நாடு முழுவதும் இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு

சென்னை: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள புதிய ரயில் கட்டண திருத்தம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, அன்றாட செலவுகள் என பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வரும் பொதுமக்களுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக ரயில்வே நிர்வாகம் அமைந்துள்ளது. இந்த நிர்வாகத்தில் பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனாலும், ஊழியர்களின் சம்பள செலவு தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதைப்போன்று ஓய்வூதியச் செலவும் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

இதனால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரயில்வே செலவு இரண்டு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தப் பெரிய செலவுகளைச் சமாளிக்கவே ரயில் கட்டணத்தில் சிறிய அளவிலான திருத்தம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டண உயர்வின்படி 215 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. அதேபோன்று புறநகர் மின்சார ரயில்களின் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட தூரப்பயணங்களில் சிறிய அளவிலான உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளிலும், ஏசி பெட்டிகளிலும் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 கிலோ மீட்டர் பயணம் செய்தால், முன்பு இருந்த கட்டணத்தை விட ரூ.10 கூடுதல் செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவில்லாத பெட்டிகளில் 215 கிலோ மீட்டரைத் தாண்டிய பிறகு, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தூர அடிப்படையில் கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 216 முதல் 750 கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் கூடுதலாக ரூ.5, 751 முதல் 1,250 கிலோமீட்டர் வரை ரூ.10, 1,251 முதல் 1,750 கிலோமீட்டர் வரை ரூ.15, 1,751 கிலோமீட்டரைத் தாண்டினால் ரூ.20 கூடுதல் செலுத்த வேண்டியுள்ளது. கட்டண உயர்வு தொகை சிறியதாக இருந்தாலும், குடும்பமாக அல்லது அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது கணிசமான செலவாக மாறும் என பயணிகள் கூறுகின்றனர். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது.

மேலும் வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, அம்ரித் பாரத், ஹம்சபர், தேஜஸ், கதிமான் மற்றும் ஜன்சதாப்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அடையும் வகையில் சென்னை போன்ற நகரங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களின் டிக்கெட் கட்டணம், சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய கட்டணத்திலேயே தொடரும். அதேபோன்று நேற்று வரை டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்தப் புதிய கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

முன்பதிவு கட்டணம் மற்றும் சூப்பர் பாஸ்ட் கூடுதல் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இன்று முதல் ரயில் நிலைய கவுண்டர்கள், இணையதளம் அல்லது ரயிலுக்குள் டி.டி.இயிடம் எடுக்கப்படும் புதிய டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த உயர்வு அமலாகும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த உயர்வினால் டிக்கெட் விலையில் சிறிய அளவிலான வித்தியாசம் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 215 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை.
* புறநகர் மின்சார ரயில்களின் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும்.
* மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளிலும், ஏசி பெட்டிகளிலும் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயரும்.
* 500 கிலோ மீட்டர் பயணம் செய்தால், முன்பு இருந்த கட்டணத்தை விட ரூ.10 கூடுதல் செலுத்த வேண்டியிருக்கும்.
* முன்பதிவில்லாத பெட்டிகளில் 215 கிலோ மீட்டரைத் தாண்டிய பிறகு, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
* ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது.
* வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, அம்ரித் பாரத், ஹம்சபர், தேஜஸ், கதிமான் மற்றும் ஜன்சதாப்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.

Related Stories: