தமிழ்நாடு வானிலை அறிக்கையில் இந்தி.. பேரிடரில் நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!!

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் வானிலை நிலவரத்தை இந்தி மொழியிலும் வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கமாக தமிழ், ஆங்கிலத்தில் வெளியாகிவந்த சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை தற்போது இந்தியிலும் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு, ஆங்கிலத்திலும், கேரளாவில் ஆங்கில மொழியிலும் வானிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இருப்பினும் தென்னிந்திய மாநிலங்களில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்தியுடன் சேர்த்து மும்மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கான வானிலை மைய அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொட்ங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.

பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு வானிலை அறிக்கையில் இந்தி.. பேரிடரில் நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: