கடந்த சில ஆண்டுகளில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்க்கையில், அறந்தாங்கி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து அறந்தாங்கியில் கூடுதலாக மற்றொரு புதிய காவல் நிலையம் அமைக்க அவசியம் எழவில்லை.தி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்): கூடுதல் காவல் நிலையம் இல்லாவிட்டாலும், ரகத்தை உயர்த்தி, பெரிய ரக காவல் நிலையமாக அமைக்க வேண்டும். காரணம் எல்லைகள் விரிவடைந்து வருவதால் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆவுடையார் ஒன்றியம், கரூரில் தற்போது இயங்கி வருகின்ற காவல்நிலையம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. அதற்கு ஒரு நிரந்தர கட்டிடமும், அறந்தாங்கி நகர், மணமேல்குடி, ஆவுடையார் கோவில் மீமிசல் காவலர் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புதிய குடியிருப்பு கட்டடங்களை அமைத்து தர அரசு முன் வருமா?. முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆவுடையார் கோவில் வட்டம், கரூர் காவல் நிலைய இடத்தினை ஆய்வு செய்து அங்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்குரிய சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் தோராய திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. எனவே, காவல் துறை தலைமை இயக்குநர் மூலம் கரூர் காவல் நிலையத்தற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான கருத்துரு பெறப்பட்டபின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரவாயல் எம்எல்ஏ கணபதி (திமுக): மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அயம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 1 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. இந்த ஊராட்சியில் இந்திய மெடிக்கல் ரிசர்ச் சென்டரும் அலுவலகமும், மத்திய போதை தடுப்பு தலைமையகமும் மற்றும் மத்திய அரசின் உணவு கழகத்தின் தலைமையகம், ஆசியாவிலேயே மிகப் பெரிய வீட்டு வசதி திட்டமும் இங்கு தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த 1 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு முன் வருமா?. முதல்வர் மு.க.ஸ்டாலின்: சென்னை புறநகர் மாவட்டம் அயம்பாக்கம் பகுதியைச் சார்ந்த புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்க வரையறுக்கப்பட்ட அளவுகோலின் படி 25 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் உள்ளன. அதாவது கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அம்பத்தூர், மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆவடி, வடக்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் செங்குன்றம், தெற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தமல்லி ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து மற்றும் மீட்புப் பணி அழைப்புகள் அருகிலுள்ள மேற்கண்ட 4 தீயணைப்பு நிலையங்களை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஊர்திகளை கொண்டு மேற்கொள்ள இயலும்.
அயம்பாக்கம் பகுதியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கும் நிலை தற்போது எழவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இது குறித்து பேசவேண்டும் என்று கையை தூக்கி உயர்த்திக்காட்டி பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு சில புள்ளிவிவரங்களை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த அரசு பொறுப்பேற்று 2021லிருந்து தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அந்த 23 நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் வந்திருக்கின்றன. மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை கனிவுடன் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கக்கூடிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை இந்த அவையிலே தாக்கல் செய்யப்படுகின்ற நேரத்தில் நிச்சயமாக நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகளும் வரும் என்பதையும் நான் உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப புதிய காவல்நிலையம், தீயணைப்பு நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.