பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு

சென்னை: தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், பணிபுரிந்த காலத்தில் காலமான பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை 4 பேருக்கு அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: ஆவின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. துணை பதிவாளர் மற்றும் ஆவின் பொது மேலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பால் கொள்முதலை அதிகரிக்கவும், ஒன்றியங்களில் தற்போதுள்ள தினசரி பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை ரூ.1.50 கோடியாக உயர்த்த வேண்டும்.

கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி ஆகிய பால் உபபொருட்களின் விற்பனையை உயர்த்தவும், நெய் விற்பனையை அதிகரிக்கவும் ஒன்றியங்கள் லாபத்தில் செயல்படவும் பொது மேலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், செயலாளர் சுப்பையன், இயக்குநர் அண்ணாதுரை, இணை நிர்வாக இயக்குநர் பொற்கொடி, காவல்துறை இயக்குநர் மற்றும் முதன்மை விழிப்புக்குழு அதிகாரி ராஜீவ் குமார், பொது மேலாளர் (நிர்வாகம்) மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: