மசூதி தொடர்பான வழக்குகள் புதிய மனுக்களை விசாரிக்க கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை

புதுடெல்லி: கடந்த 1991ல் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தொடரப்பட்ட ஆறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,இதுகுறித்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் தொடர்பான அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறுவதற்குள் வேறு எந்த ஒரு புதிய மனுக்களையும் தாக்கல் செய்ய அனுமதி கிடையாது. குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அடுத்த நான்கு வாரத்தில் அவர்களது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து மனுதாரர்களும் அடுத்த நான்கு வாரத்தில் விளக்க மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் விளக்கங்கள் அனைத்தும் தனியாக ஒரு போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் ஏராளமான விஷயங்கள் எழுப்பப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் நாங்கள் விரிவான முறையில் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர்களின் ஒரு தரப்பு வழக்கறிஞர்கள்,‘‘இதில் பத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் ஆய்வுகள் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி,‘‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதியதாக மனுக்கள் தாக்கல் செய்யக் கூடாது. ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பின், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் அதன் மீது எந்த உத்தரவுகளையும் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பிக்கக் கூடாது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் ஆய்வுகள் நடத்த உத்தரவிடுவது போன்ற உத்தரவுகளையும் பிறப்பிக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வாரணாசி ஞானவாபி மசூதி மதுரா, ஷாகித் ஈத்கா, மசூதி ராஜஸ்தான் அஜ்மீர் மசூதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மசூதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் மேற்கொண்டு எந்தவொரு விசாரணையையும் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* திமுக இடையீட்டு மனு
வழிபாட்டு தலங்கள் சிறப்பு விதிகள் சட்டம் 1991ஐ எதிர்த்து தொடரப்பட்ட பிரதான வழக்கில், திமுக தரப்பில் இடைக்கால மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து நேற்றைய விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,‘‘சட்டத்தின் விதிமீறல்களை சவால் செய்யும் விவகாரத்தில் எங்களது தரப்பில் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். மேலும் இதே விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் தரப்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post மசூதி தொடர்பான வழக்குகள் புதிய மனுக்களை விசாரிக்க கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை appeared first on Dinakaran.

Related Stories: