போச்சம்பள்ளி: குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவனும் மார்பில் கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). இவரது மனைவி ஜனனி (24). இவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முல்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருவதால், அவர்களது குழந்தையை ஜனனியின் பெற்றோர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், போதிய வருவாய் இல்லாததால், குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்களிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இருவரும் வீட்டில் இருந்தபோது, தற்போது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு பெங்களூரு சென்று வேலை பார்த்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என ஜனனி தெரிவித்துள்ளார். அதற்கு லோகேஷ் மறுத்ததால், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் கடுமையாக திட்டிக்கொண்டனர். இரவு வரை சண்டை நீடித்துள்ளது. பின்னர், வீட்டிலிருந்து வெளியேறி சென்ற லோகேஷ் போச்சம்பள்ளிக்கு சென்று டிபன் சாப்பிட்டுள்ளார். பின்னர், மனைவிக்கும் டிபன் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். பலமுறை அழைத்தும் திறக்காததால், சந்தேகமடைந்த லோகேஷ், ஜனனியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வெளியே இருந்த வாட்டர் ஹீட்டரை எடுத்து சூடுபடுத்தி, கதவில் ஓட்டை போட்டு தாழ்ப்பாளை திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, நைலான் கயிற்றில் தூக்கிட்டவாறு ஜனனி சடலமாக தொங்கியுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ், சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கிழித்துக்கொண்டார். இதில், அதிகளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் ஜனனியின் தந்தை செல்வம் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மகள் தூக்கில் சடலமாக தொங்குவதையும், மருமகன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். தகவலின்பேரில், போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று, தற்கொலைக்கு முயன்ற லோகேஷை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், ஜனனியின் சடலத்தை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை்காக அனுப்பி வைத்தனர். ஜனனிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
The post மனைவி தூக்கு போட்டு தற்கொலை: கத்தியால் கிழித்து கணவன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.