கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (3.3.2025) கொளத்தூர் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஜமாலியா 130 புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகள் குறித்தும், கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ராஜா தோட்டம் 162 புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகள் குறித்தும், கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் நவீன சந்தையின் முன்னேற்றப் பணிகள் குறித்தும் மற்றும் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் “மக்கள் சேவை மையத்தின் (Citizen Service Centre)” முன்னேற்றப் பணிகள் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வருகின்ற பல்வேறு கட்டிடப் பணிகள் தரமாகவும் அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன். வடசென்னை மக்களின் கனவு கனவாக இல்லாமல் அது நினைவாகும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அங்கீகரிக்கப்படாத வி.ஏ.ஓக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏதாவது ஆவணங்களை வைத்துக்கொண்டு நீதிமன்றங்கள் சென்று விடுகிறார்கள். இந்த “மக்கள் சேவை மையத்தின்” இடம் 3 நீதிமன்றங்களை கடந்து 3 நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு சட்டத்தின் ஆட்சி என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிலைநாட்டி நிறைவேற்றிய பிறகு இப்பொழுது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஒரு சில சமூக விரோதிகளால் இந்த இடம் ஆக்கிரமிப்புக்கு இருந்ததை தடுத்து, இந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்குண்டான நல்ல காரியங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். ஆகவேதான் காலதாமதத்திற்கு காரணம். இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது மேயர் திருமதி.ஆர்.பிரியா ராஜன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், கொளத்தூர் காவல் ஆணையாளர் திரு.இரா.பாண்டியராஜன் அவர்கள், சி.எம்.டி.ஏ, தலைமை திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, துணை பதிவுத்துறை தலைவர் (சென்னை) திரு.சுவாமிநாதன், வடசென்னை மாவட்ட பதிவாளர் திருமதி.சீதாலட்சுமி, மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் திருமதி.சரிதா மகேஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர் திரு.பாலமுருகன், சென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு.ரங்கராஜன், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் திரு.கிருஷ்ணசாமி, கண்காணிப்புப் பொறியாளர் திரு.இளம்பரிதி, மாநகராட்சி மண்டல அலுவலர் திரு.ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர் திரு.செந்தில்நாதன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரு.ஐசிஎப்.முரளிதரன், திரு.சந்துரு, திரு.மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திரு.நாகராஜன், திருமதி.தாவுத்பீ, திருமதி.யோகபிரியா, திருமதி.அமுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!! appeared first on Dinakaran.

Related Stories: