கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா
சென்ற இதழின் தொடர்ச்சி…
இதே மனதும் வெளிப்புறமாக செல் கிறதே. Internalஆக கொண்டு போவதற்கு மந்திரம் இருக்கிறது. ஆனால், external ஆக செல்லும் மனதை எப்படித் திருப்புவது. அப்படி வெளியே செல்லும் மனதிற்கு வேறு வழியே இல்லையா. இதற்கு வழி என்னவெனில், அம்பிகையே இதற்கொரு வழியை காண்பிக்கிறாள்.
மந்த்ரிணீயாக இருக்கக் கூடியவள் எங்கு இருக்கிறாளெனில், சங்கீதமாக இருக்கக் கூடிய கேயசக்ர ராஜ ரதத்திலிருக்கிறாள். இங்கு வெளிப்புறமாக மனசு போகும்போது அந்த external ஆக செல்லும் மனதை internal ஆக திருப்புவதற்கு என்ன நடக்கிறதெனில், நாம சங்கீர்த் தனம் என்கிற பெரிய விஷயத்தை அம்பாள் அளிக்கிறாள். கீதத்தினுடைய முக்கியத்துவத்தை அம்பாள் இங்கு காண்பித்துக் கொடுக்கிறாள். அதனால்தான் அம்பாள் சங்கீத யோகினியாக இருக்கிறாள். வெளியில் செல்கிறதா மனம்…
பரவாயில்லை போகட்டும்… இதை எப்படி உள்முகமாக மாற்ற வேண்டுமெனில், அம்பாளினுடைய சங்கீத சொரூபமான நாம சங்கீர்த்தனம் மூலமாக மனதை உள்நோக்கித் திருப்ப வேண்டும். அதற்குப் பிறகு மூலமந்திர ஜபத்தில் வைத்து மந்த்ரிணீயிடம் கொண்டுபோய் ஒடுக்க வேண்டும் என்பது பிற்பாடான செயலாகும்.
முதலில் வெளியே செல்லும் மனதை உள்ளே திருப்புவது எதுவெனில், சங்கீதம், நாம சங்கீர்த்தனம் போன்ற விஷயங்கள் நம்மை உள்முகமாகத் திருப்புகிறது. அதனால்தான் கலியுகத்தில் மிகவும் பிரசித்தமான மார்க்கம் நாம சங்கீர்த்தனமாகும். நாம சங்கீர்த்தனம் என்பது ஏதோ சாதாரணமானது இல்லை. ஏதோ பஜனை. ஏதோ பாட்டு. இந்த பஜனையும் நாமசங்கீர்த்தனமுமே நம் மனதை உள்நோக்கித் திருப்பமுடியும். அப்படி உள்நோக்கி திரும்பிய மனம்தான் மூல மந்திரத்தில் சென்று உட்காரமுடியும். அப்போது மூல மந்திரத்திற்கு நம்மை கொண்டுபோவது எதுவெனில், நாம சங்கீர்த்தனம் போன்ற விஷயங்கள். இந்த நாம சங்கீர்த்தனம், சங்கீதம் போன்ற விஷயங்களுக்கெல்லாம் அதிதேவதை யாரெனில் மாதங்கி. அந்த மாதங்கியினுடைய சக்ரம் எப்படி இருக்கிறது. கேய சக்ரமாக இருக்கிறது. சங்கீதமே வடிவான ஒரு ரதமாக இருக்கிறது. சங்கீதத்திற்கு உருவமில்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கொரு உருவம் அளித்தால் அந்த உருவமே கேய சக்ர ராஜ ரதம்.
இப்போது ஒரு சாதகன் உபாசனையில் இருக்கும்போது நம்முடைய வாக்கு பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்று வெளிநோக்கிப் போகும். பேசும்போது வெளிநோக்கி வருகிறது. அதே வாக்கு ஜபம் பண்ணும்போது உள் முகமாக
திரும்பும். வைகரீ என்கிற வாக்கு, மத்யமா… பச்யந்தி… பராவிற்கு போகும்.
இங்கு மந்த்ரிணீ காண்பித்துக் கொடுக்கக் கூடிய விஷயம் என்னவெனில், ஒரு உபாசகனுடைய வாக்கு வெளிநோக்கி வந்ததெனில், அது நாம சங்கீர்த்தனமாக இருக்கும். அதே உபாசகனுடைய வாக்கு உள்நோக்கிப் போனால், அது மந்த்ரமாக இருக்கும். வெளிநோக்கி வந்தால் நாம சங்கீர்த்தனம். உள்நோக்கிப் போனால் மந்த்ரம். இந்த இரண்டுக்கும் அதிதேவதை யாரெனில் மந்த்ரிணீ.
அப்போது, இவனுடைய வாக்கும் மனசும் வெளிப்புறமாக ஓடினால் நாம சங்கீர்த்தனம் என்கிற சாதனை இருக்கிறது. உள்முகமாக சென்றாலும் மந்திர சித்தி என்கிற சாதனை இருக்கிறது. அப்போது அம்பாள் வெளிப்புறமாக ஓடுகிறாயா… ஓடு. நாம சங்கீர்த்தனத்தைப் பிடித்துக்கொண்டு வந்துவிடலாம். உள்முகமாக போகிறயா போ. மூலமந்திரத்தைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்துவிடலாம். நமக்கு இரண்டு பக்கமும் அம்பிகை எப்படியொரு பாதுகாப்பு கொடுத்திருக்கிறாள் பாருங்கள்.
இப்படி இரண்டு பக்கமும் பாதுகாப்பு இருப்பதால் பண்டாசுரனால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?
பாபாவாகட்டும், ஞானானந்த கிரியாகட்டும்… இந்த கலியுகத்திற்கான மார்க்கமாக நாமசங்கீர்த்தனத்தை சொல்கிறார்கள். நம்முடைய மனம் எல்லா நேரமும் உள்முகமாக இருக்காது. எல்லா நேரமும் வெளிப்புறமாகவும் இருக்காது. உதாரணமாக, நம்முடைய கழுத்தில் தாயத்து ஒன்று போடுவோம் அல்லவா? அந்த தாயத்திற்குள் ஏதாவது விபூதியோ அல்லது யந்த்ரமோ வைத்து, இரண்டு பக்கமும் தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ மூடிப்போடுவார்கள். இந்தப் பக்கமும் போக முடியாது. அந்தப் பக்கமும் போக முடியாது. ராஜ மாதங்கி என்ன செய்கிறாளெனில், நம்முடைய மனம் எப்போது வெளிப்புறமாகச் செல்கிறதோ அங்கு நாம சங்கீர்த்தனம் என்கிற சாதனையை வைக்கிறாள். எப்போதெல்லாம் உள்முகமாக இருக்கிறதோ அங்கு மந்த்ர ஜபம் என்கிற சாதனையை வைக்கிறாள்.
அதனால்தான், எந்த மகான்களை எடுத்துக் கொண்டாலும் சரிதான். மகாராஷ்டிரத்தில் வார்கரி சம்பிரதாயத்தில் இருப்பவர்கள் என்றாலும், வெளியே பஜனை நாமசங்கீர்த்தனம் என்றெல்லாமும் இருக்கும். கூடவே, ராமகிருஷ்ண ஹரி என்கிற மூலமந்திர ஜபத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டே இருப்பார்கள். பாபாவை எடுத்துக்கொண்டாலும் சரிதான். எத்தனையோ பஜனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், தனிப்பட்ட முறையில் சாயி… சாயி… என்று மூலமந்திரத்தை ஜபம் செய்யச் சொல்லியிருக்கிறார்.
இதுபோல் எத்தனை மகான்களாக இருந்தாலும், வெளியே பிரசித்தியாக நாமசங்கீர்த்தனம் இருக்கும். திருவையாறு தியாகராஜ சுவாமிகள் எவ்வளவு கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். அப்படியே உள்ளே பார்த்தால் ஒரு மந்திரம் இருக்கும். அதுவே ராமமந்திர ஜபம். இதை அவர் 96 கோடி முறை ஜபித்தார். அப்போது ராம நாமம் என்கிற ஜபம் உள்ளே ஓடுகின்றது. சங்கீதம் வெளியே வருகின்றது.
முத்துஸ்வாமி தீட்சிதர் அத்தனை கீர்த்தனைகளை அளித்திருக்கிறார். ஆனால், உள்முகமாகப் பார்த்தால் வித்யா மந்த்ர உபாசனை. ஸ்ரீவித்யா மந்த்ர சித்தி. சியாமா சாஸ்திரிகள் காமாட்சி மந்திர ஜபமும் வெளியே கீர்த்தனையாகவும் பொங்கி வந்ததை நாம் அறியலாம்.
இப்போது நாம் சொன்ன இந்த சங்கீத மும்மூர்த்திகளுக்கெல்லாம் என்ன பெயர் தெரியுமா?
வாக்கேயக்காரர்கள் என்று பெயர். இதில்தான் முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் இசையை compose செய்வார். ஒரு புலவர், கவிதை சொல்லுவார். பாட்டையும் சொல்லுவார். இவர்கள் இருவரும் பாட்டையும் இசையையும் இணைப்பார்கள். ஆனால், தியாகராஜரோ, முத்துசாமி தீட்சிதரோ, புரந்தரதாசரோ அப்படி செய்தார்களா என்ன? இல்லையே… இசை அமைத்துவிட்டா எழுதினார்கள். கிடையாது. அவர்கள் வாய்திறந்து என்ன சொன்னார்களோ அதுவே சங்கீதமாகி விட்டது. கவனியுங்கள்… வாக்கே இங்கு கேயமாகி விட்டது. கேய சக்ர ரதமல்லவா நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். கேயம் என்றால் பாட்டு என்றல்லவா பொருள். யாருடைய வாக்கு கேயமாகின்றதோ அவர்களெல்லாரும் வாக்கேயக்காரர்கள். அவர்களுடைய வாக்கே பாட்டாக பரிமளித்து, கீர்த்தனைகளாக கொட்டுகின்றது. இப்படி கொடுத்தவர்கள் எல்லாருமே மந்திர சித்தியோடும் இருந்தார்கள்.
அதனால்தான், இந்த வாக்கேயக்காரர்களான சங்கீதத்தை உபாசனை செய்கிறவர்களுக்கெல்லாம் அதிதேவதை யாரெனில் ராஜமாதங்கி. சங்கீதம் என்றாலே நாம் மும்மூர்த்திகள்தானே. கூடவே அம்பிகை பிரசித்தியை கொடுத்து. நாமசங்கீர்த்தனையின் வடிவாக இருக்கும் கீர்த்தனைகளையும் அளித்து, மந்திர வடிவாக இருக்கும் உள்ளே ஜபிக்க மந்த்ரத்தையும் கொடுக்கிறாள்.
இதுதான் இந்த நாமத்தினுடைய உள்ளார்ந்த பொருள். மீண்டும் மீண்டும் படித்தும் கேட்டும் புரிந்து கொண்டால் மந்திரமும் நாம சங்கீர்த்தனமும் எத்தனை உயர்ந்த விஷயங்களென்று நமக்குப் புரியும்.
இதற்கான கோயிலாக ராஜ மாதங்கி என்று வருவதால் மதுரை மீனாட்சியை சொல்லலாம். ஆனாலும், இந்த நாமமானது நாத உபாசனையாக இருப்பதால், திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகியை இந்த நாமத்திற்கான அம்பாளாகச் சொல்லலாம்.
திருஞானசம்மந்தர் சீர்காழியில் தோடுடைய செவியன்… என்று பாடி விடுகிறார். தோடுடைய செவியன்.. என்பது ஞானசம்மந்தரின் வாக்கு. அதற்கு அடுத்து இரண்டாவது பதிகத்தை திருக்கோலக்காவில் கையைத் தட்டிக் கொண்டு கரத் தாளமிட்டுக் கொண்டே பாடுகிறார். அப்போது அம்பாள் இதை கவனித்துவிட்டு, இப்படி கையைத் தட்டினால் குழந்தையினுடைய கைகள் சிவந்து போகுமே என்று சுவாமி பொன்னால் செய்த தாளத்தை கொடுக்கிறார். அந்த பொற் தாளத்தில் சத்தம், ஓசை வரவில்லை. அப்போது சுவாமி அம்பிகையை பார்க்க அம்பிகையானவள் அந்த பொன்தாளத்திற்கு – பொற்றாளத்திற்கு அம்பாள் ஓசை கொடுக்கிறாள். அதனால்தான் அம்பாளுக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். ஈசனுக்கு சப்தபுரீஸ்வரர். திருத்தாளமுடையார் என்று பெயர்.
முதலில் தோடுடைய செவியன் என்கிற வாக்கு இருந்தது. அந்த வாக்கிற்கு அம்பாள் ஓசை அளித்தாள். அந்த வாக்கே இங்கு கேயமாக அதாவது இசையோடு சேர்ந்த பாடலாக மாறிவிட்டது. சீர்காழிக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.
(சுழலும்)
The post சங்கீத வடிவில் எழுந்தருளும் நாயகி! appeared first on Dinakaran.