திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண் கண்காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ விழா நடைபெறுகிறது. இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைத்து, 80,571 உழவர்களுக்கு ரூ.669 கோடி மதிப்பிலான திட்டப்பலன்களை வழங்குகிறார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் தங்கள் செயல்பாடுகள், திட்டங்களைக் காட்சிப்படுத்த உள்ளார்கள். நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்.

விதை ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. வேளாண் உற்பத்திக்குத் தேவையான புதிய ரகங்களின் விதைகள், காய்கறி விதைகள், பழ வகைகளில் ஒட்டுரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்ட உரக்கலவை, உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் உள்ளனர். இதற்கென 250க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிப்புறக் காட்சி அரங்குகள் அமைக்கப்படுள்ளன.

நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள், கரும்பில் பூச்சி, நோய் மேலாண்மைக்கான நவீன தொழில் நுட்பங்கள், உயர்வருமானம் பெற மண்டலத்திற்கேற்ற வேளாண் காடுகள், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய ரகங்களின் மருத்துவ குணங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களின் விநியோகத் தொடர் மேலாண்மை, வேளாண்மையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் அனுபவத்தின் மூலம் வகுத்துள்ள தீர்வுகள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படும். வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் உழவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்,ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: