இக்கூற்று இன்றுவரை அப்படியே உண்மையாக இருக்கிறது என்பதை ஸ்பஷ்டமாகக் காணமுடிகிறது. மனித வாழ்க்கை என்னும் பிரவாகத்தில் எப்போதும் கலந்து பிரவகித்து அதன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வார்த்தைக்கு எட்டாத தெய்வீக சக்தி ராமாயணத்தில் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பரிபூரண மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று நடந்து காட்டிய அவதாரம் ஸ்ரீராமர். இவரைச் சிலர் தெய்வமென்றனர். சிலர் ஆதர்ச மனிதர் என்றனர். இன்னும் சிலர் வேறுவிதமாகவும் வர்ணித்தனர். அப்படியானால், ஸ்ரீராமரின் உண்மைத் தத்துவம் என்ன? வால்மீகியின் இதயப்படி…
பரிபூரண மனிதன் எப்படி இருக்க வேண்டுமோ, தர்மத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டுமோ எடுத்துக் காட்டுவதற்காக அவதரித்த ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமன். வழிபட வேண்டியவனும் அவனே. வழிகாட்டக் கூடியவனும் அவனே. ‘ராம’ என்ற நாமம் ‘தாரக மந்திரம்’. ‘மோட்சத்தை அளிக்கக்கூடிய திவ்விய மந்திரம் ராம நாமம்’.இந்த நாமத்தின் பொருள் – ‘ரமணீயத்வாத் ராம:’ சௌந்தர்யமே ராமன்.’ இது வெறும் உருவ அழகு மட்டுமேயல்ல; குணம், மகிமை, நடத்தை (சரித்திரம்) இந்த அழகு களெல்லாம் ராமனிலேயே உள்ளன.
‘ராம’ நாமத்தில் ‘ர + அ + ம’ என்று மூன்று எழுத்துக்கள் அக்னி பீஜத்தையும் சூரிய பீஜத்தையும் சந்திர பீஜத்தையும் காட்டுகின்றன என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.இம்மூன்றும் ஸ்ரூஷ்டிக்கு மூலமான தேஜஸ்ஸூகள். படைப்புக்குக் காரணமான பிரதான சைதன்யம், சூரிய, சந்திர, அக்னியாக விஸ்தரித்துள்ளது. அதனால்தான் பரமேஸ்வனைக் குறிப்பிடும் நாமம் ‘ராமா’. ‘பும்ஸாம் மோஹன ரூபாய’ – ‘புருஷர்களையும் மோகிக்கச் செய்யும் உருவம்’ என்பார்கள். இங்கு ‘புருஷர்’ என்ற சொல் ‘ஆண்களைக் குறிப்பதல்ல. வால்மீகி மகரிஷி அயோத்தியா காண்டத்தில் ‘ரூபௌதார்ய குணை. பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப ஹாரிணிம்’ என்று வர்ணிக்கிறார். ‘தன் உருவம் உதாரகுணம் போன்ற சுபாவமான குணங்களால் புருஷர்களின் பார்வையையும் மனதையும், கவர்ந்தவர்’.
இந்த ‘புருஷர்’ என்ற சொல் ‘சகல ஜீவர்களையும்’ குறிக்கிறது. ‘சர்வ பிராணிகளுக்கும் மனோகரமானவன்’ என்பது சரியான பொருள். அனுமான்கூட ஸ்ரீராமனை வர்ணிக்கையில், ‘ராம: கமல பத்ராக்ஷ சர்வ சத்வ மனோஹர:’ என்று போற்றுகிறார். (சுந்தரகாண்டம்) ராம சரித்திரம் தெய்வீக தத்துவத்தை உள்ளுறையாகக் கொண்ட தர்மத்தின் வைபவம்.
‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்று மாரீசன்கூட புகழ்ந்தான். தர்மம் ஸ்தூலமாக மட்டுமின்றி சூட்சும ரகசியங்களையும் கொண்டதாக உள்ளது. அந்த சூட்சுமங்களை ஆராய்ந்தால் பரிபூரண தர்மம் ஸ்ரீராமனின் நடத்தையில் காணப்படுகிறது; சீதாதேவியின் நடத்தையில் வெளிப்படுகிறது. ராமனின் பெயர் ஜபம் செய்வதற்கேற்ற மந்திரம், ராமனின் ரூபம் தியானம் செய்வதற்கேற்ற தெய்வீக உருவம். ராமனின் சரித்திரம் (நடத்தை) அனுசரிக்கக்கூடிய ஆதர்சம். இம்மூன்றுமே மனித இனத்திற்கு இகமும் பரமும் அளிக்கக் கூடியவை.
தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்
The post வழிபடத் தகுந்தவன் வழிகாட்டத் தகுந்தவன் ஸ்ரீராமன் appeared first on Dinakaran.
