கோவை, சென்னை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: கோவை, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, ஆரணி சேவூர் ராமச்சந்தின்(அதிமுக) பேசுகையில், ‘‘திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் தினந்தோறும் சுமார் 20 டன் அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அந்தக் குப்பைகளைச் சேகரித்து, தனியாக குப்பைக் கிடங்கு இல்லாத காரணத்தினால் சுடுகாடு பகுதியிலும், சாலையின் இருமருங்குகளிலும் கொட்டும் நிலை ஏற்படுகிறது. ஆரணி நகராட்சிக்கு குப்பைக் கிடங்கு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு: இந்த பிரச்னையில் நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். ஏதாவது ஓர் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அந்த இடம் அரசிடம் இருந்தால் கலெக்டரிடம் கேட்டு வாங்கிக் கொள்வோம். அரசாங்கத்தில் இல்லையென்றால், எங்களுக்கு ஏதாவது குறைவான விலையில் இடம் கிடைத்தது என்றால், நாங்களே கூட அதை வாங்கி கொடுத்து விடுவோம். ஏனென்றால், குப்பை கொண்டுவந்து கொட்டுவது என்பது எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஓர் இடம், இரண்டு இடங்களல்ல. இப்போது தான், முதலிலே நாம் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அந்தத் திட்டத்தை 20, 25 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு கொடுங்கையூரிலும் மற்றும் கோவை, மதுரையிலே ஆரம்பிக்க இருக்கிறோம். அதுவும் ஒரே இடத்தில் இருக்கின்ற அந்தக் குப்பைகள் போதவில்லை என்றால் அருகிலுள்ள குப்பைகளை எல்லாம் இணைத்து மின்சாரம் தயாரிக்கின்ற திட்டமும் அரசிடம் இருக்கிறது. இந்த ஆண்டு அந்த திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

வேலூர் மாநகராட்சியிலும் கிட்டத்தட்ட அதிகமான அளவிலே தான் குப்பைகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நகராட்சியிலும் குப்பைகளைக் கொட்டுவதற்கு உரிய இடம் கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது. அரசாங்கத்தினுடைய நிலம், புறம்போக்கு நிலம் இருந்தால் அதை அனுமதி பெற்று, எடுக்கிறோம். மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்தைக் கொடுக்கும் போது அங்கு இருக்கிற பொதுமக்கள் எங்கள் ஊர் பக்கத்தில் நீங்கள் குப்பைக் கொட்டக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதனால் பலதரப்பட்ட சிரமங்களும் இருக்கின்றன. எனவே நீங்களே ஓர் இடத்தைக் காண்பித்தால் அந்த இடத்திற்கு நாங்கள் கொண்டு செல்கிறோம். அதற்கான நிதியையும், துறையிலிருந்து நிதியும் தர தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post கோவை, சென்னை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: