ஒன்றிய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் போராட்டம்: விவசாய சங்க தலைவர்கள் அறிவிப்பு

திருச்சி: ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், சம்யுத்த கிசான் மோர்சா தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியனை பஞ்சாப் அரசு கைது செய்து பட்டியாலா சிறையில் அடைத்தது. 5 நாள் சிறைக்கு பின் வெளியே வந்த அவர் நேற்று காலை 10.30 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு அழைப்பின்பேரில் கடந்த 19ம் தேதி சண்டிகரில் நடந்த குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம். அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரங்கை விட்டு வெளியே வந்தபோது பஞ்சாப் மாநில பகவந்த்மான் அரசு, காவல்துறையை ஏவி வலுக்கட்டாயமாக தீவிரவாதிகளை கைது செய்வதுபோல் கைது செய்து பட்டியாலா சிறையில் எங்களை அடைத்தது.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததால் பஞ்சாப் அரசு என்னையும், கேரளாவை சேர்ந்த ஜானையும் விடுதலை செய்துள்ளது. பல்வேறு சிறைகளில் விவசாயிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து நாளை (28ம்தேதி) இந்தியா முழுவதும் அனைத்து அமைப்புகளும் தீவிரமான போராட்டம் நடத்தவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொடுக்க மறுக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்களை சிறையில் அடைத்து பஞ்சாப் அரசு கொடுமை செய்கிறது.

இதற்கு ஒன்றிய அரசு மறைமுகமாக துணை போகிறது. ஒன்றிய அரசின் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டுவர வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை (28ம் தேதி) தமிழ்நாட்டிலும் தீவிரமான போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் போராட்டம்: விவசாய சங்க தலைவர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: