திருப்பூர்: திருப்பூர், வீரராகபெருமாள் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசை கத்தியால் தாக்க முயன்றவர், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என மாநகர போலீஸ் கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வீரராகவபெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது, போதை வாலிபர் சாலையோரம் படுத்து பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தார். இதுகுறித்து அரிசி கடை வீதியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸ் ஏட்டு ராமகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். அவர் போதை வாலிபரிடம் இங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதில், ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ் ஏட்டுவை குத்த முயன்றார். சுதாரித்துக்கொண்ட ராமகிருஷ்ணன் உடனடியாக தனது பெல்ட்டை கழற்றி கத்தி தன் மீது படாமல் தடுத்தார்.
இதனை பார்த்த மற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல், ஆயுதம் வைத்து மிரட்டல், பொதுமக்களை அச்சுறுத்துதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், போலீஸ்காரரரை வாலிபர் கத்தியால் குத்த முயன்ற வீடியோ வைராகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று கூறியதாவது: போலீசாரை தாக்க முயன்ற வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். விசாரணையில் அவர், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இளங்கோ (32) என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவர் பேண்ட் பையில் மிளகாய் பொடிகள் வைத்துள்ளார். மருத்துவர் கண்காணிப்பிற்கு பின் முழு விபரம் தெரியவரும். பணியிடத்தில் தாக்குதலுக்கு உள்ளானால் போலீசார் தன்னை தற்காத்து கொள்ள பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் ஆப் மூலம் இளங்கோவின் போட்டோவை பதிவேற்றம் செய்து பார்த்தபோது, இவர் கடந்த 2020ம் ஆண்டு கலெக்டர் அலுவலக வாகனத்தை அடித்து நொறுக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஆனால் இதுவரை அவர் தான் இவரா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்று போலீசார் கூறினர். மேலும், 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்த பின்னர் இளங்கோவிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறினர்.
