சென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்த்துவிட்டு சென்ற கல்லூரி மாணவர்கள் 2பேர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னையில் ஐ.பி.எல். போட்டி முடிந்து சென்ற 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியை ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் சென்று கண்டு ரசித்தனர். இந்நிலையில், போட்டியை காண்பதற்காக சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அவர்கள் ஆலந்தூர் மெட்ரோவில் பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த மெட்ரோ மூலம் சேப்பாக்கத்துக்கு சென்று ஐ.பி.எல். போட்டியை கண்டுள்ளனர். இதையடுத்து போட்டி முடிந்ததும், திரும்பி வந்த இருவரும் ஆலந்தூர் மெட்ரோவில் பைக்கை எடுத்துவிட்டு அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் ஆலந்தூர் மெட்ரோ தூணில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்த்துவிட்டு சென்ற கல்லூரி மாணவர்கள் 2பேர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: