ஊட்டி: சிங்காரா வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஆண் யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வெளிமண்டலத்திற்கு உட்பட்ட சீகூர், தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் கணிசமான அளவு வாழ்கின்றன. இந்நிலையில், சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிங்காரா வனப்பகுதியை ஒட்டியுள்ள நார்தன்ஹே காப்புக்காடு மற்றும் தனியார் காப்பி எஸ்டேட் எல்லைப் பகுதியில் ஆண் யானை ஒன்று இரண்டு தந்தங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்தனர். மேலும் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தர். இதைத்தொடர்ந்து மசினகுடி துணை இயக்குநர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் தெப்பக்காடு வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், இறந்தது 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், கடந்த சில நாட்களாக சரிவர உணவு உட்கொள்ளாமல் உடல் மெலிந்து இருப்பதும் தெரியவந்தது. யானையின் வயிறு மற்றும் குடல் பகுதியில் அதிகப்படியான ஒட்டுண்ணி புழுக்கள் காணப்பட்டது. யானை வயது முதிர்வு, நோய் பாதிப்பு காரணங்களால் உயிரிழந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது. இருப்பினும் ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post நீலகிரி வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.