ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஜனாதிபதி பெயரில் நூதன மோசடி: உஷாரான பதிவர் போலீசிடம் புகார்

ராஞ்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு பெயரில் போலி பக்கங்களை உருவாக்கி நூதன மோசடிக்கு முயன்ற நிலையில், பதிவானர் உஷாரானதால் இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். போலி சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள், உயர் அதிகாரிகளின் பெயரில் ஆள்மாறாட்ட மோசடி செய்யும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பெயரில் போலி சமூக ஊடக கணக்கு ஒன்றை உருவாக்கி உள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் வசிக்கும் பேஸ்புக் பயனர் மாண்டு சோனி என்பவருக்கு ஒரு மெசேஜ் ஒன்று, ஜனாதிபதியின் பெயரில் தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் இருந்து வந்தது.

அதில், ‘ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பேஸ்புக் பக்கங்களை நான் அதிகம் பயன்படுத்துவதில்லை. உங்களது வாட்ஸ்அப் எண்ணை எனக்கு அனுப்புங்கள்’ என்று கூறினார். அப்போது மாண்டு சோனி தனது வாட்ஸ்அப் எண்ணை வழங்கினார். அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பேஸ்புக் மெசஞ்சரில் மற்றொரு செய்தி வந்தது. அதில், ‘நாங்கள் உங்களது எண்ணை சேமித்து வைத்துள்ளோம்; எங்களது வாட்ஸ்அப் குறியீட்டை உங்களுக்கு அனுப்பியுள்ளோம். அது உங்களது வாட்ஸ்அப்பிற்கு சென்றுவிட்டது. தயவுசெய்து 6 இலக்கம் கொண்ட அந்த குறியீடு எண்ணை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்’ என்று கோரப்பட்டது.

அதிர்ச்சியடைந்த மாண்டு சோனி, இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தார். அதையடுத்து தனது ‘எக்ஸ்’ பக்கத்துக்குச் சென்ற மாண்டு சோனி, மேற்கண்ட விபரங்களை தனிப்பதிவாக குடியரசுத் தலைவர் மாளிகை, ஜார்க்கண்ட் காவல்துறை உள்ளிட்டோருக்கு பதிவிட்டார். இந்த பதிவை கண்காணித்த ராஞ்சி போலீசார், உடனடியாக பேஸ்புக் பதிவின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ராஞ்சி எஸ்எஸ்பி சந்தன் சின்ஹா கூறுகையில், ‘இந்த வழக்கின் அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து வருகிறோம். தொடர் விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

The post ஜெய் ஹிந்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஜனாதிபதி பெயரில் நூதன மோசடி: உஷாரான பதிவர் போலீசிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: