திருவாரூர் ஆழித்தேர்

7-4-2025

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும், கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித் தேரானது ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்குப் புறத்திலுள்ள கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆழித் தேரோட்டம் என்பது ஆரம்ப காலத்தில் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன்பின்னர் காலப் போக்கில் நிர்வாக வசதி மற்றும் பொருளாதார வசதியை கணக்கில் கொண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்டுவந்ததது. இந்த ஆழித் தேரோட்டத்தை ஐதீக முறைப்படி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்தான் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரையில் தொடர்ந்து 4 ஆண்டு காலமாக பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பாண்டிலும் இந்த பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமானது ஏப்ரல், 7ம் தேதி வரும் நிலையில் இந்த தேதியில் தேரோட்டம் நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு தேர் கட்டுமானம், பந்தல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பங்குனி உத்திர பெருவிழாவானது வழக்கமாக தைப் பூசம் நாளில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கும் நிலையில் நடப்பாண்டில் கடந்த மாதம் 11ந் தேதி பந்தக்கால் முகூர்த்தமானது நடைபெற்றது. மஹா துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சியும் கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டம் என்பது அடுத்த மாதம் 7ந் தேதி காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

ஆழித்தேர் சிறப்பு

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரானது மற்ற ஊர் தேர்களைப்போல் எண்பட்டை அறுகோணம், வட்ட வடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது, நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4 அடி உயரமும், 3வது பகுதி 3 அடி உயரமும் கொண்டதாகும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடைப் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகராஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம்.

சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும். தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மரக் குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி ‘ஆரூரா தியாகேசா’என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க ஆழித்தேர் நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தேரில் பொருத்தப்படும் 68 பொம்மைகள்

அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பாக 4 மரக் குதிரைகள், ரிஷபம் 8, யாளம் 2, பாம்பு யாளம் 1, பிர்மா 1, துவாரபாலகர் 2, கமாய் கால் 2, மேல் கிராதி 4, கீழ் கிராதி 2, பெரிய கத்தி கேடயம் 2, பூக்குடம் 16, ராஜாராணி 2, கிழவன் கிழவி 2, சுருட்டி 4, இலை 8, பின்பக்கம் காமாய்கால் 6, அம்பராத்தோணி 2 என மொத்தம் 68 வகையான பொம்மைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

செல்வம் செழிப்பதற்காக மகாலட்சுமி குபேர பூஜை

இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனையொட்டி உற்சவரான தியாகராஜருக்கு பதில் இந்திரன் பூஜித்த மரகத லிங்கத்திற்கு தினந்தோறும் 3 வேளை அபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 9 நவக்கிரகங்களும், தியாகராஜரின் விழிக்கு கட்டுப்பட்டு ஒரே நேர்க்கோட்டில் தென்திசை மற்றும் தியாகராஜசுவாமி சந்நதி நோக்கி இருக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 மிகப்பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தகிணறுகள், 3 நந்தவனங்கள், 3 மிகப்பெரிய பிரகாரம், 365 லிங்கங்கள் கொண்ட இக்கோயிலில் உற்சவரான தியாகராஜருக்கு அடுத்தபடியாக கமலாம்பாள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சந்நதிகள் இருந்து வருகின்றன. இதில் 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் நவக்கிரக சந்நதி அருகே மகாலட்சுமி சந்நதி இருந்து வருகிறது.

இந்த மகாலட்சுமியை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு செல்வம் செழிப்பதற்காக வழிபடுவது வழக்கம். நாடும், பொது மக்களும் செல்வத்தில் சிறந்து விளங்குவதற்காக இந்த மகாலட்சுமிக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசிமாத அமாவாசை தினத்தில் குபேர பூஜை எனப்படும் சிறப்பு பூஜை நடைபெறும். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகாலட்சுமியை வழிபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

தியாகராஜருக்கு உகந்த ஆயில்ய நட்சத்திரம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்த இந்த ஆழித்தேரோட்டம் கடந்த 1927ம் ஆண்டு தேரோட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தேர் முற்றிலுமாக எரிந்தது. பின்னர் 1930ல் புதிய தேர் உருவாக்கப்பட்டு 1948 வரையில் நடைபெற்ற நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேரோட்டம் என்பது முற்றிலுமாக தடைப்பட்டது. அதன்பின்னர் வடபாதிமங்கலம் தியாகராஜமுதலியார் பெரும் முயற்சி காரணமாக 1970ல் முதல்வராக பொறுப்பேற்ற மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 22 ஆண்டு காலமாக ஓடாத தேரை ஓட்டிக் காண்பித்தார்.

பின்னர் தொடர்ந்து இந்த தேரோட்டமானது நடைபெற்றாலும் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில்தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, கடந்த 1990, 91 மற்றும் 1993ம் ஆண்டுகளில் இதுபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பங்குனிமாத ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த ஆழித் தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தேரோடும் 4 வீதிகளில் சிமெண்ட் சாலை

கலைஞர் அவர்கள் முதல்வரான பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக தமிழகத்திலுள்ள ஆயிரக் கணக்கான கோயில்களுக்கு குடமுழுக்கு, புதிய தேர்கள் என எண்ணற்ற பணிகள் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தார். திமுக ஆட்சி காலத்தின் போது ஆண்டுதோறும் இந்த ஆழித் தேரோட்டத்திற்கு நிதியுதவி அளித்து வந்த நிலையில், 2006 முதல் 2011ம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஆட்சிக் காலத்தில் இந்த ஆழித்தேருக்கு ரூ.2 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு தேர் புதிதாக செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு முறையும் ஆழித் தேரோட்டத்தின் போது தேரோடும் 4 வீதிகளிலும் சாலை சேதமடைவதைக் கருத்தில் கொண்டு ரூ. 6 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலையானது உரிய தரத்துடன் இருந்து வருவதால் ஆழித் தேரானது எந்த இடத்திலும் சிக்காமல் சென்று வரும் நிலையில் தற்போதைய முதல்வராக உள்ள மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால், இந்தச் சாலையானது மேலும் அகலப்படுத்தும் வகையில் இரண்டரை கோடி மதிப்பில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதைவட மின் பாதை

ஆழித் தேரோட்டத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆழித்தேர் செல்லும் பாதைகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. உலகபுகழ்பெற்ற இந்த தேரோட்டத்திற்காக தேரோடும் 4 வீதிகளிலும் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து செல்லும் நிலையில் இதுபோன்ற மின்சாரம் நிறுத்தப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பினை கருத்தில் கொண்டு தேரோடும்
4 வீதிகள் மற்றும் கோயிலில் இருந்து தேருக்கு தியாகராஜசுவாமி எழுந்தருளும் சந்நதி தெரு ஆகியவற்றில் புதைவட மின் பாதை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலம் சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து இந்த 4 வீதிகள் மற்றும் சந்நதி தெரு என மொத்தம் 2.48 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு கோடியே நாற்பத்தெட்டு லட்சம் மதிப்பில் உயர் அழுத்த மின்பாதை மற்றும் தாழ்வழுத்த மின்பாதைக்கான புதைவட மின்பாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: D. முரளி

The post திருவாரூர் ஆழித்தேர் appeared first on Dinakaran.

Related Stories: