அருமனை: அருமனை அருகே தந்தை வாங்கிய கடனுக்கு 2 தவணை கட்ட தவறியதால் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியல் மனமுடைந்த ஒர்க் ஷாப் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் பைனான்ஸ் நிறுவன ஊழியரிடம் உருக்கமாக பேசிய வாட்ஸ் அப் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அருமனை அருகே சிதறால் அம்பலக்கடை ஒற்றால்விளையை சேர்ந்தவர் பிரபாகரன். அவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது பிரபாகரன் கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டி வசித்து வருகிறார். மகன் பிரதீஷ் (29) மார்த்தாண்டத்தில் உள்ள ஒர்க்ஷாப்பில் பழைய வண்டிகளை உடைக்கும் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.
இதனால் பிரதீஷ் தனது தந்தையுடன் தங்கி உள்ளார். பிரபாகரனின் மனைவி உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வில்லுக்குறியில் உள்ள பிரபல பைனான்ஸ் நிறுவனத்திடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 308 கடன் வாங்கினார். இதற்கு சாட்சி கையெழுத்தை மகன் பிரதீஷ் போட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பிரதீசும், பிரபாகரனும் சேர்ந்து தவணை தொகையை மாதந்தோறும் கட்டி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பிரதீஷ் மட்டுமே தவணை தொகையை கட்டி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 மாதமாக அவராலும் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் அடிக்கடி பிரதீஷை செல்போனில் தொடர்புகொண்டு பணம் கட்டுமாறு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
ஆகவே பிரதீசும் பல இடங்களில் பணம் கேட்டு பார்த்துள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார். இதற்கிடையே நேற்று காலை கடன் கொடுத்த பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பிரதீசுடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை வீட்டு சுவரில் ஒட்டினர். அதில், இன்னும் 3 நாட்களுக்குள் ரூ.17 ஆயிரத்து 338 நிலுவை தவணை தொகையை முழுமையாக கட்ட வேண்டும். இந்த தொகை மற்றும் வட்டியுடன் கூடிய இதர செலவுகளையும் சேர்த்து கட்ட வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு சார்ந்த செலவு தொகை, விளைவுகளும் உங்களையே சேரும். நிலுவை தொகையை பகுதி வாரியாக கட்டினாலும் இந்த அறிவிப்பை ரத்து செய்ததாகவோ, வாபஸ் பெற்றதாகவோ கருதக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை கண்டதும் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக பிரதீஷ் மனம் உடைந்து சரிந்தார். இதையடுத்து மதியம் சாப்பிட்டுவிட்டு பிரபாகரன் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். பிரதீஷின் தங்கை பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் பிரதீஷ் மட்டும் வீட்டில் இருந்தார். அவர் வீட்டின் கதவை உள்புறமாக தாழ்பாழ் போட்டிருந்தார். இந்தநிலையில் பக்கத்து வீட்டுக்கு சென்ற பிரதீஷின் தங்கை திரும்பி வந்து கதவை தட்டினார். உள்ளே தனது அண்ணன் தூங்கிக்கொண்டிருப்பார் என்று நினைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் கதவை தட்டியும் பிரதீஷ் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கதவு ஓட்டையின் வழியாக உள்ளே பார்த்தார். அப்போது பிரதீஷ் அங்கே உட்கார்ந்திருப்பது போல தெரிந்தது.
உட்கார்ந்திருந்தால் ஏன் கதவை திறக்கவில்லை என்று சந்தேகமடைந்த பிரதீஷின் தங்கை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரதீஷ் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருக்கிறார் என்பதை பார்த்து கதறி அழுதார். இந்த தகவல் அறிந்ததும் பிரபாகரனும் அங்கு வந்து பிரதீஷின் உடலை பார்த்து கதறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் பிரதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்பில் உருக்கமான உரையாடல்
இந்தநிலையில் வாட்ஸ் அப் மூலம் பைனான்ஸ் ஊழியர்களிடம் பிரதீஷ் பேசிய உருக்கமான உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பைனான்ஸ் ஊழியர் ஒருவர் பிரதீசுக்கு நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில் 2 வாய்ஸ் நோட் அனுப்பினர். ஆனால் அதற்கு பிரதீஷ் ரிப்ளை செய்யவில்லை. நேற்று தான் பிரதீஷ் வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் நோட் அனுப்பினார். அந்த உரையாடல் பின்வருமாறு: பைனான்ஸ் ஊழியர்: அண்ணே, போன் அடித்தால் எடுக்க மாட்டேங்குறீங்க. மெசேஜ் பண்ணா ரிப்ளே இல்லை. இன்று தருவேன் என்று கூறினீர்கள். கால் பன்னாலும் எடுக்கவில்லை. ஒரு ஹெல்ப் பண்ணா இப்படிதான் பன்றீங்க. சனிக்கிழமை (அதாவது கடந்த 22ம் தேதி) தவணை தொகையை முழுவதும் கட்டிவிடுவேன் என்று சொன்னீங்க. ஆனால் நீங்க தரல.
ஆடிட்டிங் வருவாங்க. கஸ்டமர் வீட்டுக்கு மேனேஜர் கூட வருவாங்கன்னு சோன்னேன். நான் உங்களுக்கு அவகாசம் கொடுக்கத்தானே செய்தேன். நோட்டீஸ் அன்றைக்கே ஒட்ட சொன்னாங்க. ஆனால் நான் உன் முகத்துக்காக இதுவரை ஒன்னும் செய்யாமல் இருந்தேன். நாளை கட்டுனால் கட்டுங்க, இல்லாவிட்டால் போங்க. பிரதீஷ்: பைசா இன்னும் ரெடி ஆகல, உன்ன நான் கஷ்டப்படுத்தல, நீ என்ன செய்யனும்னாலும் செய். எனக்கு வேறு வழியில்லை. எத்தனை தூரம் ஓடினேன் ஒரு வழியுமில்லை. எத்தனைபேரிடம் கேட்டாச்சு. நீ போன் பண்ணப்போ உன் போனை எடுத்து சொல்வதற்கு ஒன்னுமே இல்லை. நீ ஒன்னும் நினைக்காதே, வேறு வழியில்லாமல் தான் அண்ணன் உன் போனை எடுக்கவில்லை. எவ்வளவோ சொல்லி பார்த்தேன்… அவன் (தந்தை) அடுத்த சனிக்கிழமை தான் கட்டுவானாம்.
ஒரு பயலும் தரமாட்டான். சொந்த அப்பனே… அப்பன் கையில் பைசா இருக்கு அவன் குடிக்கிறதுக்காக… அண்ணன் என்ன பண்ண?. வேறு வழியில்லை. என்ன செய்ய சொல்லு. அம்மா சாவதற்கு முன்பு வரை ஒரு முடக்கம் இல்லாமல் கட்டிவிட்டுதானே இருந்தேன். அம்மா போனதுக்கு அப்புறம் (இறந்த பிறகு) இப்போ முடியாத சூழல். வேலை செய்யும் இடத்தில் கேட்டேன். கடைசியில் கிடைக்கவில்லை அண்ணனுக்கு அவ்வளவு பிரச்னை. வேறு வழியில்லை. முடிந்தால் அடுத்த சனிக்கிழமையையும் சேர்த்து ஒரு தவணைதான் கட்ட முடியும். நான் என்ன பண்ண?. பல இடங்களில் பலபேரிடம் பணம் கேட்டுருக்கேன்.. அதுவும் எத்தனை நாள் ஆகும்னு தெரியல. யாருமில்ல… நான் ஒரு அனாதை. இவ்வளவு ஆகிப்போச்சி, நான் என்ன பன்றது? இவ்வாறு அந்த உரையாடலில் பிரதீஷ் உருக்கமாக கூறியுள்ளார்.
இறந்தால் இன்சூரன்ஸ் கிடைக்குமா?
பிரதீஷ் வாட்ஸ் அப் வாய்ஸ் நோட்ஸில் கூறும்போது, செத்தாங்கன்னா (இறந்தால்) உங்க பைனான்ஸ் நிறுவனத்துல இன்சூரன்ஸ் கிடைக்குமா? என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் அப்போதே தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டதாக கருதப்படுகிறது. அவ்வாறு தான் இறந்தாலும் இன்சூரன்ஸ் தொகையை வைத்து கடனை அடைத்துவிட்டால் தந்தைக்கும், தங்கைக்கும் சிரமம் இருக்காது என இறக்கும் தருவாயிலும் பிரதீஷ் நினைத்துள்ளார்.
தற்கொலை செய்த பிறகும் டார்ச்சர்
பிரதீஷின் சடலத்தை பார்த்து அவரது தங்கை அழுதுகொண்டிருந்தார். அப்போது பிரதீஷுடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதனை தங்கை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பைனான்ஸ் ஊழியர் தான் பேசியுள்ளார். பிரதீஷ் தற்கொலை செய்தது தெரியாமல் பணத்தை எப்போ கட்டுவீங்க என பேசியுள்ளார். இதைக்கேட்டு மேலும் கதறி அழுத தங்கை… என் அண்ணா உங்களால தூக்குபோட்டு தற்கொலை செய்துவிட்டார். இப்போதும் பணம் கேட்கிறீர்களே? என அழுதுள்ளார். இதைக்கேட்டதும் அந்த ஊழியர் இணைப்பை துண்டித்து விட்டார்.
அவமானம் ஏற்பட்டுவிட்டதே!
பைனான்ஸ் ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்ற உடனே அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் தனக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதாக பிரதீஷ் கதறினார். அவருக்கு தந்தை பிரபாகரனும், தங்கையும் ஆறுதல் கூறினர். ஆனாலும் பிரதீஷ் சமாதானமாகவில்லை. இந்தநிலையில் நோட்டீஸ் ஒட்டிய ஈரம் காய்வதற்குள்ளே அவர் தற்கொலை செய்துவிட்டார்.
The post தந்தை வாங்கிய கடனுக்கு தவணை தொகை கட்டுமாறு வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் ஒர்க் ஷாப் ஊழியர் தற்கொலை: அருமனை போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.