வக்பு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் பாஜக-வின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றம்..!!

சென்னை: வக்பு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் பாஜக-வின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக வக்பு சட்டத்திருத்தம் உள்ளது. எனவே வக்பு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிரான முதல்வரின் தனித்தீர்மானத்துக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரிவினைவாதத்தை ஏற்படுத்துகிறது ஒன்றிய அரசு
மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெறும் கட்சியாக உள்ளது பாஜக என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிக் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மத ரீதியாக நாட்டை பிரிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு என அவர் கூறினார். மேலும், வக்பு வாரிய சட்டத்திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்.

வக்பு வாரிய சட்டத்திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி பிளவை ஏற்படுத்தும் மசோதா இது என அவர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை வரவேற்கிறேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவருர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தனர்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரானது: எஸ்.பி.வேலுமணி
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக சார்பில் ஆதரிக்கிறோம். வக்பு வாரியத்தின் அடிப்படையை தகர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளது. வக்பு வாரிய சொத்துகளை இஸ்லாமியர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என அவர் கூறினார்.

The post வக்பு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் பாஜக-வின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: