தென்மேற்கு வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் நேற்று பெய்துள்ளது.

பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. வெப்ப நிலையை பொருத்தவரையில் திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், தஞ்சாவூர், சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, சேலம், திருச்சி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகாலையில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும்.

மேலும், 2ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 3, 4ம் தேதிகளிலும் இதேநிலை நீடிக்கும். 5 மற்றும் 6ம் தேதிகளில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும், அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

Related Stories: