5.4.2025 – சனி அசோகாஷ்டமி
பொதுவாக அஷ்டமி என்றாலே கஷ்டம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த அஷ்டமி கஷ்டத்தைப் போக்கும் அஷ்டமி. சோகத்தை தீர்க்கும் அஷ்டமி. சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச் சோலையிலே சிறை வைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளைச் சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம். (சோகத்தைத் தணித்த மரம்) அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச்செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது.
அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோக மரங்களை நோக்கி, “என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். “அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது. “எனக்கேட்க, சீதாதேவியும் “மருதாணிமரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.
ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும். பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர்செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.
6.4.2025 – ஞாயிறு ஸ்ரீராம நவமி
பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புபூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும், பல கோயில்களில், ராம பஜனைகள் நடைபெறும். ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி. நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீராமநவமி தினத்தில் பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயாசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
7.4.2025 – திங்கள் முனையடுவார் நாயனார் குருபூஜை
முனையடுவார் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். சிவபெருமான் திருவடியில் பேரன்புடையவர். பகைவர்களைப் போர் முனையில் வென்று பெற்ற செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர். “போர்முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியார்க்கு அமுதளித்தல் பெரும்பேறாம்’’ என்ற சிந்தை உடையவர். வாய்மை உடையவர்; போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் செல்வமும் உணவும் தந்து உபசரிப்பவர். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் சிவனடியார்களுக்கான தொண்டுபுரிந்திருந்து உமை யொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார். முனையடுவார் நாயனார் குருபூசை நாள்; பங்குனிப் பூசம்.
7.4.2025 – திங்கள் தர்மராஜா தசமி
இன்று தர்மராஜா தசமி. பங்குனி அமாவாசைக்கு பிறகு வரும் தசமி தர்மராஜா தசமி என்று கொண்டாடப்படுகிறது. இதற்கான கோயில் வலங்கைமான் நரிக்குடி கிராமத்தில் உள்ளது புவனேஸ்வரி சமேத கோயிலில் இவ்விழா சிறப்பாக நடைபெறும். பல்வேறு நோய்களிலிருந்து விடுபடவும் மரண பயத்தை நீக்கவும் இந்த நாளில் விரதம் இருந்து தர்மராஜாவையும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கலாம்
8.4.2025 – செவ்வாய் ஏகாதசி
சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி “காமதா ஏகாதசி” என்று போற்றப்படுகிறது. காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி. இந்த ஏகாதசி பலனை புரிந்துகொள்வதற்கு ஒரு கதை உண்டு. ஒரு காலத்தில் நாகலோகத்தில் போகீபூர் என்னும் நகரத்தை புண்டரீகன் என்கிற நாகராஜன் ஆட்சி செய்து வந்தான். அங்கு தன் விருப்பப்படி தங்கள் உருவத்தை மாற்றிக்கொண்டு வாழக்கூடிய அப்சரஸ்கள் இருந்தனர். லலிதன் என்ற கந்தர்வனும் லலிதா என்கின்ற அப்சரஸ் பெண்ணும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
லலிதன் கந்தர்வ கானத்தில் சிறந்தவன். அவன் நாகராஜன் சபைக்குச் சென்று பாடினான். அவருடைய பாட்டு அற்புதமாக இருந்தது. ஆனால் திடீரென்று அவனுடைய எண்ணம் தன் மனைவியான லலிதாவின் மீது செல்லும் பொழுது கவனக்குறைவாக பாட்டில் ஸ்வரம் பிசகி தாளம் தட்டியது. புண்டரீகன் உடனடியாக மிகுந்த கோபம் கொண்டு “நீ காம பரவசனாகி, சங்கீதத்தை அவமதித்துவிட்டாய். எனவே நீ அரக்கனாக போக வேண்டும்’’ என்று சபித்துவிட்டான்.
உடனே லலிதனுக்கு அரக்க உருவம் உண்டாகிவிட்டது. அவருடைய வாய் மிகவும் மோசமான முறையில் கோர வடிவம் கொண்டதாக ஆகிவிட்டது. மிகுந்த துயரத்தை அடைந்தான். இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட லலிதா ஓடிவந்தாள். தன் கணவனுக்கு நேர்ந்த சோதனையைக் கேட்டு வருந்தினாள். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்பதை முனிவர்களிடம் கேட்கலாம் என்று காட்டுக்குச் சென்றாள். அங்கே சிருங்கி முனிவரைப் பார்த்து நடந்த செய்திகளைச் சொல்லி, இதற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று கேட்க, அந்த முனிவர் சொன்னார்;
“சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசியில் விரதமிருந்து முறையாக எம்பெருமானைப் பாடி, துவாதசியில் அந்தணர்களை அழைத்து தானம் செய்து, அவர்கள் முன்னிலையில் ஏகாதசி பலனை உன் கணவனுக்கு பிராயச்சித்தமாக தத்தம் செய்து கொடுத்தால், அவன் பழைய உருவத்தில் மீண்டு வருவான்’’ என்று சொல்ல, அப்படியே அவள் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தாள். ஏகாதசி விரதம் ஆரம்பித்து, ஏகாதசி முழுக்க எதுவும் உண்ணாமல், எம்பெருமானை நினைத்து, அவருடைய மந்திரங்களை ஜபம் செய்துகொண்டிருந்தாள். இரவெல்லாம் கண்விழித்து எம்பெருமானைப் பாடினாள். மறுநாள் அந்தணர்களை அழைத்து ஏகாதசி உபவாசத்தின் பலனை கணவரின் “சாப நிவர்த்திக்காக அர்ப்பணம் செய்கிறேன்” என்று சங்கல்பம் செய்து அர்ப்பணித்தாள்.
அடுத்த நிமிடம், கணவனுடைய கோர அரக்க உருவம் நீங்கி பேரழகனாக மாறினான். ஒரு தங்க விமானம் வர, அதில் ஏறிக் கொண்டு அவர்கள் மகிழ்வுடன் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். எந்த தோஷத்தையும் நீக்கி மங்கலங்களை செய்யக் கூடியது இந்த காமதா ஏகாதசி என்பது இதில் இருந்து தெரிகிறது.
9.4.2025 – புதன் அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் பூக்குழி விழா
புகழ் பெற்ற அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ கேட்டவரமளிக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் 8.4.25 அன்று நடக்கும் அக்னி சட்டி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். 9.4.2025 இன்று அதிகாலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
9.4.2025 – புதன் திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கல்யாணம்
சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தலவரலாறு. மேலும், இது ரமணமகரிஷி பிறந்த தலமும் ஆகும். மூலவர்: திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர் தாயார்: துணைமாலையம்மை, சகாய வல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்க மாலை. பங்குனி பெருவிழாவில் இன்று ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம்.
10.4.2025 – வியாழன் திருமலை வசந்தோற்சவம் (3 நாட்கள்)
வசந்தோற்சவம் என்பது புகழ்பெற்ற திருமலை கோயிலில் சைத்ர மாதத்தில் (மார்ச் – ஏப்ரல்) நடைபெறும் வருடாந்திர விழாவாகும். 2025 ஆம் ஆண்டு வசந்தோற்சவம் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12 வரை. நடைபெறுகிறது. (சைத்ர சுக்ல பட்சதிரயோதசி முதல் சைத்ர பூர்ணிமா வரை) கோயில் பதிவுகளின்படி, வசந்தோற்சவம் கி.பி 1360ல் தொடங்கப்பட்டது. வசந்தம் என்றால் `வசந்தம்’ என்றும், உற்சவம் என்றால் `திருவிழா’ என்றும் பொருள்.
இந்த விழா வைபவோத்சவ மண்டபத்தில் நடைபெறுகிறது. மூன்று நாட்களும் தேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிக்கு ஸ்னபன திருமஞ்சனம் (புனித நீராடல்) செய்யப்படுகிறது. மூன்றாவது நாளில், ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோருடன் கிருஷ்ணர் மற்றும் ருக்மிணி ஆகியோரின் உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று நாட்களும் மாலையில் மாடவீதிகளில் வீதிவலம் உண்டு.
11.4.2025 – வெள்ளி பங்குனி உத்திரம்
12வது ராசியான பங்குனி மாதமும், 12-வது நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும் சேரும் இந்த நல்ல நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து விழாக்களைக் கொண்டாடும் வழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது. இந்த நல்ல நாளில் முருகனுக்கு தேர் இழுப்பார்கள். அபிஷேகம் செய்வார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். திருமால் ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது.
இந்த நாளில் பார்வதி-பரமேஸ்வரர் திருமணமும், சீதா கல்யாணமும், முருகன்-தெய்வானை திருமணமும் நடை பெறுகிறது. பங்குனி உத்திர விரதத்தால் தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நிறைவேறும் பங்குனி உத்திரத்தன்று முருக பக்தர்கள் திருமண விரதம் இருப்பார்கள்.
இதன் மூலம் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத் தடைகள் விலகும். கோயில் களில் திருக்கல்யாண உற்சவங்களை இன்றைய தினம் தரிசிக்க வேண்டும். வெயில் காலம் தொடங்கிவிட்டதால் பங்குனி உத்திர நன்னாளன்று தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்குவது மிகச்சிறந்த தர்ம காரியம் ஆகும்.
10.4.2025 – வியாழன் – மகாபிரதோஷம்.
10.4.2025 – வியாழன் – திருவேடுபரி உற்சவம்.
11.4.2025 – வெள்ளி – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம்.
11.4.2025 – வெள்ளி – மதன சதுர்த்தசி.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.