காவல் நிலையத்தில் இட பற்றாக்குறை பறிமுதல் செய்த வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை: போக்குவரத்து நெரிசலால் அவதி

திருப்பூர்: கடந்த 2014ம் ஆண்டு மாநகரமாக உருவாக்கப்பட்ட போது திருப்பூர் மாநகர காவல் உருவாக்கப்பட்டது. தற்காலிகமாக சிறுபூலுவப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் இடம் பற்றாக்குறை காரணமாக திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதியான திருப்பூர் குமார் நகர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் திருப்பூர் வடக்கு, தெற்கு, வீரபாண்டி, நல்லூர், மத்திய காவல் நிலையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மங்கலம் காவல் நிலையமும் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் இணைக்கப்பட்டு 9 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 மகளிர் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள் மாநகர காவல் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது.

மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இன்னும் சில காவல்நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படாததால் இட நெருக்கடியில் உள்ளது. இதில், திருப்பூரில் பழமையான தெற்கு காவல்நிலையம் கடும் இட நெருக்கடியில் இருந்து வருகிறது. திருப்பூர்-தாராபுரம் சாலை கோட்டை மாரியம்மன் கோயில் அருகே தெற்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விழாக்கள், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெற வருபவர்கள், ஜாமீனில் வந்தவர்கள் கையெழுத்திட, பல்வேறு பிரச்னைகளுக்கு புகார் அளிக்க என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கேற்றவாறு இட வசதி இல்லாமல் உள்ளது. காவலர்களுக்கே இட வசதி இல்லாதால் காவல் நிலைய வளாகத்தின் வெளிபுறத்தில் மேற்கூரை அமைத்து காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் குறை மற்றும் புகார்களை கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தின் வெளியே போக்குவரத்து சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. எந்த வித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. முழுவதுமாக இவை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறும் முன்பு இவற்றை பாதுகாப்பான வேறு இடத்தில் மாற்றி நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் வாகனங்கள், காவலர்களின் இருசக்கர வாகனம் முதல் ஜீப் வரை காவல்நிலையத்திற்கு வெளியே தாராபுரம் சாலையில் நிறுத்தப்படுவதால் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தெற்கு காவல் நிலையத்தை கடந்து செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகிறது. இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், ‘‘நாளுக்கு நாள் காவல்நிலையத்தில் இடம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கான மாற்று இடம் உயர் அலுவலர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. விரைவில் இங்கிருந்து காவல்நிலையில் மாற்று இடத்தில் செயல்படும்’’ என்றார்.

The post காவல் நிலையத்தில் இட பற்றாக்குறை பறிமுதல் செய்த வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை: போக்குவரத்து நெரிசலால் அவதி appeared first on Dinakaran.

Related Stories: