* பெண் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல், திருச்சி நிர்வாகிகள் விஜய்க்கு பகீர் கடிதம், புகார் கொடுத்தும்
மாவட்ட செயலாளர் பதவி
திருவெறும்பூர்: தவெகவில் பணம் வாங்கி கொண்டும், சாதி பார்த்தும் கட்சியில் பதவி போடப்படுவதாக பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் பதவி கேட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா, விஜய்யின் காரை முற்றுகையிட்டு, கட்சியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இருந்தும் அவர் பதவி வழங்காமல் வேறு ஒருவர் மாவட்ட செயலாளர் பதவியை விஜய் வழங்கினார். இதேபோல், திருவெறும்பூரில் ஒருவர் புஸ்ஸி ஆதரவுடன், தேர்தல் நிற்க விருப்பம் உள்ளவர்கள் ரூ.10 கோடி தந்தால் சீட் என பேரம் பேசு வருகிறார், பெண் உறுப்பினர்களை அச்சுறுத்துகிறார், கொலை குற்றவாளிக்கு கட்சியில் பதவி வழங்கி உள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அவருக்கு மாவட்ட செயாலாளர் பதவி வழங்கக்கூடாது என விஜய்க்கு கடிதம் எழுதியும், அதை கண்டுக்கொள்ளாமல் அவருக்கே விஜய் மாவட்ட செயலாளர் பதவி வழங்கி உள்ளார்.
இதனால், திருச்சி மற்றும் திருவெறும்பூரை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தவெக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரச்சார மேலாண்மைபொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொது செயலாளர் நிர்மல் குமார்,
கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருள்ராஜ், துணைப்பொது செயலாளர் ராஜ்மோகன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்துடன் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான்டேவிட் தலைமையில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கடந்த 12ம்தேதி சென்னை சென்றனர். அப்போது அங்கு விஜய்யை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுக்க முடியாததால் அந்த கடிதத்தை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொடுத்தனர்.
அந்த கடித்ததில், ‘‘திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அருள்ராஜ் என்பவரால் தொகுதி சின்னா பின்னமாகி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான் டேவிட் தலைமையில் தொகுதி ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி, மாநில தலைமையை நேரில் சந்திக்க சென்னைக்கு பல முறை வந்தோம். ஆனால் எங்களால் தலைமையை நேரில் சந்திக்க முடியவில்லை.
எனவே கடிதம் மூலமாக திருவெறும்பூர் தொகுதியில் நடக்கும் முறைகேடுகளை தலைமை பார்வைக்கு சமர்ப்பிக்றோம். தலைவரின் அறிவிப்பு எதுவும் இல்லாமல், அருள்ராஜ் தன்னை மாவட்ட செயலாளராக விளம்பரப்படுத்தி கொண்டும் பொது வெளியில் அறிவித்து கொண்டும் ஏமாற்றி வருகிறார். இதைக்கேட்டால் தனக்கு பொதுச்செயலாளர் நல்ல நட்பில் இருக்கிறார் என கூறி உறுப்பினர்களை மிரட்டுகிறார்.
மேலும் அருள்ராஜ், தளபதி விஜய் ரசிகர் அல்லாதவர். தவெகவிற்கு அறிமுகமில்லாதவர்கள் என்று பலரை கட்சி நிர்வாகத்தில் நியமித்து குளறுபடிகள் செய்திருக்கிறார். கணக்கு காட்டுவதற்காக அறிமுகம் இல்லாதவர்களை நியமித்தும் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்காமலே தன்னிச்சையாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த முறைகேடான நியமனங்கள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்.
கட்சி நிர்வாகிகளிடம் கடன் பெறுவது, நலத்திட்டங்களுக்கு தேவைக்கு அதிகமாக நிதிவசூல் செய்வது, வசூலித்த பணத்தில் முறைகேடு செய்வது, அதில் சொகுசு வாழ்க்கை வாழ்வது என்று பண மோசடியில் ஈடுபடுவதுடன் குறிப்பிட்ட சில பெண் நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் உயர் பதவி வழங்குவதால் பெண்கள் நம் கட்சியில் இணைவதற்கு முடியவில்லை. புதிய பெண் உறுப்பினர்களை அச்சப்படுத்தும் விதத்தில் சில நடவடிக்கைகள் இருக்கிறது.
நாளை நமது கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடாமல் இப்பிரச்சனைக்கு இன்றே முற்றுப்புள்ளி வைப்பது நலம். அருள்ராஜ், தனது சகாக்கள் பாரதிராஜா, சுபாஷ் மூலமாக 2026 தேர்தலுக்கு வேட்பாளராக விரும்புவோரிடம் ரூ.10 கோடி வரை பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். 2025 மார்ச் மாதம் கொலை குற்றத்தில் ஈடுபட்ட பாரதிராஜா குறித்து நமது கட்சியின் மாநில தலைமைக்கு மறைத்து, தொகுதி பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர், தொகுதி உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை அருள்ராஜ் பெற்று தந்துள்ளார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 40 வயதை கடந்தவர்கள். 20, 25 ஆண்டு காலமாக விஜய் ரசிகர்களாக உள்ளவர்கள் யாரையும் மதிப்பதே இல்லை. மாறாக மாற்றுக்கட்சியினரிடம் தொடர்பில் உள்ள நபர்களை உடன் வைத்துக்கொண்டு கட்சியின் தொண்டர்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார். கட்சி வளர்ச்சியை பற்றி துளியும் கவலைப்படாமல், உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடாமல், தொகுதி சார்ந்த சமூக பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல், கிராமப்புறங்களுக்கு சென்று மக்களை சந்திக்காமல் உள்ளார்.
கட்சியில் பிரிவினைகளை ஊக்குவித்து, தற்போது இயங்கி கொண்டிருக்கும் கட்டமைப்பை உடைக்க செயல்படுகிறார். சமூக வேறுபாடுகளை ஊக்குவிக்கிறார். கட்சியில் சேர முன் வரும் மக்கள் செல்வாக்கு உள்ள முக்கியஸ்தர்களை கட்சியில் சேர விடாமல் பார்த்துக்கொள்கிறார். அடிக்கடி தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுப்பதற்காக கட்சிப்பதவிகளில் இருப்பவர்களை பதவி நீக்கம் செய்து புதிதாக காலி பதவிகளை உருவாக்குகிறார்.
இதுவரை முறையாக ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தவில்லை. தனது அலுவலகத்தை நாள் முழுவதும் பூட்டி விட்டு இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை திறந்து வைத்திருப்பதால் நிர்வாகிகள் மன வேதனை அடைகிறார்கள். தேவையற்ற இடங்களில், பொதுச்செயலாளருக்கு தான் மிக நெருக்கம் என்று கூறி உறுப்பினர்களை மிரட்டுவதோடு, பொதுசெயலாளர் நற்பெயரை சிதைக்கும் விதத்தில் அருள்ராஜ் நடந்து கொள்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து, விசாரணைக்கு பின் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நிர்வாகிகள் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தாமலும், நிர்வாகிகள் கொடுத்திருந்த கடிதத்தை பொருட்படுத்தாத தவெக தலைமை, குற்றச்சாட்டுக்கு ஆனாள அருள்ராஜ் என்பவரை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக நேற்று முன்தினம் தலைமை நியமித்திருப்பதால் கடிதம் கொடுத்திருந்த 14 பேர் கொண்ட குழுவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே திருவள்ளூவர், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தவெக தலைவர் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். தவெகவில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிருப்தியால் உட்கட்சி பூசல் பூதாகரமாகி வருகிறது.
