கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: எடப்பாடி சொல்வது போன்று இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது என செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடைசி நாளான நேற்று ஏராளமானோர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கினர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மீண்டும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கினார்.

வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் ராயபுரம், ஆர்.கே.நகர், ஆலங்குளம் ஆகிய தொகுதிகளுக்கு போட்டியிட விருப்ப மனு வழங்கினார். இதேபோன்று 100க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கினர். இதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் படிவங்களை அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழிகளில் வழங்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் வழங்குவது ஏன்?

தேர்தல் ஆணையம் படிவங்களை உடனடியாக தமிழில் வழங்க வேண்டும். எங்கள் கட்சியில் என்ன பிரச்னையோ அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜவிற்கு ஆதரவாகவோ யாராவது பேசினால், அந்த புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். தெரிவித்து விட்டோம். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் நிச்சயம் எடுப்பார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், எங்களுடைய கூட்டணி கட்சிகளும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன். ஏனென்றால் நடவடிக்கை எடுக்க சொல்லி ஏற்கனவே பரிந்துரைத்து விட்டோம். தமிழ்நாட்டு மக்களை தலைக்குனிய வைப்பதோ, தமிழ் மண்ணை தலைக்குனிய வைப்பதோ, தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதோ கூடாது.

அப்படி கூறினால் காங்கிரஸ் பேரியக்கம் நடவடிக்கை எடுக்கும். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல் எந்தவித சலசலப்பும் கிடையாது. இந்தியா கூட்டணி சமுத்திரம் போன்றது, இதில் சில அலைகள் வரலாம் போகலாம் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது. எடப்பாடி கதவை திறந்து வைத்து கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா என காத்திருக்கிறார். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: