மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்டும் மலை தேனீக்கள்

திருவட்டார் : மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அடியில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. அவை பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப்பாலம். திருவட்டார் அருகே 1966ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.

அருவிக்கரை ஊராட்சி பகுதியையும் வேர்க்கிளம்பி பகுதியையும் இணைக்கும் வகையில் தொட்டிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் உள்ள வடிகால் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பாசன வசதி அளிக்கப்படுகிறது. இதனால் ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என்று அழைக்கப்படுகிறது.

மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொட்டிப்பாலத்தின் மேல் பகுதியில் நடந்து செல்வது திகில் அனுபவமாகும்.

இந்நிலையில் அருவிக்கரை ஊராட்சி சார்பில் அடிக்கடி இந்த தொட்டிப் பாலத்தின் குறைகளை நிவர்த்தி செய்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் இல்லாததால் தொட்டிப்பாலமும் கவனிப்பாரின்றி காணப்படுகிறது. கடந்த மாதத்தில் நுழைவு வாயில் அருகே இருந்த காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டிப் பாலத்தின் அடிப்பகுதியில் மலைத்தேனீக்கள் கூடு அமைத்துள்ளன.

இந்த தேனீக்கள் பாலத்தின் மேல் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மலைத்தேனீ அளவில் பெரியதாக இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் பயந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது‌.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தொட்டிப்பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்லும் போது ஆங்காங்கே கசிவு ஏற்பட்டுள்ளது.அதையும் சீரமைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்டும் மலை தேனீக்கள் appeared first on Dinakaran.

Related Stories: