சித்தூர் : சித்தூர் கட்டிட திட்ட ஒப்புதல்கள் பொதுமக்களுக்கு எளிதாக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு மண்டல துணை இயக்குனர் விஜயபாஸ்கர் பேசினார். சித்தூர் நாகையா கலை அரங்கில் நேற்று சித்தூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி திட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மண்டல துணை இயக்குனர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
மாநில அரசு கட்டிடங்கள் கட்ட திட்ட ஒப்புதல் பெற பொதுமக்களுக்கு எளிதான முறையை அறிவித்துள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திட்டத்துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுய சான்றிதழுடன் கட்டிடங்களை கட்ட ஆந்திர அரசு கட்டுமான நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அரசாணை எண்கள் 3,4,5,20 இன் படி, இனிமேல் 18 மீட்டர் அல்லது ஐந்து தளங்களுக்குக் குறைவான கட்டிட அனுமதிகளுக்கு சுய சான்றிதழ் போதுமானதாக இருக்கும்.
இருப்பினும்கட்டிட உரிமையாளர்கள் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, பதிவுசெய்யப்பட்ட என்டிபிக்கள் பொறியாளர்கள் அல்லது கட்டிடக் கலைஞர்கள் முன்னிலையில் ஒரு பிரமாணப் பத்திரத்தை வழங்க வேண்டும்.
இதுதொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே சித்தூர் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி திட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். நகர திட்டமிடல் ஊழியர்கள் மற்றும் உரிமம் பெற்ற பொறியாளர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கட்டிட அனுமதியை விரைவாகவும் எளிதாகவும் எந்த தொந்தரவும் இல்லாமல் பெறுவதற்கான செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்புகள், கிராம சபைகள் மற்றும் சுழற்சித் திட்டங்கள் உள்ள பகுதிகள் 1985க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை புனரமைக்க பயனுள்ளதாக இருக்கும். ஆகவே மாநகராட்சி மற்றும் நகராட்சி திட்ட துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசுக்கு வருவாய் ஈட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். அதேபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகள் நிலங்கள் கட்டிடங்கள் உள்ளிட்டவை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாநகராட்சி திட்டத்துறை அதிகாரி நாகேந்திரா, இணை அதிகாரி சுபபிரதா, திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்ட நகர திட்டமிடல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கட்டிட திட்ட ஒப்புதல்கள் பெறும் முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.