சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: சென்னையில் உள்ள குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் ரூ.17.01 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் பயிற்சி அகாடமி அமைக்கும் பணி, சேலம் மாவட்ட பல்நோக்கு விளையாட்டு வளாகத்தில் ரூ.11.40 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணி, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.48.76 கோடி மதிப்பீட்டிலான விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற மற்றும் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தயார் செய்யவதற்காக தடகள வீரர்கள் ர.மானவ், ஜெ.ஆதர்ஷ் ராம், கூடைப்பந்தாட்ட வீரர் பி.பியோடர் ஆதித்தன், குத்துச்சண்டை வீரர் பி.தர்ஷன், தடகள வீரர் யோபின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வாலிபால் வீராங்கனைகள் ம.ராகஸ்ரீ, பா.சாதனா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க மொத்தம் ரூ.2.80 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சைக்கிளிங் வீரர்கள் ச.பிரனேஷ் மற்றும் சௌ.கவிஷ் ஆகியோருக்கு மொத்தம் ரூ.12,48,580 மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் நீச்சல் வீரர் உ.அபிஷேக்கிற்கு மலேசியாவிற்கு சென்று பயிற்சி பெற ரூ.35,000க்கான காசோலையையும் துணை முதல்வர் வழங்கினார்.

மேலும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ், ரோல் பால் மற்றும் பூப்பந்தாட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தாங்கள் வென்ற பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

Related Stories: