சென்னை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் போக்குவரத்துக்கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் எவ்விதமான சமரசமும் செய்துகொள்ளக்கூடாது என அனைத்து பணிமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான விவரம் பின்வருமாறு:
* ஒவ்வொரு முறையும் பேருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக எடுப்பதற்கு முன்னதாக, அதன் பிரேக் அமைப்பு சரியாகச் செயல்படுகிறதா என்பதைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.
* பேருந்து டயர்களின் தேய்மானம் மற்றும் செயல்திறனை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, டயர்களில் போதிய அளவு காற்று இருப்பதை உறுதி செய்த பின்னரே பேருந்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
* பேருந்துகள் சாலையில் முறையாக இயங்குகிறதா என்பதையும், என்ஜின் செயல்பாட்டில் ஏதேனும் கோளாறுகள் உள்ளதா என்பதையும் ஊழியர்கள் மற்றும் கள அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
* பேருந்துகளின் தற்போதைய நிலை குறித்து அந்தந்த பணிமனை மேலாளர்கள் தினசரி அடிப்படையில் ஆய்வு செய்து, அது குறித்த விரிவான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு அனைத்து ஓட்டுநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதே எங்களின் முதல் கடமை. பராமரிப்புப் பணிகளில் சுணக்கம் காட்டும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
