2026 புத்தாண்டு தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அருள்குமார் முன்னிலைவகித்தார். மாநிலப் பொருளாளர் உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றிகூறினார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்தபோதிலும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வர் மிகுந்த அக்கறையுடன் சிந்தித்து வருவதாகவும், அனைவரும் ஏற்கும் வகையில் ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை தமிழ்நாடு முதல்வர் தைப்பொங்கலுக்குள்ளாக அறிவிப்பார் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மேலும், 6.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 21 ஆண்டுகால ஏக்கத்தைப் போக்கும் வகையில், ‘‘2026 புத்தாண்டு தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த ஒரு நல்ல செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு நிர்வாகிகள் கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து, பலமுறை தற்போது அமைக்கப்பட்ட இதே அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, கடந்த அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை மொத்தமாக தொகுத்து ஒரே தவணையில் வழங்கியதும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட சலுகைகளை நிதிப்பலன்களை மீண்டும் வழங்கியதுடன், கடந்த ஆட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைகளைத் தனித்தனி அலகுகளாக பிரித்து நிர்வாகத்தைச் சீரமைத்திட காரணமாக இருந்தது. சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு முதல்வர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு தீர்மானம் நிைறவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: