ஆரணி: ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆற்காடு பாலாறு, ஆரணி டவுன் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி ஆறு, தச்சூர் செய்யாற்றில் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆரணி நகராட்சிக்கு கொண்டுவரப்படும். குடிநீர் மேல்நீர் தேக்க தொட்டியில் சேகரித்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆரணி கமண்டலநாகநதி ஆற்றின் குறுக்கே பழைய ஆற்காடு-விழுப்புரம் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், மேம்பாலம் அமைக்கும் அருகில் உள்ள இடத்தில் ஆற்றில் தண்ணீர் வடிய வைக்கும்போது, மண்அரிப்பு ஏற்பட்டு ஆற்காடு பகுதியில் இருந்து ஆரணி நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரும் குடிநீர் பைப் லைன் நேற்று உடைந்து தண்ணீர் வெளியேறியது.
உடனே, தகவல் அறிந்து வந்த நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி நகராட்சி அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று, பார்வையிட்டு, உடைந்த பைப் லைனை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பைப் லைன் உடைப்பால் நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பைப் லைன் சரிசெய்யும் வரை நகராட்சி டேங்கர் லாரிகள் மூலம் வார்டுகளுக்கு குடிநீர் எடுத்து சென்று, வீடுவிடாக குடிநீர் வினியோகம் செய்யவும், வார்டுகளில் உள்ள மினி டேங்க் மற்றும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை உடனடியாக சரிசெய்து, தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கவும் அதிகாரிகளுக்கு நகரமன்ற தலைவர் அறிவுறுத்தினார்.
அப்போது, பொறியாளர் பழனி, பணி மேற்பார்வையாளர் மதிவாணன், குழாய் பொருத்துனர் ஜெகன் மற்றும் ஜெகதீசன், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.
3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ஆரணி நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதனால், நேற்று மேம்பாலம் பணிகளுக்கு ஆற்றில் தண்ணீர் வடித்து வெளியேற்றும்போது, திடீரென ஆற்காடு முப்பது வெட்டி பகுதியில் இருந்து ஆரணி நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரும் பைப் லைன் கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே பழுப்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆரணி நகராட்சியில் உள்ள வார்டுகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
The post ஆற்காட்டில் இருந்து ஆரணி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் பைப் லைன் சேதம் appeared first on Dinakaran.
