கடந்த 5 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

தாம்பரம்: கடந்த 5 மாதமாக நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ரூ.2,800 கோடியை தராமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்துடன் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் நடந்தது. தாம்பரம் மாநகர செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ராஜா தலைமை வகித்தார். செம்பாக்கம் தெற்கு பகுதி செயலாளர் ரா.சுரேஷ் வரவேற்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், தலைமை கழக பேச்சாளர் கவிஞர் நன்மாறன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பத்மபிரியா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தொகுதி மறுவரையறை செய்ய முயன்றனர்.

இதற்கு திமுக மற்றும் தென் மாநிலத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிபோடப்பட்டது. இப்போது தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டால் தொடர்ந்து சர்வாதிகார ஆட்சி நடத்தலாம் என கருதி தொகுதி வரையறை செய்ய ஒன்றிய பாஜ அரசு முடிவெடித்துள்ளது.

1966ல் ஒன்றிய அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டுவந்தது. அதை தீவிரமாக கடைபிடித்ததால் கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் வடநாட்டில் குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் போனதால் மக்கள்தொகை அதிகரித்துவிட்டது. அதன் காரணமாக, வடமாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வரும். அதன்படி உத்தரபிரதேசத்தில் இப்போது 80 தொகுதிகள் உள்ளது.

மறுசீரமைப்பில் 91 தொகுதிகளாக உயர போகிறது. பீகாரில் 40 தொகுதிகள் இப்போது உள்ள நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் 50 தொகுதிகளாக உயர உள்ளது. ராஜஸ்தானில் இப்போது 25 தொகுதிகள் உள்ள நிலையில் 31 தொகுதிகளாக உயர உள்ளது. மத்திய பிரதேசத்தில் இப்போது 29 தொகுதிகள் மறுசீரமைப்பில் 39 தொகுதிகளாக உயர போகிறது. இந்த 4 மாநிலங்களிலேயே 31 தொகுதிகள் உயர போகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறைய உள்ளது. கேரளாவில் 20 தொகுதிகள் 13 தொகுதிகளாக குறைய உள்ளது. கர்நாடகாவில் 28 தொகுதிகள் 26 தொகுதிகளாக குறைய உள்ளது. ஆந்திரா, தெலங்கானா 42 தொகுதிகளில் 34 தொகுதிகளாக குறைய உள்ளது. தென்மாநிலங்களில் மட்டும் 25 தொகுதிகள் குறைய உள்ளது. இதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் இந்திய அளவிலான தலைவர்களை அழைத்து கூட்டம் போட இருக்கிறார். மோடி அரசு மிகப்பெரிய சதி திட்டத்தை தீட்டி வரும் காலங்களில் ஒரு சர்வாதிகார ஆட்சியாக நம்மை தவிர இந்த நாட்டில் யாரும் வெற்றிபெற கூடாது என்று கருதி அதற்கான வியூகத்தை செய்துவருகிறது.

அண்ணா கொண்டுவந்த இருமொழி திட்டத்தை விடுத்து மும்மொழி திட்டத்தை கொண்டு வந்தால்தான் கல்விக்காண நிதியை தருவேன் என்று ஒன்றிய அரசு கூறுவது என்ன நியாயம். திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஆறரை லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தி உள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு திரும்ப வழங்கியது 58 ஆயிரம் கோடி தான். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி சுமார் ரூ.2800 கோடியை கடந்த 5 மாதங்களாக வழங்காமல் ஏழை மக்களை வஞ்சிக்கும் ஆட்சி தான் ஒன்றிய பாஜ ஆட்சி. திமுகவை பொறுத்தவரை மொழி கொள்கைக்காக இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே.

தமிழ்மொழியை காக்க பலபேர் உயர் தியாகம் செய்த ஒரே இயக்கம் திமுக மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டு இறுதியாக பொதுமக்களுக்கு மக்களவை தொகுதி மறுவரைறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தலைமை தீர்மானக் குழு செயலாளர் மீ.அ.வைதியலிங்கம், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், பகுதி செயலாளர் மாடம்பாக்கம் ஆ.நட்ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post கடந்த 5 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: