* சாலையில் திரிவதை தடுக்க நடவடிக்கை
தண்டையார்பேட்டை: சென்னை மூலக்கொத்தளத்தில் மாட்டு கொட்டகை விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. வண்ண வண்ண ஓவியங்களுடன் தயாராகி வரும் மாட்டு கொட்டகை விரைவில் திறக்கப்பட உள்ளது. இங்கு மாடு ஒன்றை பராமரிக்க மாதம் ரூ.300 செலுத்தினால் போதும். சாணம் அள்ளுவது, குளிப்பாட்டுவது, தீவனம் வழங்க நவீன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாடுகளை வளர்ப்போர் சாலையில் விடுவதை தவிர்த்து கொட்டகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி வடக்கு வட்டாரத்துறை ஆணையர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகள் முட்டுவது, தெரு நாய்கள் கடித்தும் பொதுமக்கள் படுகாயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் மாடுகள் சண்டை போட்டு, வாகனங்களுக்கு குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்குகின்றனர். இதில், பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலர் பலியாகியுள்ளனர். மேலும், மாடுகள் நடந்து செல்வோரை முட்டி வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாடு தாக்கி நங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். ஜூன் மாதம் மாடு முட்டி திருவொற்றியூரில் ஒரு பெண் படுகாயமடைந்தார். திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் இறந்தார். இதேபோல், வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது படிக்கும் பத்து வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியதில் அந்தச் சிறுவனின் இடது பக்க தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்தான். மேலும் பெண் ஒருவரை எருமை மாடு முட்டித் தள்ளியது. இதேபோல், பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் மாட்டின் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பல அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ேமலும், சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மண்டலம் வாரியாக மாட்டுக் கொட்டகை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான பணிகள் அனைத்து மண்டலங்களிலும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பகுதியில் மாட்டு கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தார். அப்போது மாடு கட்டப்படும் இடம், மாடு பராமரிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் மாடுகளை பராமரிப்பதற்காக மூலக்கொத்தளம் பகுதியில் மாட்டு கொட்டகை அமைக்கப்படுகிறது, இங்கு சுமார் 200 மாடுகள் பராமரிக்கப்படும். வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் அவருடைய மாடுகளை இந்த மாட்டு கொட்டகையில் கொண்டு வந்து விடலாம், ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் பராமரிப்பு செலவிற்கு வழங்க வேண்டும், மேலும் தொண்டு நிறுவனம் மூலம் மாடு பராமரிப்பு பணியை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் காலை, மாலை வேளைகளில் இங்கு வந்து பாலை கறந்து கொண்டு செல்லலாம், மாட்டிற்கு தீனியும் அவர்கள் வழங்கலாம்.
மேலும் மாடுகளுக்கு தீவனம் வழங்குவது, சாணியை அப்புறப்படுத்துவது, மாட்டை குளிக்க வைப்பது உள்ளிட்டவை நவீன முறையில் செய்யப்பட்டுள்ளது. மாடுகள் கட்டி வைக்கும் இடத்தில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. இதுபோல் ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்கப்படுவதால் வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் சிரமமின்றி மாடு பராமரிப்பதற்கு மாதம் 300 ரூபாய் கொடுக்க வேண்டும்.
இந்த திட்டம் சிறப்பாக உள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். விரைவில் மூலக்கொத்தளத்தில் மாட்டு கொட்டகை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதனை மாடு வளர்ப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது பகுதி பொறியாளர் லோகேஷ்வரன், உதவி பொறியாளர் பிரபு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post மூலக்கொத்தளத்தில் விரைவில் திறப்பு வண்ண வண்ண ஓவியங்களுடன் தயாராகிறது மாட்டு கொட்டகை appeared first on Dinakaran.