவன்.
மன்னர் வீரவல்லாளனுடன் நடந்த அப்போரில், எங்கிருந்தோ வந்தவொரு அம்பு, தாகத்திற்கு தண்ணீரருந்த தலைக்கவசம் கழற்றிய சுல்தான் உத்தௌஜியை சாகடித்த கோபம் அவனுக்குள் இன்னும் மிச்சமிருந்தது. அந்தகோபம், அப்படியே பெரிதாகி மன்னர் வீரவல்லாளன்மீது திரும்பியிருந்தது. அதோடு, தனதரசுக்கு நிகராக, கிட்டத்தட்ட தென்னகத்தின் ஒரேபேரரசாக விளங்கிய ஹொய்சாலத்தின்மீது, அவனுக்கு பெரும்ஆத்திரம் இருந்தது.
அவனுக்கு ஏற்கனவே, தனதுஅரசினை இரண்டு இடங்களிலிருந்து நிர்வகிக்கிற, அதாவது, மதுரைசுல்தானியத்தின் தென்பகுதியை மதுரையிலிருந்தும், வடபகுதியை கண்ணூர்குப்பத்திலிருந்தும், ஆளுகிற அயர்ச்சியிருந்தது. அந்தஅயர்ச்சியின் காரணமாகவே மதுரைசுல்தான்படைகள், தொடர்ச்சியாக தோல்விகளைச்சந்தித்தன. ஆனால், சின்னஞ்சிறு அரசெல்லாம் மதுரைக்கெதிராக திரும்பியதற்கு முழுக்காரணம், வீரவல்லாளனின் படையுதவிகளே என அவன்நம்பினான். கடுமையாகப்போரிட்டு இழந்தப்பகுதிகளையெல்லாம் மீட்கத்தயாரான அவன், இம்முறை அருணையை தரையோடு தேய்த்து, நசுக்கிவிடவேண்டுமென வெறியானான். “அந்தகிழவனை கொடூரமாக தோலுரித்து கொல்லவேண்டும் என பல்லைக்கடித்தான்.
இவையெல்லாவற்றையும்விட, அருணையின் நான்குதிசைக்கும் கோபுரங்கள் எழுப்பப்படுவதும், அருணையின் சுற்றுவட்டாரத்து அமோகவிளைச்சல்களும், அந்தப்பலன்களால், சுற்றிலும் நிகழ்கின்ற கும்பாபிஷேக, திருவிழாக் கொண்டாட்டங்களும் தீவிர மதப்பற்றாளனான அவனுக்குள் எரிச்சலைத் தந்தன. அந்த எரிச்சலில், தன் ஆட்சிக்குட்பட்டிருந்த இடங்களில் வாழும் பெரும்பான்மையான மக்களது நம்பிக்கைகளில், காலம்தொட்டு தொடர்ந்துவந்த அவர்களின் சம்பிரதாயங்களில் அவன் கைவைத்தான். அவனது தனிப்பட்ட நம்பிக்கையை அவர்களிடம் வலுக்கட்டாயமாக திணித்தான். அதை எதிர்த்தவர்கள் மீது கடும்வரிகள் சுமத்தினான். குறிப்பாக, நிலவரியை கடுமையாக்கினான்.
மதமென்பது மனிதர்களை நெறிப்படுத்தவே. நேர்படுத்தவே. ஆனால், மதத்தால், மனிதனுக்கு மதம்பிடித்தால், உண்டாகும் பெரும் அக்கிரமங்களுக்கும், அநியாயங்களுக்கும், கியாஸ் உதீன் தம்கானி அடையாளமாகிப்போனான். சகோதர தத்துவத்தின் அடையாளமான ஒருமதத்தின் தலைகுனிவுக்கு அவன் காரணமானான்.நடக்கின்ற அக்கிரமங்களின் விவரங்கள், ஒற்றர்கள்மூலம் அருணசமுத்திரத்திற்கு வந்தவண்ணம் இருந்தது. அதைப்பற்றி விவாதிக்க நாள்குறிக்கப்பட்டது.
அவைப்புலவர் (மூன்றாம்) வித்யாசக்ரவர்த்தி எழுதிய “ருக்மணி கல்யாணம்” என்கிற நூலின் அரங்கேற்றத்திற்கு அவை கூடியது, ருக்மணி – கிருஷ்ணக்கல்யாணத்தை விவரித்த, அந்த கவிதைநடை நூல் தந்த தெய்வீகமனநிலையில் எல்லோரும் இருந்த போதும், இதை பேசியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில், அரங்கேற்றம் முடிந்தகையோடு, சபையில் சுல்தான் தம்கானியின் அக்கிரமங்கள் விவாதப் பொருளானது. “சரி, இந்த அரக்கனின் அட்டகாசத்தை எவ்விதம் தடுக்கலாம்” என விவாதித்தது. “இதை வளரவிடுதல் தகாது” என எச்சரித்தது. “தோற்றுப்போய் மதுரையிலிருந்து நகர்ந்து, சுருங்கி, தற்போது நெல்லையோடு ஒடுங்கிவிட்ட பாண்டியர்களுக்கு படை யுதவி செய்து போரிட செய்தாலென்ன?” என யோசனை கூறியது.
“வேண்டாம், இம்முறை நாமே கிளம்பிப்போய் நேரடியாக மதுரையைத்தாக்குவோம். வேண்டுமானால் பாண்டியர்கள் நம்மோடிணைந்து கொள்ளட்டும்” என ஆவேசமாக வாள்உயர்த்தியது.
மன்னர் வீரவல்லாளன் அனைத்தும்கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தார். சபையின் பேச்செல்லாம் காதுக்குள் விழுந்தாலும், அவர்நினைப்பில் விடிகாலையில் கண்டகனவே ஓடிக் கொண்டிருந்தது. அந்தவனம் ஒரே வேம்புக்காடாகியிருந்தது, வேப்பம்பூவின் வாசம் நாசியை துளைக்கிற வனத்துக்குள், தனியாளாக யாரையோ தேடிப்போகிற மன்னர், ஒரு வேப்பமரத்தடியில் ஒருகிழவி தலைகுனிந்து அமர்ந்திருப்பதைக் காண்கிறார், தும்பைப்பூவாய் தலைவெளுத்திருந்த அந்தக்கிழவியை நெருங்குகிறார். காலடிச்சத்தம் கேட்டு நிமிர்ந்துப்பார்த்த கிழவியின் முகம்முழுக்க சிவப்புகுங்குமமாய் அப்பிக்கிடப்பது கண்டு அதிர்ந்துபோகிறார். அந்தக்கிழவி, வேகவேகமாக பெருமூச்சுவிட்டபடி “ஏண்டா, நீகூட என்னிய கவனிக்காம கைவிட்டுட்டேல்ல.” என மூன்றுமுறை சொல்கிறாள். சொல்லும்போதே, கையூன்றி யெழுந்து தலையிலடித்துக்கொண்டே, வேம்புக்காட்டுக்குள் காணாமல்போகிறாள். அத்தோடு கனவு கலைந்துவிட்டது.
மன்னருக்குள் அந்த சிவப்புவண்ண முகமும், உருட்டும்விழிகளும், உள்ளங்கையகல குங்குமப் பொட்டும், கண்ணுக்குள்ளேயே இருந்தது. அப்படி முகம்முழுக்க சிவப்பாய் கண்ணூர்குப்பத்து (சமயபுரம்) மாரியம்மனை, அவர் சிறுவயதில் கண்டிருக்கிறார். எல்லா காளிபிரதிமைகளைப்போல, உக்கிரமாயில்லாமல், அழகாய்சிரிக்கும், எல்லைக் காளியவளின் புன்னகையில் மயங்கியிருக்கிறார். ஆனால், கண்ணூர்குப்பம் கைவிட்டுப்போனபின், அங்கு போகவில்லை. போகமுடியவில்லை. தன்தாத்தனால், சித்தப்பன் வீரராமனாதனுக்கு ஆட்சிப்பங்காக தரப்பட்டு, அதை சித்தப்பன் பாண்டியர்களிடம் இழந்து, பாண்டியர்களிடமிருந்து வடக்கத்தான்கள் கைப்பற்றி, இப்போது அவர்கள் கோட்டைக்கட்டி ஆளுகின்ற இடம் கண்ணூர்குப்பம். அதை முதலில் மீட்கவேண்டும்.
மன்னர் வீரவல்லாளன் தான் யோசித்ததை சபையில் பேச்சாக்கினார். “இப்போது மதுரைவேண்டாம். முதலில் கண்ணூர்குப்பம்” என்றார். சபை ஆர்ப்பரித்தது. ஆனால், “ஏன் கண்ணூர்குப்பம்?” என கேள்வியெழுப்பியது. மொத்தசபையையும் நோக்கி, பார்வையை சுழலவிட்ட மன்னர், “ஒரே காரணம், அது ஹொய்சாலத்தின் பூர்வீகம்” என்றார். (பெங்களூர் அருங்காட்சியகத்தில் அதற்கான சாட்சிகள் உண்டு). மன்னர் தொடர்ந்து பேசினார்;
“எனது தாத்தன் வீரசோமேசுவரனால் அமைக்கப் பெற்று, விக்கிரமபுரம் என பெயரிடப்பட்ட அந்த இடம், ஹொய்சாலத்தின் பூர்வீகம். ஒருவகையில் அது என்பாட்டன் சொத்து ஆட்சிப் பங்காக, என்சித்தப்பன் வீரராமநாதனுக்கு அளிக்கப்பட்ட இடம். அவரால் மிகச்சிறப்பாக ஆளப்பட்ட இடம். அவர் அதை பாண்டியர்களிடமிழந்து, காலப் போக்கில், பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றிய வடக்கத்தானின் ஆளுகைக்குள் இப்போது அதிருக்கிறது. அதைதான் முதலில் நாம் மீட்கவேண்டும். ஏனெனில், மீண்டும் சொல்கிறேன், கண்ணூர்குப்பம், ஹொய்சாலத்தின் பூர்வீகம்.”மன்னரின் பேச்சு முடிந்தபின், சிலநொடிகள் மௌனமாயிருந்த சபை, எழுந்துநின்று உற்சாகமாக கரவொலி எழுப்பியது. “வாழ்கமன்னர், வெல்க ஹொய்சாலம்” என ஆர்ப்பரித்தது.
தளபதி மாதப்ப தண்டநாயகர், ஆர்ப்பரித்த சபையை கையமர்த்தினார். சபை அமைதியானதும், “அப்போது அடுத்த நமதுதிட்டம்?” என மன்னரைப்பார்த்து கேள்வி எழுப்பினார். “அதை நீங்கள் முடிவுசெய்யுங்கள். எப்போது, எப்படி என்பதை தளபதிகள் திட்டமிடுங்கள். ஆனாலொன்று, இப்படையெடுப்பில் நான் முன்னிலைவகிப்பேன். பாட்டன் சொத்தை மீட்கும்போரில் பேரன் இல்லாவிட்டால் எப்படி? என கண்சிமிட்டி சிரித்தார். சபையினர் ஆர்ப்பரித்தனர். சல்லம்மா மட்டும் கவலையுடன் தன்சகோதரியைப்பார்த்தாள். காரணம், அவளுக்கு பலநாட்களுக்குமுன், தான் கண்டகனவு நினைவிற்கு வந்தது.
ஏற்கனவே கோபுரப் பணிகளால் பரபரப்பாகயிருந்த அருணை, போருக்கான வேலைகளை உற்சாகமாக முன்னெடுத்தது. நாலாபக்கமும் உத்தரவுகள் பறந்தன. ஆயுதப்பட்டறைகள் இடைவிடாது வேலைசெய்தன. படையுதவியாக அனுப்பியிருந்த வீரர்களில், மூன்றில் ஒருபங்கு வீரர்களை திரும்பிவரச் சொல்லி, கட்டளைகள் அனுப்பப்பட்டன. தூசிபறக்க, குதிரைகள் பறந்தவண்ணம் இருந்தன. தொடர்ச்சியான குளம்படியோசையில், அருணை திணறியது.
முடிவாக, போருக்கான படைகள் தயாரானது. தளபதிகள் பீமராயன், சிம்மரங்கனாதன், வீரசாந்த தண்டநாயகன் ஆகியோர் தலைமையில், மொத்தம் ஒருலட்சத்து இருபதாயிரம்வீரர்கள் தயாரானார்கள். ஆனால், அதிலொரு சிக்கலிருந்தது. படையில் இஸ்லாமியர்களும் இருந்தார்கள். (அவர்கள் மட்டும் இருபதாயிரம் பேர்). சுல்தான்படைகளை எதிர்ப்பதற்கு, இஸ்லாமியர்களை அழைத்துப்போவது சரியா? என்பதில், எல்லோர்க்கும் கொஞ்சம் குழப்பமிருந்தது. “பேசாமல் பாதுகாப்புபணிக்காக இருப்பவர்களோடு இவர் களையும் இங்கேயே விட்டுவிடலாமா?” என தளபதிகள் விவாதித்தார்கள். “அதெல்லாம் தேவையில்லை. அவர்களும் போர்க்களம் புகட்டும்” என்று யாரோவொரு மூத்த அமைச்சர் சமாதானப்படுத்த, எல்லோரும் எதிர்கேள்வி கேட்காது ஒத்துக்கொண்டார்கள். இறுதிவடிவாக, ஹொய்சாலம் போர்க்களம்காண கவசயுடை அணிந்து கிளம்பியது.
மன்னர் வீரவல்லாளனை சல்லம்மாவும், மல்லம்மாவும் ஆரத்தியெடுத்து, வீரத்திலகமிட்டு போர்க்களம் அனுப்பினார்கள். மல்லம்மா மட்டும் கண்கள்கலங்கினாள். மன்னர் அணைத்துக் கொள்ள, சமாதானமானாள். அந்தணர்கள் “ஜெய் விஜயீ பவ” என கோஷமிட, எல்லோரிடமும் பார்வையால் விடைபெற்றுக் கொண்டு மன்னர் கிளம்பினார்.
தளபதிகள் சூழ, குதிரையிலமர்ந்து கம்பீரமாக, எண்பது வயதிலிலும் தளராது, போர்களம் புகுகின்ற மன்னரை, வழிநெடுக பூக்கள்தூவி மக்கள் வாழ்த்தினர். ஊரெல்லைவரை மெதுவாக ஊர்ந்து நடந்த ஹொய்சாலத்துப்படை, எல்லையை கடந்ததும், ஆக்ரோசமான நடைநடந்து, கண்ணூர்குப்பம் நோக்கி வேகமாக நகர்ந்தது. மூன்றுநாள் பயணத்தில் கண்ணூர்குப்பத்து
கோட்டையை நெருங்கியது.
கோட்டைமதில் மேலிருந்த சுல்தான்படைக்காவலன், கடலலைபோல திரண்டு வருகிற ஹொய்சாலத்து படைகளைக்கண்டு மிரண்டுபோனான். “ஹுசூர், ஹூசூர். ஆபத்து ஆபத்து” என அலறினான். அவன் கைகாட்டிய திசையைப்பார்த்த மற்றவீரர்கள் பதறினார்கள். “கோட்டைக்கதவை மூடுங்கள்” என எல்லோரும் மொத்தமாக அலறினார்கள். பெரும்சப்தத்துடன் கோட்டைக்கதவை இழுத்துமூடினார்கள்.
பொறுப்பிலிருந்த சுல்தானின் படைத்தளபதிகள் அவசரஅவசரமாக கூடிப்பேசினார்கள். தேனீக்கூட்டம்போல, திரண்டு வந்திருக்கிறார்கள்” என்றார்கள். “நம்மிடம் இருப்பதோ வெறும் மூவாயிரம் படைவீரர்கள். ஆனால், வந்திருப்பதைப்பார்த்தால் லட்சம்பேர் மேலிருக்கும். எதிர்த்தோமென்றால், கரும்பாலையில் சிக்கிய நிலைதான்’ என எச்சில் விழுங்கினார்கள். “உதவிகேட்டு மதுரைக்கு தகவல் அனுப்பலாமேன்றால், இவர்களைமீறி ஒருதுரும்புகூட தாண்டமுடியாது போலிருக்கிறதே” குழப்பத்தில் புலம்பினார்கள்.
ஆனால், ஆடிஅசைந்துவரும் திருவிழாயானையாய், கோட்டையை நெருங்கிய மன்னர் வீரவல்லாளனின் படை, சம்பிரதாயத்திற்கு கோட்டையை நோக்கி, அம்புகள் எய்தியது. எதிர்ப்புகள் எதுவும் வராத நிலையில், எதிரிலேயே கூடாரமிட்டது. அமைதியாக ஓய்வெடுத்தது. மன்னருக்குள் ஒரு திட்டமிருந்தது. ஆனால், காலம் வேறொரு திட்டம் வைத்திருந்தது.
(அடுத்தஇதழில் முடியும்…)
குமரன் லோகபிரியா
The post ராஜகோபுர மனசு (வல்லாள கோபுரக் கதை) appeared first on Dinakaran.