ஏழாமவன் பகுதி 1

“இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல்
தொழுதெழுவேன்
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே’’

என்றும் நான் அறவழியில் செல்ல என்னோடு இரும்!! கண்ணில் நீர் மல்க விபீஷணன் சிவனைத் தொழுதான். அவன் மகள், திரிசடை ஆறுதலாய் அவன் தோளைத் தொட்டாள்.
“சீதா தேவியை அசோகவனத்தில் பெரிய தந்தை சிறை வைத்தது முதல் நீங்கள் அமைதி இழந்து இருக்கிறீர்கள். கவலையை விடுங்கள். அறம் வேறு சிவன் வேறு அல்ல. அறமே சிவன்தான். நீங்கள் நம்புகின்ற சிவன் உங்களை அறவழியில் நடத்திச் செல்வான். உங்கள் கவலை எல்லாவற்றிற்கும் இன்று அந்தச் சிவன் முற்றுப்புள்ளி வைப்பான். உங்களுக்காக நாங்கள் பிரார்த்திப்போம்.’’
“நல்லது திரிசடை. இன்று நான் என் அண்ணன் ராவணனின் அவைக்குச் செல்வேன் அறிவுரைகள் சொல்வேன். அவனை நல்வழிப்படுத்துவேன்.’’

“தந்தையே தவறாக நினைக்க வேண்டாம் அவர் சீதாதேவியிடம் உரையாடியதைக் கேட்டபின் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை.’’“அனுமன் ராமனின் தூதுவனாக அவைக்கு வந்திருந்தான். அவனைக் கொல்வதற்கு ராவணன் வாள் எடுத்தான். மாதரையும் தூதுவரையும் கொல்வது அநீதி, பாபம் என்று நான் அறிவுறுத்தியதை அவன் கேட்டான். அனுமனை விடுவித்தான். அந்த நம்பிக்கையில்தான் இன்று நான் இறுதியாக அறிவுரை சொல்ல அவைக்குச் செல்ல இருக்கிறேன். என்னோடு இருக்கும் ஈசன் என்னை வழிநடத்துவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.’’ திரிசடையின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து அவைக்குச் சென்றான். விபீஷணன் ராவணனின் அரியணை மண்டபத்தில் நுழைந்தான்.

அனுமனின் ஞாபகம் வந்தது. அனுமன் தன்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியத் துவங்கியது. விபீஷணன் அவையோரை வணங்கி, தன் இருக்கையில் அமர்ந்தான். ராவணன் அவையோரைப் பார்த்துப் பேசத் துவங்கினான் “சுட்டது குரங்கு! கெட்டது நம் இலங்கை மாநகரம்! கிட்டியது இழிவும் பழியும்! அவமானத்தைப் பொறுக்க இயலவில்லை! மீண்டு வர வழி என்ன? மீண்டும் நேராதிருக்க வழி என்ன? ஆலோசனை கூறுங்கள்.’’ அவையில் இருந்தவர்கள் ராவணனின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவனுக்குத் தகுந்தார்போல் பேசினார்கள். போர் ஒன்றுதான் தீர்வு என்றும், ராமனை வெல்வது மிகவும் சுலபம் என்றும் வாதிட்டார்கள். ராவணன் மிகுந்த புளகாங்கிதம் அடைந்தான். விபீஷணன் எழுந்துப் பேசத் துவங்கினான், “அண்ணா! சுட்டது குரங்கு அல்ல. நீங்கள் சிறை வைத்திருக்கிறீர்களே அந்த சீதா தேவியின் கற்பு! அது ஊரை மட்டும் சுடாது. நெறி தவறியவரின் வம்சத்தையே சுட்டெரிக்கும்.

“விபீஷணா உனக்கு என்ன தெரியும்? எல்லாம் தெரிந்தவன் என்ற நினைப்பை அகற்று!’’“உண்மைதான் அண்ணா! எனக்கு என்ன தெரியும்! நீங்கள் எதிர்க்கத் துணிந்து இருக்கிறீர்களே, அவர்களின் பலம் தெரியும். அவர்கள் பக்கம் இருக்கும் தர்மம் தெரியும். வேறென்ன தெரியும்? இத்துணை நேரம் பலசாலிகள் போல் வீர வசனம் பேசினார்களே அவர்களின் போர்திறன் உங்களுக்கு வெற்றியைத் தராது என்பது தெரியும். வேறென்ன தெரியும்? உங்களின் பலவீனம் தெரியும்.

பிறன்மனை நோக்கியதால் வரப் போகின்ற விளைவுகள் தெரியும். வேறென்ன தெரியும்? பிரம்மனுக்காக யாகம் செய்கையில் ஒவ்வொரு தலையாக உங்களின் பத்து தலைகளையும் வேள்வியில் ஆகுதி செய்து பெற்ற வரங்கள் தெரியும். அதில் நீங்கள் கேட்கத் தவறிய வரமே உங்களுக்குக் காலனாக வரக்கூடும் என்பதும் தெரியும். வேறென்ன தெரியும்?
நீங்கள் ஒரு காலத்தில் பயந்து நடுங்கினீர்களே… அந்த வாலியை வதம் செய்தவனை எதிர்க்கத் துணிகிறீர்களே. அது தவறு என்பது தெரியும். வேறென்ன தெரியும்?

தூதுவனாக வந்த அனுமன், உங்கள் மொழியில் கூறினால் ஒரு குரங்கு, அதன் வாலில் இட்ட தீயினால் வந்த வினைகள் தெரியும். ஒரு வானரக் கூட்டத்தையே படையாகக் கொண்டிருக்கும் அணியின் வலிமை தெரியும். வேறென்ன தெரியும்?எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு ராமனை தெரியும். வேறென்ன தெரியும்? என் பேச்சு உங்களுக்கு என் மீது வெறுப்பை அளிக்கலாம். என்னை மன்னியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பற்றி பிடித்தமான வகையில் பேசுவதை விடுத்து உங்களுக்கு நல்வழி கூறுவதுதான் என் அறமாக நான் நினைக்கிறேன்’’“ஆஹா உன்னைத்தான் சொல்லின் செல்வன் என்று கூற வேண்டும்.

எவ்வளவு அழகாக உன்னுடைய உரையை முடித்திருக்கிறாய்! இதில் உன் அலங்கார வார்த்தைகள் நன்றாக இருக்கிறது. ஆனால் என் மீதோ நம் நாட்டின் மீதோ உனக்கு துளியும் அக்கறையில்லை என்பதுதான் உண்மை.’’“அண்ணா! இங்கு இருப்பவர்களின் யோசனைகள் இனிமையாக இருந்தாலும் நமது நாட்டிற்கும் நமது குலத்திற்கும் சரியானது அல்ல. நீதி, தர்மத்திற்கு எதிராக ஒருபோதும் எந்தக் காரியத்தையும் செய்யலாகாது. அதன் எதிர் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். அதுவே இப்பொழுது நேர்ந்திருக்கிறது என்று நான் அஞ்சுகிறேன். இதற்கு முதலில் அமைதியான பேச்சுக்கள் வழியாகவும் அறிவுபூர்வமாகவும் தீர்வுகளைத் தேட வேண்டும்.”

“விபீஷணா! அமைதியான பேச்சு, அறமே வாழ்க்கை… என்ன பிதற்றுகிறாய்? நீ அரக்கர் குலத்தில் பிறந்தவனா? இல்லை நம் தாய் தந்தையர் உன்னை ஏதாவது ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்து விட்டார்களா? வீரமில்லாத ஒருவனின் உடன் பிறந்தவன் நான் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது.’’“அண்ணா! உங்களுக்கு இரணியன் வரலாறு தெரிந்திருக்கும். இரணியன் உங்களைவிட பலசாலி.

தன்னை உலகத்தின் அதிபுத்திசாலியாக நினைத்துக் கொண்ட ஒரு முட்டாள். தெய்வம் ஒன்றுதான் எங்கும் என்றும் பலம் பொருந்தியது. அதை அவன் மறந்ததுதான் வினோதம். அவன் எப்படியெல்லாமோ தன்னுடைய மரணத்தை வெல்ல நினைத்து வரம் வாங்கினான் ஆனால் நிகழ்ந்தது என்ன? அவன் மகன் பிரகலாதனின் தவமல்லவா வென்றது?
இரணியன் வலிமை பற்றி உனக்குத் தெரியுமா? அமிழ்தம் கடைந்த மத்தாகிய மேருமலை தன் தோளுக்கு நிகரில்லை என்று இருந்தவன்.

காலடி வைத்தால் உலகைத் தாங்கும் நாகமும் நிமிர்ந்தால் ஐம்பூதங்களும் கலங்கின. பெண், ஆண், அலி, உயிர் – உள்ளது, உயிர் – இல்லது, இல்லம், வெளி, வான் – இவற்றால் இவ்விடங்களில் சாவில்லை என வரம் வாங்கி இருந்தான். மேலும் தேவர், வானில் திரிபவர், மனிதன், மால், அயன் – யாராலும் சாவில்லை எனவும், நீர், நெருப்பு, காற்று, மண் – ஆகியவற்றில் சாவில்லை எனவும்,உள்ளே – வெளியே, படைக்கருவி, பகலில் – இரவில், சாவில்லை எனவும், எமனாலும் சாவில்லை எனவும், ஐம்பூதம், நால்வேதம், தந்தை – ஆகியவற்றால் சாவில்லை என்னும் வரம் பெற்றிருந்தான்.

தொகுப்பு: கோதண்டராமன்

The post ஏழாமவன் பகுதி 1 appeared first on Dinakaran.

Related Stories: