சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தொகுதி வாரியாக வெற்றி வேட்பாளர்களின் பட்டியலை கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜ, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வர தயக்கம் காட்டி வருகிறது. அண்மையில் சென்னை வந்த தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், எடப்பாடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அதிமுக – பாஜ வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கூட்டணியை பலப்படுத்த, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என பியூஸ் கோயல் கோரிக்கை வைத்தார். இதை எடப்பாடி நிராகரித்து விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் வருகின்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணியில் இருந்து விலகி வேறு கூட்டணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களை பாஜ சமாதானம் செய்து, தன் பக்கம் வைத்துள்ளது. இதுதவிர கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகி விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பொங்கலுக்கு முன் தவெகவுக்கு வருவார்கள் என்று கூறி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த பரபரப்பாக சூழ்நியையிலும், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 80 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேசிய பலரும், அதிமுக கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மக்களை சந்தியுங்கள். கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்.
அதிமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எஸ்.ஐ.ஆர். பணிகளில் அதிமுகவினர் சரியக செயல்படவில்லை. விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் ஈடுபட வைக்க வேண்டும். அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது. பூத் கமிட்டிகள் அமைத்து தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். மாற்றுக்கட்சியினர் ஆசை வார்த்தை கூறினாலும் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுங்கள்.
அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது\\” என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை கட்சி தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பாஜ திட்டவட்டமாக கூறிய நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் களத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
