பாஜவுடன் கூட்டணி சேர தவம் கிடப்பதாக அதிமுகவை நான் குறிப்பிடவில்லை: அண்ணாமலை திடீர் பல்டி

கோவை: ‘பாஜவுடன் கூட்டணி சேர தவம் கிடப்பதாக அதிமுகவை நான் குறிப்பிடவில்லை’ என அண்ணாமலை திடீர் பல்டி அடித்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி அண்ணன் என்ன சொன்னார்? மீடியாகாரர்களுக்கு நைட் டிபேட் ஓடணும். வேலை இல்லாத 4 பேரை கூப்பிட்டு டிபேட் நடத்தணும். அண்ணாமலை இது சொன்னார், எடப்பாடி அண்ணன் அது சொன்னார் என்றார்.

எடப்பாடி அண்ணன் தெளிவாக சொல்லியிருக்கிறார். நானும் தெளிவாக சொன்னேன். பாஜ உடன் கூட்டணி சேர தவம் கிடப்பதாக அதிமுகவை நான் குறிப்பிடவில்லை. உங்க நியூஸ் சேனல் ஓட்ட நானும், எடப்பாடி அண்ணனும் தான் கிடைத்தோமா? அரசியல் விமர்சகர் என 2 பேரை எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என டிபேட்டில் அமரவைத்து, நான் சொன்னதையும், எடப்பாடி அண்ணன் சொன்னதையும் திரித்து திரித்து பேச வைக்கிறார்கள்.

நான் அதிமுகவை குறிப்பிடவில்லை. பாஜ நிலையை பற்றி நான் குறிப்பிட்டேன். அதிமுக நிலையை பற்றி அண்ணன் எடப்பாடி பேசுகிறார். நான் டிபேட்களை பார்ப்பதில்லை. நீங்க நல்லவங்க ராஜா. நீங்க டிபேட்டில் உட்காருவதில்லை. உங்களுக்கு கிரவுண்ட் லெவல் தெரியும். அரசியல் விமர்சகர் என டிபேட்டில் உட்காருபவர்களுக்கு என்ன தெரியும்? அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பாஜவை திட்டுவதை வேலையாக வைத்திருக்கிறார்கள். யார் அவர்கள் எல்லாம்?.

அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுகிறார்களா? எந்த மாதிரி கூட்டணி வர வேண்டும் என அரசியல் விமர்சகரே முடிவு செய்கிறார். அதற்கு எப்படி நானோ, எடப்பாடி அண்ணனோ பேச முடியும்? அரசியல் விமர்சகர்கள் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு ஒரு காலம் எழுதுகிறார்கள். அதைதவிர அவர்களுக்கு வேறு என்ன தெரியும்? நான் சொல்கிறேன் என தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இதுதான் உண்மைங்க அண்ணா. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோற்றது என்று எடப்பாடி பழனிசாமி உட்பட அக்கட்சி மூத்த தலைவர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். அதை வைத்துதான் அதிமுக என்று வெளிப்படையாக சொல்லாமல் பாஜவால் தோற்றோம் என்று சொன்னவர்கள் இப்போது பாஜவுடன் கூட்டணி சேர தவம் கிடக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நான் அதிமுகவை குறிப்பிடவில்லை என அண்ணாமலை பல்டி அடித்து உள்ளார். அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் மலருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இரு கட்சி தலைவர்களும் விமர்சிப்பதை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘பாஜ – அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்தில் முடிவு’
பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ் பிரதான மொழியாக உள்ள நிலையில் அம்மொழியை ஒன்றிய அரசு அழிக்க நினைப்பது போல ஒரு மாய தோற்றத்தை கொண்டு வருகின்றனர். தமிழை வளர்க்கும் பணியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய அரசு இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவது மொழி கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். நாடாளுமன்ற தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது.

இவ்வாறு கூறினார். ‘‘அதிமுக எந்த ஒரு கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் இருக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே’’ என கேட்டதற்கு, ‘‘பாஜ – அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் ஊடகத்தினர் கேட்க வேண்டாம். 6 மாதத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் பாஜ கால் பதித்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் சேர்ந்து கால் பதிக்கும் என்பதை தலைமை முடிவு செய்யும்’’ என்றார்.

The post பாஜவுடன் கூட்டணி சேர தவம் கிடப்பதாக அதிமுகவை நான் குறிப்பிடவில்லை: அண்ணாமலை திடீர் பல்டி appeared first on Dinakaran.

Related Stories: